நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் தேவை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!

குரேஷியா என்றொரு நாடு திடீரென உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அந்தக் குட்டி நாடு உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்று தேடப்பட்டது.

அங்குள்ள ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத் தரம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு இதெல்லாம் ஆராயப்பட்டது. காரணம், கத்துக்குட்டி அணி என்று வர்ணிக்கப்பட்ட அந்நாட்டின் கால்பந்து அணி, விஸ்வரூபம் எடுத்து 2018-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுதான்.

1991, அக்டோபர் மாதம் 8-ம் தேதி தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதற்கு பிறகு சர்வதேசக் கால்பந்து போட்டியில் 1998ல் நுழைந்தது. அப்போது சர்வதேச கால்பந்து அணியின் தரவரிசைப் பட்டியலில் குரேஷியா 125-வது இடத்தில் இருந்தது. அந்த அணி 20 வருடக் கடுமையான உழைப்பில் 2018 ல் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

’உலகத்தில் வேறு எந்த நாடுமே 20 வருடத்திற்குள் இப்படியொரு அதிவேக வளர்ச்சியைப் பெற்றதில்லை!’ என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள். இந்த வளர்ச்சி, கால்பந்தில் மட்டுமல்ல, எந்த ஒரு நாடுமே எந்த ஒரு விளையாட்டிலுமே சாதிக்க முடியாத ஒரு மிகப்பெரிய சாதனையாகவும் மாறி இருக்கிறது.

எப்படி கால்பந்தில் திடீரென வளர்ந்தது இந்நாடு..?

அந்த வரலாறு, மிகவும் சுவாரசியமானது. சற்றே பின்னோக்கி வரலாற்றைப் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் எப்போதும் அலர்ட்டாக, ஒரு போருக்குத் தயாராகும் குணம் கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள்.

6-ம் நூற்றாண்டில்தான் குரேஷியர் என்ற இனமே உருவாகியுள்ளது. 9-ம் நூற்றாண்டில் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கியுள்ளனர். ஆனால் நாடு ரொம்ப சிறிதாக இருந்ததால், அவர்களால் தனித்து இருக்க முடியவில்லை. தொடர்ந்து பல காலம் பிற நாடுகளைச் சார்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஹங்கேரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு ஆஸ்திரேலியா வசம் வந்தது. 500 ஆண்டுகளுக்கு முன், யூகோஸ்லேவியா, செர்பியா  ஆகிய நாடுகளுடன் இந்த நாடும் இணைந்திருந்தது.

1941-ல் யுகோஸ்லேவியா செர்பியா, குரேஷியா இந்த 3 நாடுகளும் ஒன்று சேர்ந்து சோஷலிஸ்ட் பெடரல் ரிபப்ளிக் ஆஃப் யுகோஸ்லேவியா என்ற ஒரு தனித்த நாட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

தனிப்பெரும்பான்மையுடன் தனியாகச் சுதந்திரம் பெற்ற நாடாக நாம் உருவாக வேண்டும் என்பதற்காக 1991-ல் தன்னை தனி சுதந்திரம் பெற்ற நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது குரேஷியா.

ஆனாலும், அந்த நிலையிலும் ஆக்கிரமிப்பு ஆர்வத்தில் குரேஷியா மீது, செர்பியர்கள் போர் தொடுத்தார்கள். யுகோஸ்லேவியர்கள் போர் தொடுத்தார்கள். எல்லாவற்றையும் மீறி குரேஷியா மீண்டெழுந்தது.

9-ம் நூற்றாண்டில் தொடங்கி கிட்டத்தட்ட 21-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஒரு ஸ்திரத்தன்மையற்ற அரசு, ஸ்திரத்தன்மையற்ற நாடு, மக்கள் அனைவரும் யாராவது நம்மீது போர் தொடுப்பார்களோ, வேறு யாராவது நம்மை ஆக்கிரமிப்பார்களோ என்ற பயத்திலேயே இருந்ததால், எது வந்தாலும் சமாளிப்போம் என்று போர்க் குணத்தை ரத்தத்திலேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அமைதி வந்தபிறகு, வளர்ச்சிக்கு அந்தப் போர்க் குணத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 125-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு அந்நாட்டு கால்பந்து அணி முன்னேற இந்த போர்க் குணம்தான் காரணம்.

கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும், உலகத் தரவரிசை பட்டியலின் டாப் 5-க்குள் வந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்நாடு. கால்பந்து என்ற ஒரு விளையாட்டு, ஒரு நாட்டுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

விளையாட்டால் வெளிச்சத்துக்கு வந்த இன்னொரு நாடு ஸ்விட்சர்லாந்து, இன்று ஸ்விஸ் என்றவுடன் என்ன நினைவுக்கு வரும்..? அந்நிய தேசத்தின் பணப் பாதுகாவல் வங்கிகள்,  குளுமையான சூழல், ஹனிமூன் செல்ல உகந்த இடம்… இதற்கெல்லாம் முன்பாக அந்த தேசத்தை தனது டென்னிஸ் விளையாட்டின் மூலம் உலகறியச் செய்தவர் ரோஜர் ஃபெடரர். உலகின் விடாப்பிடியான சாதனையாளர். டென்னிஸ் உலகின் ராஜா.

ரோஜர் ஃபெடரர்,  தனது 11-வது வயதில் பந்து பொறுக்கிப் போடும் பால் பாயாக டென்னிஸ் களத்தில் இருந்தவர்.

விளையாட்டின் மேல் கொண்ட  ஆர்வம் காரணமாக, தன்னைத் தயார்படுத்திக் கொண்டே வந்த ரோஜர், டென்னிஸ் உலகின் அத்தனை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

யு.எஸ் ஓப்பன், விம்பிள்டன், ஃப்ரெஞ்ச் மற்றும் ஆஸ்திரேலியன் ஓப்பன் என்று அனைத்துப் போட்டிகளிலும் டைட்டில் வின்னர் இவர்தான்.

உலக சாம்பியனாகத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 310 வாரங்கள் – அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ரோஜர் ஃபெடரர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தகவல்படி, உலகின் 5-வது மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வீரர் இவர்தான். போட்டிகளில் வென்ற வகையில் ரூ.900 கோடியும், விளம்பர வருவாய் மூலம் ரூ.5,000 கோடியும் சம்பாதித்து வைத்துள்ளார்.

இவரது விளையாட்டு வாழ்க்கையின் இடையில் ஒரு மிகப்பெரிய சறுக்கலாக, காலில் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. டென்னிஸ் விளையாட்டில் ஓடியாடி பந்தை அடிக்க கால் தான் மிக முக்கியம். அதில் பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் விளையாட வந்தார். உலகின் முதல் நிலை வீரர் என்ற இடத்தை 14 ஆண்டு மருத்துவ வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் எட்டிப் பிடித்தார்.

இதுபோன்ற வைராக்கியமான வீரர், எந்த நாட்டிலும் இருந்ததில்லை. உலகின் முதல் நிலையில் இருக்கிற ஜிம்மி கான்னர், 109 போட்டிகளில் வென்று அந்த இடத்தில் நங்கூரம் பாய்ச்சியது போன்று நிலைத்து நிற்கிறார். பல ஆண்டு கால சாதனையான இதனை, முறியடித்து இருக்கிறார் ரோஜர்.

தனது நாட்டை வெளி உலகுக்கு அடையாளம் காட்டும் சாதனை மனிதராகத் திகழ்கிறார் ரோஜர். ஒரு தனி மனிதர் நினைத்தால், தம்மை மட்டுமல்லாது தான் சார்ந்த நாட்டையே பெருமைப்படுத்த முடியும் என்பதற்கு ரோஜரும் ஒரு உதாரணம்.

– ராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி!

https://ramkumarsingaram.com

You might also like