நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூழைக்கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!

ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

நன்றாக ஆராய்ந்து, ‘இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக் கூடாது.

அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும் என்றான் வள்ளுவன்.

யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக் கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருத வேண்டும்.

உனக்கு கஷ்டம் வந்தபோது அவன் கை கொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னை பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.

நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.

பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அதுதானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பு ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.

நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்று நண்பன். தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது.

அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னை மரத்துக்கு இணையான நண்பன். வாழை மரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால் தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டிய நண்பன்.

– கவியரசு கண்ணதாசன்

You might also like