வீட்டுச் சாப்பாட்டுக்குப் புகழ்பெற்ற உறையூர் அக்கா மெஸ்!

திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர் அக்கா மெஸ் மக்களிடம் புகழ்பெற்ற உணவகமாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. நல்ல உணவு கிடைக்கும் ஊர்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படியொரு சுவைமிகு உணவகம் அக்கா மெஸ்.

இது ஒரு வீட்டு உணவகம். தன் தாயால் தொடங்கப்பட்ட உணவகத்தை மகன் சரவணன் மற்றும் அவரது மனைவி சுதாவும் அக்கறையுடன் வளர்த்தெடுத்துள்ளார்கள். இந்த மெஸ் பற்றி வீடியோ வராத யூ டியூப் சேனலே இல்லை என்கிற அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது.

“கடந்த 20 ஆண்டுகளாக எல்லோரும் இங்கு விரும்பி வந்து சாப்பிடுகிறார்கள். மெஸ் சந்துக்குள் இருக்கிறது என்பார்கள்.

சந்து என்பதைவிட தரமான உணவுதான் முக்கியம். வீட்டில் சாப்பிடும் திருப்தி. நாம் சுவையான உணவைக் கொடுத்தால், மெஸ் எங்கே இருந்தாலும் வருவார்கள்.

சமையல் பணியாளர்களுக்கு ஏதாவது உடல்நலம் சரியில்லை என்றால், உடனே விடுப்பு அளித்துவிடுவோம். அவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அவர்கள் உற்சாகமாக இருந்தால்தான் உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருக்கும்.

உள்ளூரில் வசிப்பவர்கள்தான் சமையல் வேலை செய்கிறார்கள். எங்க வீட்டில் ஒருத்தராகத்தான் எல்லோரும் பழகியிருக்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் சேர்ந்து சமையல் செய்வது மாதிரியான உணர்வுதான் ஏற்படும்” என்று சொல்கிறார் மெஸ் உரிமையாளர்.

அடுத்து பேசிய சுதா சரவணன், “செக்குக் கடலை எண்ணெய்தான் பயன்படுத்துவோம். நாம் சாப்பிட்ட பிறகு எந்த உபாதைகளும் ஏற்படக்கூடாது. மெடிக்கல் ரெப்ஸ் அதிகம் சாப்பிட வருகிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த முதியவர்கள் விரும்பி வந்து சாப்பிட வருவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை வழக்கமான வாடிக்கையாளர்கள் அதிகம். அவர்கள் எந்த உணவை விரும்புவார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

மற்ற ஹோட்டல்களில் இல்லாத உணவைக்கூட வாடிக்கையாளர்கள் கேட்டால் செய்து கொடுப்போம்.

தரமான உணவைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார்.

பா. மகிழ்மதி

You might also like