சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்!

அப்துல் ரகுமானின் நதிமூலம்!

“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.

உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை பரம்பரையாகத் தொடருமா?

ஆச்சரியம் தான். ஆனால் அப்துல் ரகுமானுக்கு அதிலும் ஒரு தொடர்ச்சி. தாத்தா, அப்பா எல்லாம் கவிஞர்கள். மகனும் அந்த மரபில் தொடர்ந்து கவிஞன்.

மதுரையில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சந்தைப் பேட்டையில் காதர்கான் பட்லர் சந்தில் உள்ள சையது முகமதுவின் வீடு ஐம்பது வருடங்களுக்கு முன்பே பிரபலம். ஆற்காடு நவாப் வழி வந்த அந்தக் குடும்பத்தில் கல்விதான் குடும்பச் சொத்து.

சையது முகமதுவின் அப்பா சையது அஷ்ரப் அரபிமொழிக் கவிஞர். அவருடைய அப்பாவும் அரபி, உருது மொழிக் கவிஞர். பாரசீகம், உருது, அரபி மொழிகள் சர்வசாதாரணமாகப் புழங்கிய அந்த நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் தலைப்பிள்ளை அப்துல் ரகுமான்.

“எங்க அப்பா டிராவல்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்துக்கிட்டே நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அப்பாவோட வருமானமும் அதிகம் என்று சொல்ல முடியாது. அதை வைத்துத்தான் குடும்பம் நடந்தது.

அண்ணன் ரகுமான் மூத்த பிள்ளை. அடுத்து என்னையும் சேர்த்து இரண்டு தம்பிகள், ஒரு சகோதரி. அண்ணனுக்குச் சின்ன வயதிலிருந்தே படிப்பில் நல்ல ஆர்வம். அப்போதே அரபு மொழியைக் கத்துக்கிட்டு சிறு வயதிலேயே குர்ஆனைப் படிச்சி முடிச்சிட்டார்.

அதிகம் யாரோடும் பேசாமல் தனிமையை விரும்புகிறவராக இருந்தார்” – தனது அண்ணனைப் பற்றி பாசத்துடன் சொல்கிறார் மதுரையில் இருக்கும் ரகுமானின் தம்பி அப்துல் ரஷீத்.

வீட்டில் உருது. அதோடு அரபு மொழி படித்தாலும் சிறுவனாக இருந்த ரகுமானுக்குத் தமிழ் மேல் ஒரு ஈடுபாடு. வீட்டிற்கு அருகில் குறவன் குறத்தி ஆட்டத்தில் பிரபலமான குழுவினரின் வீடுகள். அவர்கள் ஆடும்போது போய்ப் பார்த்ததில், ஆட்டத்தை விட, அவர்கள் பாடுகிற சிந்துப் பாடல்கள் மீது ஒரு மோகம்.

எளிமையான சந்தமும், எளிமையான பாட்டும் பிடித்துப்போய் விட்டன. நபிகள் நாயகம் பிறந்தநாளின்போது வீட்டில் அரபு மொழியில் எழுதப்பட்ட துதிப்பாடல்களைக் குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து, ஒரு மெட்டுடன் பாடுவார்கள்.
கீச்சுக் குரலுடன், அவர்களுடன் சேர்ந்து ரகுமானும் பாடிப் பழகக் கொஞ்சம் கொஞ்சமாக கவிதைக்கான ஒரு அடித்தளம் போடப்பட்டு விட்டது.

எட்டாவது வகுப்பு சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஆசிரியரான ராமகிருஷ்ணன் போர்டில் எழுதியிருந்த ஒரு பாட்டு மிகவும் பிடித்திருந்தது ரகுமானுக்கு.

“ஐயா… அந்தப் பாட்டு நல்லா இருக்குது, யார் எழுதினது?”

“வகுப்பு முடிந்ததும்… வந்து என்னைப் பார்.”

ஆசிரியரைச் சந்தித்ததும் அவர் மூலமாகத்தான் தெரிந்தது, அது பாரதிதாசன் பாட்டு. பையனின் உற்சாகத்தைப் புரிந்து கொண்டு பல கவிதைப் புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார். அப்பா சையது அகமதுவும் மகனுக்கு இக்பாலின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கச் சொன்னார்.

மனசுக்குள் வெளிச்சம் கூடின மாதிரி இருந்தது. ஆசிரியர் மூலம் கற்ற யாப்பிலக்கணம், படித்த புத்தகங்களிலிருந்து கிளர்ந்த ஒரு வேகம், அப்போதே ரகுமானிடமிருந்து கவிதைகள் பிறந்தன.

“ரம்ஜான் நோன்புக் காலங்களில் அதிகாலையில் எழுந்து குளிச்சிட்டு தெருத் தெருவாகப் போவோம். ரகுமானும் அதில் கலந்துக்குவார். பழைய ஹிந்திப் படப்பாடல் மெட்டில் தமிழ்ப் பாட்டை ரகுமான் அப்பா எழுதிக் கொடுப்பார். அதைத்தான் பாடுவோம். இறைவழிபாட்டில், தொழுகையில் கவனமாக இருப்பார் ரகுமான்.

பள்ளியில் படிக்கிறபோதே முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற மன்றம் வைத்திருந்தோம். அது சார்பாகக் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் ரகுமான் கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்பவே மேடைகளில் பேச ஆரம்பிச்சிட்டார்.” – அந்த நாள் ஞாபகத்துடன் தனது நண்பனைப் பற்றிச் சொன்னார் மதுரையைச் சேர்ந்த முகமது ஹாஷிம்.

