மாதக் கடைசியில் படங்கள் வெளியாவது சாபக்கேடு!

‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்.. இருபத்தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.. திண்டாட்டம்..’ என்று ‘முதல் தேதி’ படத்தில் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

கே.டி.சந்தானம் என்பவர் எழுதிய இப்பாடல் வரிகள் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் நிரம்பப் பொருந்தும். ஏனென்றால், திரையரங்குகளுக்கு கூட்டம் வருவதும் ஒருவரது பாக்கெட்டில் கனக்கும் சம்பளப் பணத்தைப் பொறுத்தே அமைகிறது.

பரம்பரை பணக்காரர்களும் வங்கி இருப்பின் நிறைவோடு நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தமது பணியைத் தொடர்பவர்களும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை விதிவிலக்குகள்.

இந்த உண்மை தெரிந்தும், ஒரு மாதத்தின் மூன்றாம், நான்காம் வார வெள்ளிக் கிழமைகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை அதிகமாயிருப்பது திரைப்பட ஆர்வலர்களைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

வெற்றிகள் சொல்லும்..!

கோவிட்-19 காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் திரையரங்குகளில் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் மொய்க்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், நோய் குறித்த பயம் மக்கள் மனதில் இருந்து முற்றிலுமாக நீங்கவில்லை.

இதனால், மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் ஒன்றுகூடினர். 2022 ஜனவரி முதல் இந்நிலைமையில் நல்ல மாற்றம் தென்படத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் புஷ்பா, இந்த ஆண்டில் கேஜிஎஃப்2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தமிழ் பதிப்புகளுக்கு ரசிகர்கள் அபார வரவேற்பைத் தந்தனர்.

அதே போன்றதொரு வரவேற்பை தமிழ்நாட்டிலும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் பெற்று வருகிறது ‘விக்ரம்’.

இது வரவேற்புக்குரிய விஷயம். ஆனால், இது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துமா என்றால் உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், பெரும்பாலான சிறு பட்ஜெட் திரைப்படங்கள், முதல் வரிசையைத் தாண்டிய நட்சத்திரங்கள், நடிகர்கள், நடிகைகள் பிரதான வேடத்தில் நடித்தவை மிகக்குறைவான பார்வையாளர்களையே சென்றடைகின்றன.

அப்படங்களுக்கான விளம்பரங்கள், முன்னோட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது மட்டுமே இதற்கான காரணமில்லை. இவற்றில் பல ஒரு மாதத்தின் மூன்றாம், நான்காம் வாரங்களில் வெளியாவது கவனிக்க வேண்டிய அம்சம்.

‘வலியது வாழும்’ என்ற அடிப்படையில் இத்திரைப்படங்களில் மிகச்சிறப்பான உள்ளடக்கம் இருந்தால் மட்டுமே அவை அதற்கடுத்த மாதத் தொடக்கத்தை எட்டிப் பிடிக்கின்றன. சந்தேகம் இருந்தால், கடந்த 2015 முதல் 2020 பிப்ரவரி வரையில் வெளியான திரைப்படங்களை உற்று நோக்கலாம்.

விதிவிலக்காகச் சில திரைப்படங்கள் தவிர மற்றனைத்துமே முதல் அல்லது இரண்டு வாரங்களில் வெளியாகியிருக்கும் அல்லது மாத இறுதியில் (27 முதல் 30, 31 தேதி வரையில்) வெளியாகியிருக்கும் அல்லது ஏதேனும் ஒரு பண்டிகையை முன்னிட்டு மூன்றாம், நான்காம் வாரங்களில் வெளியாகியிருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கு இவ்விதி சாலப் பொருந்தும்.

சமீபகால உதாரணங்கள்!

2022இல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் முன்னணியில் இருப்பது கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’. இப்படம் ஜுன் 3இல் வெளியானது. விஜய்யின் ‘பீஸ்ட்’ ஏப்ரல் 13 அன்றும், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10 அன்றும், விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28 அன்றும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ மே 13 அன்றும், விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ பிப்ரவரி 11 அன்றும் வெளியாகின.

விதிவிலக்காக, அஜித்தின் ‘வலிமை’ மட்டுமே பிப்ரவரி 24 அன்று வெளியாகி பரவலான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இவற்றோடு, சுமார் வெற்றியைச் சுவைத்த திரைப்படங்களையும் கணக்கில் கொண்டால் ‘ரிலீஸ் தேதி’ எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அறியலாம்.

