அவர் இறந்த அன்று ஊரில் யாருமே அழவில்லை!

– எழுத்தாளர் சோ.தருமனின் தூர்வை நாவல் உருவான அனுபவம்

டிப்படையில் நான் விவசாயி. எனக்கு உருளைக்குடியில் 10 ஏக்கர் காடும், 3 ஏக்கர் தோட்டமும் இருக்கு. தற்போது மக்காச்சோளம், பருத்தி போட்டிருக்கேன். எங்கள் ஊரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

எல்லோருக்கும் நிலம் உடைமையாக இருக்கிறது. அந்தப் பகுதியிலே பெரியது உருளைக்குடி கண்மாய்தான். 18 வருடத்திற்கு பிறகு இந்த வடகிழக்கு பருவமழையில்தான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வைப்பாற்றில் கலந்தது.

ஒரு சம்சாரி கட்டமைப்புக்கு கால்நடைகள் முக்கியம், அதுதான் விவசாயத்திற்கு உரம். தற்போது விவசாயத்திற்கு டிராக்டர் வந்துவிட்டதால் கால்நடைகள் காணாமல் போய்விட்டன.

உரத்திற்கு மட்டுமல்ல விவசாயமே அரசாங்கத்தை நம்பிதான் செய்ய
வேண்டியிருக்கு. அந்தக்காலத்தில் மழைபெய்ய ஆரம்பித்தாலே போதும்.

சிறுதானியங்களான சோளம், கம்பு, கேப்பை, குதிரவாலி, சாமை, திணை, காடக்கண்ணிகளைதான் விதைப்போம். விதைகளை நாங்களே பக்குவம் செய்வோம்.

மிளகாய் வத்தலை எங்க அம்மா எடுத்து கொடுப்பாங்க. அவற்றை இரண்டாக உடைத்து அதன் உள்ளே உள்ள விதைகளை உதிர்த்து வைத்துக் கொள்ளுவோம்.

அந்த விதையைத்தான் நாற்றுப்பாவி நடுவோம். எங்க வயல்களில் விளைகிற பருத்தியை ஜென்னிங் கம்பெனியில் கொடுப்போம்.

அவர்கள் பருத்தியை அரைத்து பஞ்சை விலைக்கு எடுத்துவிட்டு விதையை எங்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.

அந்த விதையைக் கொண்டுவந்து களிமண்ணிலும், சாணிப்பாலிலும் உருட்டுவோம். பட்டாணி மாதிரி தனித்தனியாக வந்துவிடும்.

இந்த விதையைத்தான் நாங்கள் பருத்திச்செடி வளர விதைப்போம். அந்த விதை குத்துவிளக்கு போல் நிமிர்ந்து விளைந்து வெடித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு மழைபெய்தால் மீண்டும் வெடிக்கும். இடையில் எந்தப் பூச்சிக்கொல்லி மருந்தோ செயற்கை உரமோ போட்டதில்லை… வெள்ளாமை வீட்டிற்கு வந்துவிடும்.

உத்தரவாதமான வருமானம் எங்களுக்கு கிடைத்தது. அந்த மரபு விதைகளையெல்லாம் நாம் அழித்துவிட்டோம். இப்போது உள்ள விதைகளை விதைத்தால் முளைவிடுவதில்லை.

ஒவ்வொருமுறையும் கடையில்தான் வாங்கவேண்டும். கால்கிலோ விதையே ஆயிரம் ரூபாய் வருகிறது.

இப்போது விளையும் மக்காச்சோளத்தை நான் எதற்காக விதைக்கவேண்டும்.? எனக்கும் அதற்கும் என்ன உறவு என்றே தெரியவில்லை. அதை வியாபாரிகள் எதற்காக வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றும் தெரியாது.

ஆனால், களத்திலே வந்து காசு கொடுத்துவிடுகிறார்கள். விவசாயிகள் மக்காச் சோளத்தை விற்றுவிட்டு அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள். ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பிராய்லா கோழி வளர்ப்புக்கு கட்டடம் கட்டிக்கொடுத்தார்கள். கோழிக்குஞ்சுகளையும், வேலிக்கருவை விதைகளையும் இலவசமாகக் கொடுத்தார்கள்.

1990-ம் ஆண்டு இந்தமாதிரியான மாற்றங்கள் எங்கள் ஊரில் வேகமாக நடந்தது என்னைக் கடுமையாக தாக்கியது. உருளைக்குடி கிராமம் எப்படி நவீனமையமாகிறது? கிராமத்தில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்தல் என்ன காரணத்திற்காக நடக்கிறது?

