மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள்!

– ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்ச்சியினை இன்று துவங்கி வைக்க உள்ளார்.

இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளைத் திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் போன்றவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எச்.சி.எல் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் வரும் 29, 30, 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like