உண்மையான பன்முகக் கலைஞன் ‘பூ’ ராமு!

எத்தனை வயதானாலும் மனதளவில் இளமையாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளராக, சமூகநல களப் பணியாளராக, வீதி நாடகச் செயற்பாட்டாளராக, சினிமா நடிகராக, பாடகராக, எழுத்தாளராக, கவிஞராகப் பல முகங்கள் கொண்ட ‘பூ’ ராமுவும் அவர்களில் ஒருவர்.

இயக்குனர் சசியின் ‘பூ’ திரைப்படம் எப்படி ஸ்ரீகாந்தையும் பார்வதியையும் கிராமிய மணத்துடன் காட்டியதோ, அதே போல மிகயதார்த்தமான நடிகராக ராமுவை மக்களிடம் அடையாளப்படுத்தியது.

அவர் ஏற்று நடித்த பேனாக்காரர் பாத்திரம் அதுவரையிலான தமிழ் திரைப்பட பாவனைகளில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தது.

‘தங்க மீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சூரரைப் போற்று’, ‘கர்ணன்’ உட்பட பல படங்களில் அவரது நடிப்பு மிளிர்ந்திருக்கிறது, ரசிகர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

 அவற்றை மீறி, சக மனிதராகவும் பெரிதும் கொண்டாடப்படுவதை வெளிக்காட்டுகின்றன அவரது மறைவையொட்டி சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிற நினைவுகள்.

உண்மையான பன்முகம்!

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு இணையதள பத்திரிகைக்காக ‘பூ’ ராமுவைப் பேட்டி காணச் சென்றோம். ஊரப்பாக்கத்தில் உள்ளடங்கியிருக்கும் அவரது வீட்டை அடையாளம் காண நான்கைந்து முறை ‘போன்’ செய்ய வேண்டியிருந்தது.

ஒவ்வொரு முறையும் தன் வீட்டை வந்தடைவதற்கு என்னென்ன வழிகளைச் சொல்ல முடியுமோ அத்தனையையும் பொறுமையாகச் சொன்னார்.

எங்களைக் கண்டவுடன் ‘வர ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ’ என்றவாறே பேச ஆரம்பித்தார்.

வீடியோ பதிவு செய்ய ஒளிப்பதிவாளர் ஏற்பாடு செய்யும் இடைவெளியில், தொடர்ந்து பல தகவல்களைப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசப் பேச, சில நிமிடங்களில் அவரது அனுபவங்களைப் பதிவு செய்வது சாத்தியமில்லாதது என்று தோன்றியது.

பழைய ஆல்பத்தை எடுத்தார் என்றால், ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னும் பல நிகழ்வுகளை அடுக்கினார்.

‘உங்களால மறக்க முடியாத அனுபவம்’, ‘தமிழ் திரைப்பட உலகில் நீங்கள் எதிர்பார்த்த இடத்தை அடைந்ததாக நினைக்கிறீர்களா’, ‘உங்களது முன்னத்தி ஏர்களில் பிடித்தமானவர் யார்’ என்றெல்லாம் அவரிடம் கேள்விகள் கேட்டுவிட முடியாத என்று புரிந்துபோனது.

அதுவரை வெறுமனே நாடக கலைஞராக, திரைப்பட நடிகராக மட்டுமே அறிந்ததற்கு மாறாக வாழ்வின் சித்திரங்கள் பற்றி பலவற்றைப் பேசினார்.

உண்மையில், அவரை ‘பூ’ ராமு என்று அழைப்பது கூட அபத்தமான ஒன்றுதான். ஏனென்றால், அதற்கு முன்பாகவே த.மு.எ.ச. சார்பாகவும், வீதி நாடகச் செயல்பாடு மூலமாகவும் மக்களிடம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்.

தமிழ்நாடு முழுக்கப் பரவலாக அவரை அறியச் செய்தது என்று ‘பூ’ படத்தைக் குறிப்பிடலாம். அதற்கும் முன்பாக, ‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனோடு சக வீதி நாடக கலைஞராக வந்து போயிருப்பார். அப்படத்தில் கமல் ஏற்று நடித்த நாடக கலைஞர் பாத்திரமே தனது வாழ்க்கை அனுபவம்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையெல்லாம் விட, சைதாப்பேட்டையைச் சுற்றிய தனது பால்ய நினைவுகளைப் பகிர்ந்தபோது ‘உண்மையான சென்னை மைந்தன்’ என்ற எண்ணமே தோன்றியது.

அந்த கணத்தில், சைதாப்பேட்டையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓரிடத்தில் அவர் வசிப்பதும் நினைவுக்கு வந்தது. ஆனால், எது குறித்தும் குறை சொல்லாமல் ஒரு நதி தான் பயணித்த தடத்தை திரும்பிப் பார்ப்பது போல தன்னைக் குறித்துச் சொல்லிக்கொண்டே வந்தார்.

வீதி நாடகங்களில் கூட வெறுமனே நடிப்பது மட்டுமல்லாமல், தான் பார்த்த இதர வேலைகளையும் குறிப்பிட்டார். பொதுவுடைமைச் சிந்தனைகள் ஆட்கொள்வதற்கு முன்னால் தான் ஆற்றிய பல பணிகளைப் பற்றிப் பேசினார்.

வாழ்நாள் முழுக்க ஒருவர் வெவ்வேறு பணிகளைச் செய்து வருவது எப்போதும் ஆச்சர்யம் தரும் விஷயம். அந்த பேட்டி முடிந்ததும், இவரிடம் விலாவாரியாகப் பேச வேண்டுமென்று தோன்றியது. அதனைச் செயல்படுத்தவே முடியாது போனது வருத்தத்திற்குரிய விஷயம்.

முகத்திலறையும் நடிப்பு!