‘மெரினா’ முதல் ‘ரஜினி முருகன்’ வரை சிவகார்த்திகேயன் முந்தைய படங்கள் அனைத்தும் இந்த இலக்கணத்தைப் பின்பற்றியே முதலிரண்டு வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகின. பலத்த வரவேற்பையும் பெற்றன.

ஆனால், அவரது ‘வேலைக்காரன்’, ’கனா’, ’மிஸ்டர் லோக்கல்’, ‘ஹீரோ’ ஆகியன மூன்றாம், நான்காம் வாரங்களில் வெளியானவை.

இவற்றின் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றி கொண்டாடப்படும் அளவுக்கு இல்லாததற்கு படத்தின் உள்ளடக்கத்தோடு வெளியீட்டுத் தேதியும் முக்கியக் காரணம் என்றே தோன்றுகிறது.

முதல் இரண்டு வாரங்களையும் பண்டிகை நாட்களையும் முன்னணி நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் கைக்கொள்வதால் நெடுநாட்களாக காத்திருப்பில் இருக்கும் சிறு பட்ஜெட் படங்கள் மூன்றாம், நான்காம் வாரங்களில் மட்டுமே வெளியாகும் கட்டாயத்திற்கு உள்ளாவது சாபக்கேடு.

ஜுன் 24ஆம் தேதி விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, அசோக் செல்வனின் ‘வேழம்’, சிபிராஜின் ‘மாயோன்’, சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் ‘பட்டாம்பூச்சி’ ஆகியன வெளியாகியிருக்கின்றன.

கடந்த சில மாதங்களில் இதேபோன்று அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ‘ஜகா’ வாங்கிய படங்களும் உண்டு. ஆனால், மறு தேதியிலும் கூட அவற்றுக்கு முதல் இரண்டு வாரங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

ஏன் இந்த அநீதி?

கோவிட்-19 காரணமாக, கடந்த ஜனவரியில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். அப்போது ’வலிமை’ ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘கார்பன்’, ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘நாய் சேகர்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகியன அவசர அவசரமாக வெளியாகின.

மாபெரும் வெற்றியைப் பெறாவிட்டாலும் இத்திரைப்படங்கள் கணிசமான அளவில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இவை மூன்றாம், நான்காம் வார வெள்ளிக் கிழமைகளில் வெளியாகியிருந்தால் இந்த வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே!

கடந்த மே முதல் வாரத்திலும் கூட ‘கூகுள் குட்டப்பா’, ‘விசித்திரன்’ உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸாகின. அந்த நேரத்தில் ‘கேஜிஎஃப் 2’ வரலாறு காணாத வகையில் ‘ஹவுஸ்ஃபுல்’லாக ஓடியதே பெரிய திரைப்படங்கள் வெளியாகாமல் தவிர்த்ததற்கான காரணம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியாவதோ, வசூலை அள்ளுவதோ விவாதத்திற்கு உரிய விஷயமல்ல. அவற்றோடு சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அவையும் கூட வரவேற்பைப் பெற வாய்ப்பிருக்கிறதே? அது ஏன் முற்றிலுமாக ஒதுக்கப்படுகிறது என்பதே கேள்வி.

என்னதான் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற வருத்தமிருந்தாலும், இன்னொரு படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ‘அதற்காவது போகலாமே’ என்று சில ரசிகர்கள், குடும்பத்தினர் நினைக்கலாம். அந்த ஆசைக்கு முட்டுக்கட்டை இட முனைவது அதீத பேராசை.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதில்லை; பண்டிகை காலங்களில் நட்சத்திரங்களின் படங்களோடு அதற்கடுத்த வரிசையிலுள்ள நடிகர் நடிகைகளின், புதுமுகங்களின் படங்கள் வெளியாகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் மோகன்லாலின் ‘ஒடியன்’ படத்தை தாண்டி சிறு பட்ஜெட் படமான ‘ஜோசப்’ பெருவெற்றியைப் பெற்றது வரலாறு.

தமிழ் திரையுலகமும் இவ்விதம் களமிறங்கினால், ஒரே நேரத்தில் அதிக படங்கள் ரிலீஸாகும் சாபக்கேடு குறையும்; அதோடு, சிறு பட்ஜெட் படங்கள் தரமானதாகவும் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களோடு கூடியதாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற வரவேற்பை ரசிகர்களிடம் பெறவும் வழி வகுக்கும்.

அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர் நடிகைகள் உட்பட அனைத்து தரப்பிலும் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது மட்டுமே இந்த அநீதிக்கு ஒரு முடிவு கிடைக்கும்!

-உதய் பாடகலிங்கம்

You might also like