திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு பாத்திரம் முற்றிலும் நல்லவனாக இருக்க வேண்டும் அல்லது முழுக்க கெட்டவனாக இருக்க வேண்டும். இந்த ஹீரோ, வில்லன் வகைப்பாட்டுக்குள் அங்குமிங்கும் அலைபாயும் பாத்திரங்கள் குறைவு.
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை நல்லதும் கெட்டதும் கலந்த பாத்திரப் படைப்புகள் தொடர்ந்து பெருகி வருகின்றன.
வில்லன்களின் நல்ல குணங்களை காட்டுவதை விட, ஹீரோக்களின் மோசமான குணாதிசயங்களை முன்னிலைப்படுத்துவது ஒரு வழக்கமாக மாறிவிட்டது.
ஆனாலும் தமிழ் சினிமாவில் தந்தைகளைக் காட்டும் விதத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை, அரிதாக ஓரிரு படைப்புகள் தவிர..
தியாகத்தின் மறுஉருவம்!
கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்திலும் சரி, கேவா முதல் ஈஸ்ட்மெண்ட் கலர் காலகட்டத்திலும் சரி, தாயை முதன்மைப்படுத்திய கதைகளே மிகவும் அதிகம். ஒரு சில படங்களில் முதன்மைக் கதையோடு இணைந்து தந்தை பாசமும் காட்டப்படும்.
டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் உட்படப் பலர் எம்ஜிஆர், சிவாஜி தலைமுறை நாயகர்களுக்கும் அக்காலத்து நாயகிகளுக்கும் தந்தையாக நடித்திருக்கின்றனர்.
பெரும்பாலும் இவர்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஊர் பெரியமனிதர்களாகவோ, செல்வந்தர்களாகவோ, ஊர்த் தலைவர்களாகவோ இருக்கும். மிக மிக நல்லவராகவோ, ரொம்பவும் நயவஞ்சகக்காரராகவோ அப்பாத்திரங்கள் இருக்கும்.
கதையின் முடிவில் கெட்ட எண்ணங்களைக் கைவிட்டு நல்லவராக மனம் மாறுவார். ஆனாலும், குழந்தைகள் மீதான தந்தை பாசத்தை வெளிப்படுத்துவதில் தியாகத்தின் மறு உருவமாகவே காட்டப்படுவர்.
வில்லனாகவோ அல்லது வில்லன் கூட்டத்து அடியாளாகவோ இருக்கும் பட்சத்தில் மட்டும், அவர்கள் நாயகனிடமோ, நாயகியிடமோ தங்கள் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
ஆனாலும், இது அல்லது அது எனும் இரு துருவ சித்தரிப்பில் மாற்றம் இருக்காது.
ஒருவேளை நல்லவர்களாக அப்பாத்திரம் காட்டப்பட்டால், குழந்தைகளுக்காகத் தன்னலம் துறந்த ஒரு தியாகத் திருவுருவாகவே வெளிப்படுத்தப்படும். இப்போதும் தொலைக்காட்சிகளில் பழைய படங்களைப் பார்க்கும்போது இதனை உணர முடிகிறது.
முழுமையான நகைச்சுவைப் படம் எனும்போது, அதே தந்தை பாத்திரம் அசட்டுத்தனம் அல்லது முட்டாள்தனத்தின் உச்சமாக வடிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
மாற்றம் காட்டிய ‘உதிரிப்பூக்கள்’!
ரஜினி, கமல் தலைமுறையிலும் கூட தந்தையர் பாத்திரங்களில் பெரிதாக மாற்றம் இல்லை. இயக்குனர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ இவ்வழக்கத்தில் இருந்து விலகி நின்றது.
இதில் விஜயன் ஏற்று நடித்த பள்ளி தாளாளர் சுந்தர வடிவேலு பாத்திரம் வில்லன் என்பதைத் தாண்டி சமூகத்தில் நம்முடன் உலாவும் சில மனிதர்களைப் பிரதிபலித்தது.
மற்றவர்களை பொறாமையுடனும் எரிச்சலுடனும் வன்மத்துடனும் நோக்கும் ஒரு மனிதர், தன் குழந்தைகளான பவானி, ராஜா வாழ்விலும் வளர்ச்சியிலும் தனிப்பட்ட முறையில் அக்கறையைச் செலுத்துவதில்லை.
அக்குழந்தைகளும் தந்தையிடம் பாசத்தை எதிர்பார்க்காத நிலையை அடைந்து விடுகின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் ஊரே ஒன்றிணைந்து அவரை தற்கொலைக்கு தூண்டுகிறது. இனி ஒருபோதும் குழந்தைகளை பார்க்க முடியாது எனும்போது பாசத்தை வெளிப்படுத்துமிடம் தமிழ் சினிமாவில் சாம்பல் நிறத்திலும் தந்தை பாத்திரங்களை வார்க்க முடியுமென்பதற்கு ஒரு உதாரணம்.