‘பூ’ படத்தில் மகனிடம் கண்டிப்பு காட்டும் தந்தையாக வருவார். தனது எண்ணம் தவறி மகன் கஷ்டப்படுவதை உணரும் காட்சி, நம்மை கண் கலங்கச் செய்யும். ‘சூரரைப் போற்று’, ‘கர்ணன்’ படங்களிலும் கூட நாயகனுக்கு தந்தை வேடம் தான். ஆனாலும், இரண்டிலும் அவ்வளவு வித்தியாசம் இருக்கும்.

‘கர்ணன்’ படத்தில் பெரிதாக குடும்பத்திற்கு நல்லது செய்யாத ஒரு தந்தையின் பாத்திரம். ஆனால், வெறியாடல் பழக்கத்தின் வழியாக இறந்துபோன மகளின் ஆத்மாவாக மாறிப் பேசும் காட்சியில் அசத்தியிருப்பார்.

அதுவரை ஒரு ஒடுக்கப்பட்டவனாக ஒதுங்கிச் சென்றுவிட வேண்டுமென்று சொல்லியதற்கு மாறாக, மகனின் கையில் ஆயுதத்தைத் திணிப்பார். இக்காட்சியில் வழக்கமான சினிமாத்தனம் எட்டிப் பார்க்காமல் இருந்ததற்கு ஒரே காரணம் ராமு மட்டுமே.

இவ்வளவு ஏன், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சட்டக்கல்லூரி முதல்வராக இடம்பெற்றிருப்பார்.

நாயகனுக்கும் இன்னொரு தரப்புக்கும் மோதல் வரக்கூடுமென்று ஒரு பேராசிரியை வருத்தப்படும்போது ‘அடிச்சுக்கிட்டுதான் சாகட்டுமே, நாலு சுவத்துக்குள்ள நாண்டுகிட்டு சாகறதுக்கு அது எவ்வளவோ மேல்’ என்று வசனம் பேசியிருப்பார்.

அவர் பேசிய ஐந்தாறு வார்த்தைகளில் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமூலா பட்ட அவமானங்கள் வெறும் வார்த்தைகளாக அல்லாமல் ஒரு உணர்வாக நம் மீது படியும்.

‘திங்கற பன்னி மாதிரி என்னை  அடிச்சு அடிச்சு ஓட ஓட விரட்டினாங்க. நான் ஓடியா ஒளிஞ்சு போயிட்டேன். எது அவசியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்.

அன்னிக்கு என்னை அடக்கணும்னு நினைச்சவன் எல்லாம் இன்னிக்கு ‘ஐயா சாமி..’னு கும்பிடுறான். என்னை மாதிரி நீயும் ஜெயிச்சு வரணும்னு விரும்பணும்.

இதை மனசுல வச்சுகிட்டு, உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்’ என்று அதற்கு முன்பாக நாயகனிடம் பேசியிருப்பார்.

இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து வந்தாலும், அந்த வார்த்தைகளில் முரண்பாடு தோன்றாது.

காரணம், மிக யதார்த்தமாக சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து மேல்நோக்கி இடம்பெயர்ந்த ஒரு மனிதனின் வலியை, ஆத்திரத்தை சக மனிதனுக்கு புத்தி சொல்வது போல வெளிப்படுத்தியிருப்பார். அதோடு, ஒருவரது வாழ்வில் கல்வியே உயர்வு தரும் என்று உணர்த்தியிருப்பார்.

‘வீரம்’, ‘ஜில்லா’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் கூட, நமக்கு இது போன்ற சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. காரணம், அப்பாத்திரங்கள் எல்லாமே ராமுவிற்காக எழுதப்பட்டது போலிருந்தன.

அதிக திரைப்படங்களில் அவர் நடிக்காமல் போனது திரைப்பட ரசிகர்களின் இழப்பு மட்டுமே. அதே நேரத்தில், அவர் பல தளங்களில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளில் தனக்கென்று தனி அபிப்ராயத்தையும் கொண்டிருந்தார்.

வாழ்வின் நீள அகலங்களையும் மேல் கீழ்ப்புறங்களையும் தன்னளவில் முழுமையாக உணர்ந்தவர். அவரை ஒருமுறை பார்த்து உரையாடினால் போதும்.

இதனைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு, சந்திக்கும் எவரிடத்திலும் தன்னைக் குறித்த தகவல்களை ஒளிவுமறைவில்லாமல் நாகரிகத்துடன் வெளிப்படுத்தும் குணமுடையவர்.

நல்ல தோழன்!

‘தோழர்’ என்றழைத்தபோது ‘தோழா’ என்றழைக்கச் சொன்னதாக, ஒரு கருத்தைப் பகிர்ந்திருந்தார் நடிகர் காளி வெங்கட். இது போல, அவரைப் பார்த்த பழகிய பல பேரின் எண்ணங்களை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

ராமு ஹோமியோபதி மருத்துவ ஆர்வலராகவும், தடுப்பூசிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார் என்ற தகவலை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்திருக்கிறார்.

ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலைஞன் மிக எளிய வாழ்க்கையை கைக்கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

கலை மக்களைப் பிரதிபலிக்க வேண்டுமென்பதை உணர்ந்ததற்குச் சான்றாக, அவர்களில் ஒருவராக ராமு வாழ்ந்தார் என்றே தோன்றுகிறது.

இதுவே, அவரது வாழ்வின் ஆகப்பெரிய சாதனை.. போய் வாருங்கள் ராமு, திரையிலும் நேரிலுமாக நீங்கள் காட்சி தந்த தருணங்கள் உங்களை அறிந்த ஒவ்வொருவரிடமும் நிலை கொண்டிருக்கும்..!

-உதய்.பா

You might also like