நவீன விவசாயம் வந்தபிறகு ஏற்கெனவே இருந்த விசயங்கள் எப்படி தூர்ந்து போக ஆரம்பித்தன? எங்க தாத்தா காலத்தில் விவசாயம் எப்படி இருந்தது? தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் விவசாயம் எப்படி இருந்தது.?.

நகரமயமாவதால் மில்லுகள், தீப்பட்டி ஆபீஸ்கள் பட்டாசுக் கடைகள் எப்படி வருகிறது. இப்படியாக யோசித்தபோது, தூர்வை என்ற தானியப்பயிர் என் மனதிற்குள் பொதி பட்டத்திற்கு வந்தது. இவைதான் தூர்வை நாவலுக்கான அடிஉரம்.

பெரும்பாலும் என்னுடைய எழுத்துகள் விவசாயத்தைப் பற்றிதான் பேசும். எங்க தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமாக்களைத்தான் கதாபாத்திரமாக அவர்களது பேச்சுவழக்கில் எழுதினேன். எனக்கு நாவலைப்பற்றியான வடிவம், உத்தி, உள்ளடக்கம் எதுவும் தெரியாது.

எனக்குத் தெரிந்த விசயத்தை எழுதணும். அதற்கு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல் எனக்கு முன்னோடியாக இருந்தது. அந்த தைரியத்தில்தான் நான் நாவலுக்குள் வந்தேன்.

“உன்னையச் சுற்றி உள்ளதை மட்டும் எழுது. நீ வேறு எங்கேயும் தேடி அமைய வேண்டாம். எழுதுவதற்கு விசயம் அவ்வளவு இருக்கிறது” என்று என்னுடைய நயினா கி.ரா சொல்லிக் கொடுத்த இந்த மந்திரம்தான் எனக்கு தூர். அவற்றை நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

தூர்வை நாவல் 95-ல் எழுதி முடித்தேன். அதை எழுதி முடித்த பிறகு நிறைய பதிப்பகங்களில் கொடுத்தேன். நூலாகப் போடுவதற்கு தயங்கினார்கள். இதில் என்ன இருக்கிறது, இதை எப்படிப் புத்தகமாக போடமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். அப்படியே ஒரு வருடம் இந்த நாவல் அலைக்கழிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் கி.ராவை சந்தித்து நடந்ததைச் சொன்னேன். அவர்தான் ‘மீராவிடம் கொடுங்கள்’ என்றார். 1996-ஆம் வருடம் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் மூன்று மாதத்தில் நாவலை வெளியிட்டது.

ஒருநாள் மீரா போன் செய்து “தர்மன் தமிழ்நாட்டில் எதுவும் அதிசயம் நடத்திருக்கிறதா?” என்று புதிருடன் பேசினார். “அப்படி ஒன்றுமில்லையே” என்றேன்.

“உங்களது தூர்வை நாவல் நூறு புத்தகம் விற்றிருக்கிறது. வாங்கியவர்கள் யாரும் வழக்கமான வாசகர்கள் கிடையாது. புதியவர்கள்தான், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன ஆச்சு?” என்று என்னிடம் ஆச்சரியப்பட்டார். நண்பர்களிடம் விசாரித்தால். அந்த வாரம் குமுதத்தில் நடிகர் நாசர் தூர்வை நாவலைப்பற்றி பேசியதைச் சொன்னார்கள்.

இதற்கு நான் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்றே இப்போதுவரை தெரியவில்லை.

தூர்வையில் காடுவெட்டி முத்தையா என்ற பாத்திரம் வரும். அந்தமாதிரியான பாத்திரத்தை யாரும் இதுவரைக்கும் எழுதவில்லை என்று ஜெயமோகன் அடிக்கடி சொல்லுவார். அந்த முத்தையா பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவும் கேலியும் கிண்டலுமாகத்தான் இருக்கும்.

அவர் எனக்கு சித்தப்பா முறை வேணும். அவர் இறந்த அன்னைக்கு ஊரோடு சிரித்தோம். யாருமே வருத்தப்படவில்லை.

அவரது கேலிப்பேச்சைச் சொல்லிச்சொல்லி மகிழ்ச்சியாக வழி அனுப்பிவைத்தோம். ஊரில் யாருமே அழவில்லை.

அப்படியென்றால் அவர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார் பாருங்கள். இப்படிதான் என்னைச்சுற்றி உள்ளவர்களைப் பதிவு செய்து வருகிறேன்!

– நன்றி: அந்திமழை  ஜனவரி 2022

You might also like