உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!

– உலக சுகாதார அமைப்பு   

கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.

இந்நிலையில் இந்த நோய்த்தொற்று குறித்து அறிக்கை வெளியிடுள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ், “கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது.

இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.

பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது.

ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்” என தெரிவித்தார்.

You might also like