இதுவரை அதிமுகவில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் வரவு, செலவுகளை சமர்பிப்பது வழக்கம். இது கட்சியின் விதிமுறையும் கூட.
ஆனால், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகளின்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வில்லை. இது வழக்கத்திற்கு மாறானது.
பொதுக்குழு கூடுவதற்கு முந்தைய நாள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனையின்படி தீர்மானங்கள் உருவாக்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி உருவாக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு எதுவும் நிறைவேற்றக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த 23 தீர்மானங்களும் முன்மொழியாமலேயே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்படியானால் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் எப்படி நிறைவேற்றினார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அதேபோல், தீர்மானம் நிறைவேற்றியதும் உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால், அப்படி அனைவரும் கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை.
எனவே இது அதிமுக பொதுக்குழுக் கூட்டமாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை துதிப்பாடும் கூட்டமாகத் தான் தெரிகிறது.
இப்படி ஒரு சூழலில் பொதுக்குழு தொடர்பான விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டால் கட்சிக்கு தான் சிக்கல். இதை அதிமுக தொண்டர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
இன்று நடைபெற்றது அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு என்று சொல்லப்பட்டாலும், அடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடிக்கு ஒற்றைத் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான முன்னோட்டமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இதனால் தொண்டர்கள்தான் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.