ஒருவேளை பவானியும் ராஜாவும் வளர்ந்து பெரியவர்களானார்கள் என்று ’உதிரிப்பூக்கள் 2’ கதை சொல்லியிருந்தால், நல்லதும் கெட்டதும் கலந்த தந்தையின் இயல்பை வெளிக்காட்டியிருப்பார்கள்.
ஆனால், அது போன்ற பாத்திர வார்ப்புகள் இப்போதும் தமிழ் சினிமாவில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன.
’தவமாய் தவமிருந்து’ முதல் ‘டான்’ வரை!
வெற்றி பெற்ற இந்திய சினிமாக்களில் பெரும்பாலும் பாசமோ, நட்போ, காதலோ சிலாகிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சமீபத்தில் பெருவெற்றி பெற்ற ‘கேஜிஎஃப்2’ படத்தின் அடிநாதமாக தாய்ப்பாசமே இருந்தது.
முந்தைய பாகத்தைக் காட்டிலும் இத்திரைக்கதையில் ‘சென்டிமெண்ட்’டுக்கு அதிக இடம் தந்ததே, அப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வலுப்படுத்தியது.
கமலுக்கு பெருவெற்றி தந்துள்ள ‘விக்ரம்’ படத்திலும் தாத்தா – பேரன் பாசம் பிரதானப் படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
அதிகமாக காதல் படங்கள் வந்த 2000களில் தந்தையின் மீதான பற்றுதலைக் காட்டிய படங்களில் முதன்மை பெறுகிறது சேரனின் ‘தவமாய் தவமிருந்து’. இதில் ராஜ்கிரண் நடித்த பாத்திரம் முற்றுமுழுதாக தியாகங்களைப் புரிந்துகொண்டே இருக்கும்.
கவுதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் கூட, இதன் நகர்ப்புற வடிவமாகவே தோற்றமளிக்கும். ஆனால், இரண்டு கதையிலும் தந்தையின் பாத்திரங்களை விட மகன்களின் காதலே அதிக இடத்தைப் பிடித்திருக்கும்.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு இடம்பெயர்ந்த திருமுருகனின் ‘எம்டன் மகன்’, ஒரு முரட்டுத்தனமிக்க தந்தையைக் காட்டியது.
இதில் அப்பாவாக நடித்த நாசரும் மகனாக வந்த பரத்தும் எலியும் பூனையுமாகவே திரையில் வெளிப்பட்டிருப்பார்கள்.
உருக்கும் வெப்பநிலையில் அடிகளைத் தாங்கும் இரும்பே நல்ல வடிவம் பெறும் என்ற நோக்குடன், மகனை சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கும் தந்தை பாத்திரம்.
கிளைமேக்ஸில், அதனால் தனக்கு நன்மையே விளைந்ததாக மகன் பாத்திரம் தன்னிலை விளக்கமளிக்கும்.
ஆனால், இன்று இதனை ‘ABUSIVE PARENTING’ என்று கிண்டலடிக்கிறது நெட்டிசன்களின் உலகம்.
‘டான்’ பட சமுத்திரக்கனியும் இதே போன்றதொரு பாத்திரத்தில்தான் நடித்திருப்பார். என்ன, கிளைமேக்ஸில் அப்படியே ‘தவமாய் தவமிருந்து’ ராஜ்கிரணாக மாறியிருப்பார்.
அதையும் மீறி, ‘கீழே விழுந்து எந்திரிச்சு சைக்கிள் ஓட்ட கத்துக்கற மாதிரி பிள்ளை வளர்க்கறதுலயும் தப்பு பண்ணித்தான் கத்துக்க வேண்டியிருக்கு’ என்று அப்பாத்திரம் வசனம் பேசுவதாக முடியும்.
இந்த இடமே, குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்ப்பதா, செல்லம் கொடுத்து வார்ப்பதா என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்திருக்கும்.
எண்பதுகளில் வெளியான மௌலியின் ‘ஒரு வாரிசு உருவாகிறது’ படம் பார்த்தவர்கள் நிச்சயம் குழந்தைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்கக்கூடாது என்றே சொல்வார்கள்.
‘பிகில்’ ராயப்பனும் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ சுப்பிரமணியும் கூட குழந்தைகள் வளமான வாழ்வைப் பெற வேண்டுமென்று விரும்பும் தந்தைகளாகவே காட்டப்பட்டிருக்கின்றனர்.
ஹலீதா ஷமீம் இயக்கிய ‘ஏலே’வில் வரும் சமுத்திரக்கனி பாத்திரம், தியாகராஜன் குமாராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’மில் வரும் குரு சோமசுந்தரம் பாத்திரம் உட்பட மிகச்சில மட்டுமே இருண்மையும் வெளுமையும் நிறைந்த மனிதர்களாகத் திரையில் வடிவம் பெறுகின்றன.
மேலே சொன்னவை எல்லாமே நாயகனைப் பெற்றெடுத்த தந்தைகளைக் காட்டியவை.
ஆனந்தயாழ் மீட்டுகிறோமா..?!
‘தங்க மீன்கள்’, ‘அபியும் நானும்’ உட்பட மிகச்சில திரைப்படங்கள் பெண் குழந்தைகளைத் தேவதைகளாகவும் அவர்களது தந்தைகளை தேவ தூதர்களாகவும் காட்டியுள்ளன.
