30 மொழிகளில் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது.

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்தப் பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’.

இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தான பாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தமிழ் மண்ணில் நடைபெறும் கதையொன்று, அதன் நிலவியல் எல்லைகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

திறமையான படைப்பாளிகள் குழுவாக இணைந்து உருவாக்கியிருக்கும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம்.

புஷ்கர் & காயத்ரி பேசும்போது, “விக்ரம் வேதாவிற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம்.” என்றனர்.

ஆர்.பார்த்திபன் பேசும்போது, “32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில் தான்.

நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள்.

அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞானப் பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்றச் சென்று விடுவார்.

விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும்.” என்றார்.

You might also like