– சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழக வனப் பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக, இணையதளத்தில் வெளியான காட்சி அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
மலைப் பிரதேசங்களில் மது பாட்டில்களை வீசிச் செல்வதால், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக, வேதனை தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்க அறிவுறுத்தினர்.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, பின் காலி பாட்டில்களை ஒப்படைத்து, கூடுதல் ரூபாயை திரும்ப பெறும் திட்டத்தை, மே 15 முதல் சோதனை முறையில் அமல்படுத்துவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை, டாப் ஸ்லிப் போன்ற மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்கா, சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஜூன் 15 முதல் அமல்படுத்த, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி பாரதிதாசன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தது.
‘காலி மது பாட்டில் வாபஸ் திட்டத்தை தமிழகம் முழுதும் ஏன் அமல்படுத்தக் கூடாது?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் மது பாட்டில் விற்கப்பட்டதில், 18.50 லட்சம் காலி பாட்டில் திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
‘ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு பாட்டில்கள் திரும்ப பெற்ற நிலையில், தமிழகம் முழுதும் இந்த திட்டத்தை ஏன் அமல்படுத்தக் கூடாது?’ என, மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, ”மாநிலம் முழுதும் இதை அமல்படுத்துவது குறித்து, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறோம்,” என்றனர்.
அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வகுக்கும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர். விசாரணையை, ஜூலை 15க்கு தள்ளி வைத்தனர்.