நிகழ்காலப் பிரச்சனைகள் சொல்லப்பட்டாலும் கூட, அதையும் மீறி தேவதைத்தனம் தென்படும் தருணங்களே திரைக்கதையில் இடம்பிடித்திருக்கும்.
‘தெய்வத்திருமகள்’ விக்ரம், ‘ராஜா ராணி’ சத்யராஜ், ’தெறி’ விஜய், ’என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ அஜித், ‘பாபநாசம்’ கமல் என நட்சத்திரங்கள் பலரைக் கொண்டாட அப்படங்களில் இடம்பிடித்த தந்தை பாசமே பிரதான காரணம்.
இப்படங்களும் கூட பெண் குழந்தைகளுக்கு வேளாவேளை உணவுட்டுவதைப் போல பாசத்தையும் ஒரு பிடி சேர்த்து திணிக்கும் தந்தைகளையே காண்பித்திருந்தன.
அந்த அப்பாக்களுக்கு மகள் பேசும்போதெல்லாம் ஆனந்த யாழை மீட்டுவதைப் போன்ற உணர்வே உருவாவதாகச் சொல்லப்பட்டது. யதார்த்த வாழ்வின் தந்தை மகளுடன் ஒப்பிடும்போது, இதெல்லாமே அதீதம்தான்.
உண்மையில், மேலே சொன்ன பாத்திரப்படைப்புகள் எல்லாமே ‘எங்கவீட்டுப் பிள்ளை’யில் வரும் சரோஜா தேவி – ரங்காராவ் பாத்திரங்களின் நீட்சிகளாகவே தோற்றம் தருகின்றன.
அசல் நாயகர்கள்!
எந்தவொரு குழந்தைக்கும் முதலாவது நாயகன் அவரவர் தந்தைதான். வளர வளர அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படலாம். பதின்பருவத்தில் தந்தையின் பேச்சு அமிலத்தில் தோய்த்ததாகவே தோன்றும்.
அப்போதெல்லாம், ‘காதலன்’ பட எஸ்.பி.பி. போல ஒருவர் வாய்க்க மாட்டாரா என்ற எண்ணம் உருவாகும்.
யதார்த்தத்தில், எந்தவொரு அப்பாவும் ‘வாடா மகனே சரக்கடிக்கலாம்’ என்று சொல்வதில்லை. விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். ஆனாலும், தந்தையின் பாசத்தில் கண்டிப்பு கட்டாயம் இருக்குமென்பதே உண்மை.
தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ போல, இந்த வகையறா உண்மைகளைச் சொல்லும் படங்களும் தற்போது அதிகரித்திருக்கின்றன.
முந்தைய தலைமுறையைக் காட்டிலும், இன்றைய தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளிடம் கொஞ்சம் அதீதமாகவே செல்லம் காட்டுகின்றனர்.
தாங்கள் பட்ட கஷ்டங்களை குழந்தைகள் அண்டவே கூடாது என்று விரும்புகின்றனர். மாறாக, ’வாழ்வில் எதிர்பாராதவைகளை எதிர்பாருங்கள்’ என்று தம் குழந்தைகளுக்கு வழிகாட்டும் தந்தைகளும் உண்டு.
இவற்றுக்கு நடுவே ‘என்னால் முடிந்தது’ என்று பாசத்திலும் பற்றிலும் தன்னியல்பை வெளிப்படுத்துபவர்களும் உண்டு. இவர்கள் அத்தனை பேரும் முழுக்க முழுக்க நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருப்பதில்லை.
தன் குடும்பத்தினரிடமும் அப்படியொரு பிம்பத்தை உருவாக்குவதில்லை. இது திரைப்படங்களில் தென்படுவதே இல்லை.
தமிழ் திரைப்படங்களில் இப்படிப்பட்ட தந்தைகளின் வார்ப்பைக் காண இன்னும் சில காலம் ஆகலாம்.
தாயைப் போல தந்தையின் பாசமும் வாழ்வில் முக்கியமானது என்பதை வெளிக்காட்டச் சில ஆண்டுகள் ஆன நிலையில், அனைத்துவித பலங்களும் பலவீனங்களும் நிறைந்த தாய், தந்தையரை திரையில் பார்க்க இன்னும் சில காலம் ஆகலாம்.
அந்த காலம் கனியும்போது, யதார்த்தத்தில் நாம் கண்டுணர்ந்த பல தந்தையர்களின் பிரதிபலிப்புகளைக் கொண்டாடலாம். உண்மையில், எந்தவொரு மனிதரையும் சுயத்துடன் ஏற்றுக்கொள்வதே ஆகச்சிறந்த கவுரவம்.
தந்தையின் மீதான பாசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அது நிகழும்போதுதான் ‘எனது தந்தை ஒரு நாயகன்’ (My Daddy is my Hero) என்பது வெற்று கோஷமாக அல்லாமல் அர்த்தப்பூர்வமானதாக மாறும்!
-உதய் பாடகலிங்கம்