புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி, கடைக்கோடி ஊழியரானாலும் சரி, அதில் அவர் தகுதி வித்தியாசங்கள் பார்க்க மாட்டார். சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருகை தந்து சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்திடுவார்.
அப்படி பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எம்.ஜி.ஆரின் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர் ராவ் திருமணத்துக்கு அவர் வருகை தந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பேசுகிறார் சங்கர் ராவ்.
“என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என் வளர்ச்சிக்கு காரணமான எம்.ஜி.ஆர். அவர்களை என் திருமணத்துக்கு அழைப்பதற்காக ராமாவரம் தோட்டத்துக்கு சென்றோம். நாகராஜ ராவ் தான் என்னை அழைத்துச் சென்றார்.
காலை 7 மணிக்கே சென்றுவிட்டோம். சற்று நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே அழைத்தார். “என்ன சங்கர் கல்யாணமா?” என்று சிரித்தபடியே வரவேற்றார். அவரிடம் பத்திரிகையைக் கொடுத்தோம்.
கல்யாண தேதியை பார்த்துவிட்டு “ஆகஸ்ட் 29, நான் இந்திரா காந்தியைப் பார்க்க டெல்லி போறேனே” என்றார். கல்யாணத்துக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருந்தது.
“உன் கல்யாணம் லண்டன்ல நடந்தாகூட வருவேன்டானு என்கிட்ட சொல்லி இருந்தீங்கணே ஞாபகம் இருக்கா. நீங்க வர முடியாதுன்னா சொல்லிடுங்க. நான் பத்திரிகையை கிழிச்சு போட்டுடுறேன். நீங்க ஒரு தேதி சொல்லுங்க அன்னிக்கு கல்யாணத்தை வச்சுக்குறேன்” என்றேன்.
“உடனே பிடிவாதம் பிடிப்பியே. அதனால தான்டா நீ இப்படி இருக்க” என்று என்னை திட்டிவிட்டு, சரி எப்படியாவது வந்திடறேன் என்று சொல்லிக் கொண்டே பத்திரிகையை முழுவதுமாக படித்தார்.
நாங்கள் கொடுத்தது வெறும் ரிசப்ஷன் அழைப்பிதழ் தான். “என்னது… ரிசப்ஷன் பத்திரிகை கொடுத்திருக்க? கல்யாணம் எங்கே? பாஸ்” என்று நாகராஜ ராவிடம் கேட்டார்.
“கல்யாணம் சொந்தக்காரங்களுக்குள்ள வச்சிருக்கோம். அதனால ரிசப்ஷனுக்கு மட்டும் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பண்ணலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்… அதான்” என்றார் நாகராஜ ராவ்.
ஓ… சொந்தக்காரங்களுக்குள்ளயே முடிச்சிக்கறீங்க?” என்று சொல்லிக் கொண்டே சரி வந்திடறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
கல்யாணத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று எனக்கு ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் நடிகர் ஆர்.எஸ்.மனோகருக்கு போன் போட்டு சங்கர் ராவ் கல்யாணம் எங்கே நடக்குதுன்னு கேட்டு சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார்.
உடனடியாக கல்யாணம் நடக்கும் இடம், முகூர்த்த நேரம் என்று எல்லா தகவல்களையும் விசாரித்து அதை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்துள்ளார் மனோகர். ஆகஸ்ட் 29, 1976. காலை 6.30 மணி.
நான் பட்டு வேட்டி, சட்டையெல்லாம் போட்டுக் கொண்டு வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தேன். எழும்பூரில் நாகராஜ ராவ் வீட்டருகே இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் ரூஃப் கார்டனில் தான் எனக்கு திருமணம் நடந்தது.
அந்த ஹோட்டல் மேனேஜரிடம் இருந்து வீட்டுக்கு போன் வந்தது. எதிர்முனையில் பேசியவர் குரலில் அப்படியொரு பதட்டம்.
சார்… சார்… எங்க சார் இருக்கீங்க? சீக்கிரம் புறப்பட்டு ஹோட்டலுக்கு வாங்க சார் இங்க ஒரே கலாட்டா” என பதறினார்.
என்னவோ ஏதோவென நான் பயந்துபோனேன்.
“என்ன சார் ஆச்சு. பதட்டப்படாம சொல்லுங்க” என்றேன்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், “சார்… எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாவும் நம்ம ஹோட்டல் ரூஃப் கார்டன்ல இருக்குற ரெஸ்டாரன்டில் உட்கார்ந்து டிஃபன் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. உங்க கல்யாணத்துக்கு தான் வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் உங்களுக்கு போன் பண்ணேன்” என்றார்.
ரிசப்ஷனுக்கு தான் வருவார் என்று எதிர்பார்த்த எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. நானே காரை ஓட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு பறந்தேன். ஹோட்டல் வாசலில் இருக்கும் டாக்ஸி டிரைவர்களுக்கெல்லாம் என்னை நான்றாகவே தெரியும்.
என்னைப் பார்த்ததும், ‘வாத்தியார் வந்திருக்காரு’ என்று அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். நேராக மாடிக்கு ஓடினேன். அந்த பெரிய ஹோட்டலே உச்சகட்ட பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். என்ற அந்த ஒற்றை மனிதரின் வரவு தான் அங்கிருந்த அத்தனைப் பேரையும் அப்படி இயக்கிக் கொண்டிருந்தது.
ஆனால் அவரோ அதற்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்டில் சாவகாசமாக உட்கார்ந்து பொங்கல், வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். ஆமா… பத்திரிகை கொடுக்கும்போது என்கிட்ட நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா?” என்றார் எம்.ஜி.ஆர்.
“என்ன சொன்னேன்னு ஞாபகம் இல்ல சார்” என்றேன்.
“கல்யாணம் எங்கே வச்சிருக்கனு கேட்டதுக்கு… கல்யாணம் சொந்தக்காரங்களுக்குள்ளனு சொன்னியே…?”
“ஆமா சார் சொன்னேன். ஞாபகம் இருக்கு” என்றேன்.
“எல்லாத்தையும் சொந்தத்துக்குள்ளேயே முடிச்சுக்குறீங்க… அப்படின்னா நான் உனக்கு சொந்தம் இல்லியா?” என்று கேட்டுவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார்.
அப்படியே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர அவர் காலில் விழுந்துவிட்டேன். எப்பேர்பட்ட மனுஷன்.
அப்படியொரு வார்த்தை சொல்ல எப்பேர்பட்ட மனசு வேணும். ஏழேழு ஜென்மத்துக்கும் என் குடும்பம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது” என்று நெகிழ்ந்தார் சங்கர் ராவ்.
(சரித்திரம் தொடரும்…)
– அருண் சுவாமிநாதன்.