மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
– என்றார் வள்ளுவர்.

மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து இயக்கிக் கொண்டிருப்பது மனிதநேயம். மனிதம் இல்லா மனிதன் மனிதனே அல்ல. அவன் மனிதனாகவே கருதப்படமாட்டான். மாக்கள் என்ற வரிசையில் வைத்து எண்ணப்படுவான்.

விலங்குகள்கூட பல நேரங்களில் தம் இனத்துக்காகப் போராடி தங்களுக்கு மனிதநேயம் இருக்கிறது என மெய்பிக்கப் போராடும் காட்சிகளை நாம் கண்டிருக்கிறோம். அதுவும் இல்லாத மனிதர்களை என்னவென்பது?

மனித நேயம் என்றால் என்ன என்று கேட்டால் சக மனிதர்கள்மீது இரக்கம் காட்டுவது. அதாவது உயிர்கள்மீது கருணை காட்டுவது என்பது எல்லோரும் சொல்லும் செய்திதான்.

அந்தக் கருணையும் இரக்கமும் உள்ளதால்தான் அன்னை தெரசாவையும் அப்துல் கலாமையும் காந்தியடிகளையும் மனிதநேயம் மிக்க மாமனிதர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

விரல்விட்டு எண்ணும்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நேய மாந்தர்கள்
நடமாடிக் கொண்டிருப்பதால் மனிதம் தழைத்ததாகுமா?

எங்கோ இருப்பவர்களைக் கைகாட்டிவிட்டு இருக்கும் இடத்தில் மனிதத்தைத் தொலைத்துவிட்டு வெறுமனே மனிதன் என்ற போர்வையில் நடமாடிக்
கொண்டிருக்கிறோம்.

பிற உயிர்கள்மீது அன்பு இருந்தாலே போதும். இரக்கமும் கருணையும் இயல்பாக
கூடவே வந்து ஒட்டிக் கொள்ளும்.

எத்தனையோ வழிகளில் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்குச்செய்ய முடியும்.

ஆனால் அவற்றை எல்லாம் செய்தோமா, அப்படி உதவிச் செய்யவிடாமல் நம்மைத்
தடுத்தது எது?

காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
– என்றார் வள்ளுவர்.

விபத்தில் சிக்கிய மனிதனுக்கு ஓடிச்சென்று ஒருவாய்த் தண்ணீர் கொடுப்பதுகூட மனிதநேயம் கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றி வெறும் பார்வையாளர்களைத்தான் இப்போதெல்லாம் காண முடிகிறது. எதை எதையெல்லாமோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதாபிமானம் கூட கிடையாதா என்று அடுத்தவர்கள்மேல் குற்றம்சாட்டும் நாம் எத்தனைமுறை எத்தனை இடங்களில் எத்தனை உயிர்களிடம்… மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டோம்!

பொன்னையும் பொருளையும் மண்ணையும் தேடும் நாம் பல நேரங்களில் மனிதத்தைத் தொலைத்துவிட்டு தொலைத்தது எது என்றுகூடத் தெரியாமல் தேடலிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் அகம் சார்ந்த தேடல் நிகழும்போது புறம் சார்ந்த மனிதர்களை நினைக்க
மறந்துவிடுகிறோம். அகமும் புறமும் சார்ந்ததுதான் வாழ்க்கை.

நான்… எனது… என்பிள்ளை … என்குடும்பம் என்பதைத் தவிர வேறு எதுவும் சிலர்
கண்களுக்குத் தெரிவதே இல்லை. எல்லாம் சுயநலம் சார்ந்ததாக இருக்கும்போது
பொதுநலம் காணாமல் போய்விடுகிறது.

அதனால் தன்னுடைய பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவுகள் அனைவருமே அந்நியமாகத் தெரிகின்றனர்.

குடும்பங்களின் நிலை இப்படி என்றால் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டிய
மருத்துவமனைகளில்கூட மனித நேயம் மருந்துக்கும் கிடைக்காத நிலை உள்ளது.

ரோட்டோரம் உள்ள மரங்களின் கீழ் அமர்ந்து இளைப்பாறி இருப்போம். அந்த நிழலின் சுகத்தை நன்றாக அனுபவித்து மகிழ்ந்திருப்போம்.

சாலையோரம் மரங்களை நட்ட நல்ல உள்ளம் வாழ்க என வாயார வாழ்த்தி இருப்போம்.

பக்கத்து வீட்டுக்காரன் மர நிழல் மட்டும் நமது மதில்மீது விழுந்தால் பாய்ந்து சென்று
வெட்டி வீழ்த்திவிடுவோம். இவர்கள்தான் இன்றைய மனிதர்கள்.

பேரிடர் காலங்களில் ஓடி ஓடிச் சென்று உதவுகிறோம். இயற்கைச் சீற்றங்கள் நிகழும் நேரங்களில் மட்டும் தலைதூக்கும் மனிதநேயம் மற்ற நேரங்களில் எங்கே போய் ஒளிந்து கொண்டது எனத் தேடி அலையும் நிலையில் உள்ளோம்.

நான் படித்த ஒரு செய்தி இப்போது நினைவுக்கு வருகிறது.

சந்திரனில் முதன் முதலாக கால் வைத்ததும் என்ன நினைத்தீர்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கிடம் கேட்கப்பட்டதாம்.

அதற்கு ஆம்ஸ்ட்ராங், “எத்தனையோ லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால் பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதன் மனதில் இடம்பிடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன்” என்று மனித நேயம் இல்லா நிலையில் மனிதர்கள் வாழ்வதைச் சுட்டிக்காட்டி வருந்தினாராம்.

இதுதாங்க உண்மை.

எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள நினைக்கிற மனிதனுக்கு மனிதனை
மனிதனாகப் பார்க்கத் தெரியவில்லை.

ஊரைச் சுற்றி இருக்கும் அத்தனை நிலத்தையும் வாங்கிப் போட்டுவிட்ட பெரிய மனிதர்களுக்கு ஊருக்குள் இருக்கும் சாதாரண மனிதன் மனதில் இடம் பிடிக்கத் தெரியவில்லை. இதைத்தான் ஆம்ஸ்ட்ராங் ஆதங்கத்தோடு சொல்லி இருக்கிறார்.

மனிதர்கள் மனதில் இடம் பிடிப்பவன்தான் மனிதநேயம் மிக்க மனிதனாக இருப்பான்.

மனித நேய விதைகளை நாளைய தலைமுறையினரிடம் விதைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே மனிதநேயம் வாழும்.

வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடிய
வள்ளலார் பிறந்த பூமி இது.

மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனும்
முல்லைக் கொடி படர தன் தேரினையே தந்த
பாரியும் ஆண்ட பூமி இது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர் “என்று உலகுக்கே பாடம் சொன்ன தமிழ்ச் சான்றோர்களைத் தந்த நம் தாய்த்தமிழ் பூமி என்று சொல்லிச் சொல்லி பூரித்துப் போகிறோம்.

வான் நிலா தேயலாம்; வாழும் தேசத்தில் மனித நேயம் தேயலாமா?
வறட்சி வானிலையில் இருக்கலாம்; மனிதத்திற்கு வறட்சி ஏற்படலாமா?

மனிதனாய் இருப்போம்; மனிதனை நேசிப்போம்; மனிதத்தைப் போதிப்போம்.

நன்றி; முகநூல் பதிவு

You might also like