பள்ளிப்படிப்பு முடிந்து, இன்டர்மீடியட் வகுப்பில் போய்ச்சேர்ந்த தியாகராஜர் கல்லூரியை – ‘இரண்டாவது கருப்பை’ என்று ரகுமான் வர்ணிக்கிறார். தமிழ் சிறப்பு வகுப்பு அ.கி.பரந்தாமனார், அவ்வை துரைசாமிப்பிள்ளை, இலக்குவனார் என்று ஆழ்ந்த தமிழறிவு கொண்ட ஆசிரியர்கள்.

யாப்பிலக்கணம், ‘தலைகீழ்’ படமாகி எது குறித்தும் உடனடியாக வெண்பா பாடக் கூடிய அளவுக்குத் தேர்ச்சி வந்துவிட்டது ரகுமானுக்கு. அப்போது ஆசிரியராக வந்து சேர்ந்தவர் அவ்வை நடராசன். இருவருக்குமிடையில் நெருக்கம் வர, அவர் மூலமாக கவிஞர் சுரதாவின் புத்தகங்கள் அறிமுகம். சுரதாவும், கம்பதாசனும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

கல்லூரிகளில் நடந்த கவிதைப் போட்டிகளில் ரகுமானுக்கு முதல் பரிசு. அப்போது ஆனந்தவிகடனில் நடந்த மாணவர் திட்டப் போட்டியில் ரகுமான் கவிதைக்குக் கிடைத்த ஒரு பதக்கமும் பார்க்கர் பேனாவும்.

கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள். அப்போது கல்லூரியில் மறைமலை அடிகள் நினைவாக ஒரு விழா. அவ்வை நடராசனுக்கு ஒரு திட்டம் உருவாகி, நடராசன் மெட்டுப்போட்டு, ரகுமான் பாட்டெழுதி, வில்லுப்பாட்டைத் தயாரித்தார்கள்.

வில்லைத் தட்டினபடி ரகுமானின் பாஷயில், ‘கர்ண கொடூரமாக’ப் பாடியவர் அவ்வை நடராசன். அதையும் மீறிப் பிரபலமாகி விட்டது அந்த வில்லுப்பாட்டு. எதிரே உட்கார்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் சினிமா தயாரிப்பாளரான ஏ.கே.வேலன்.
பாட்டின் எளிமையும் அழகும் பிடித்து, ரகுமானைக் கூப்பிட்டு சென்னைக்கு வரச் சொன்னார். ரகுமானுக்கு அதில் இஷ்டமில்லை.

“சின்ன வயசிலிருந்தே அண்ணன் தன்னோட காரியங்களுக்கு மத்தவங்க கிட்ட போய் நிற்க மாட்டார்” என்கிறார் ரகுமான் சகோதரியான அஜிஷா பேகம்.

தாகூரும், கலீல் ஜிப்ரானும் பாதித்து தமிழில் வசனக் கவிதை ஒன்றை எழுதிப் பார்த்திருக்கிறார். எழுதினதை ஆசிரியராக இருந்த அ.கி.பரந்தாமனிடம் போய்க் காட்ட, “இலக்கணத்தோடு எழுதிட்டு வா” என்றிருக்கிறார்.

மனம் தளராமல், அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ஆங்கிலப் பேராசிரியர்களிடம் கட்டினபோது, அவர்கள் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரி ஆண்டு மலரிலும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ரகுமானின் வசன முயற்சிக்கு முதலில் ஆதரவு கிடைத்தது தமிழில் அல்ல, இன்னொரு மொழியில் தான்.

“கல்லூரியில் படிக்கும்போதே அப்துல் ரகுமான் பாப்புலரான மாணவர். உருது மொழிப் புலமை இருந்ததால் அவரது கவிதைகளில் தனித்துவம் தெரிந்தது. உமர்கய்யாம் கவிதைகளில் மிகவும் ஈடுபாடு. கவியரங்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது அவருக்கு.

மதுரைக்கு அருகிலுள்ள மனையூரில்தான் முதன் முதலில் ‘மண்’ என்ற வசனக் கவிதையை எழுதி வந்து படித்தார். அது ‘தமிழ்நாடு’ பத்திரிகையிலும் வந்தது. அதற்கு ஏகப்பட்ட பாராட்டு. அப்போது மதுரைக்கு வந்திருந்த பேரறிஞர் அண்ணா தொடர்ந்து எட்டு முறை அந்தக் கவிதையை வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.

கவியரங்கத்திற்கான கவிதைகளை இவர் எழுதினாலும், புத்தகமாக்கும்போது ஆரவாரம் எழுந்த வரிகளைக் கூடுமானவரை நீக்கியிருக்கிறார். கவிராத்திரி என்ற வடிவத்தை முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்.” – நட்புடன் சொல்கிறார் ரகுமானின் கல்லூரித் தோழரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஐ.சி.பாலசுந்தரம்.

தியாகராஜர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ., வகுப்பில் முதல் மாணவனாக வெளிவந்ததும், தியாகராஜ செட்டியார் மதுரையில் நடத்திக் கொண்டிருந்த ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் ரகுமானுக்கு உதவி ஆசிரியர் வேலை கொஞ்ச காலம்தான்.
அதற்குள் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை கிடைத்துவிட்டது ரகுமானுக்கு.

ரகுமானுக்குக் கல்லூரியில் தனி அந்தஸ்து. அவரது வகுப்புக்கென்று இலக்கிய ரசனை உள்ள மாணவர்கள் கூடுவார்கள். விளைவு? வாணியம்பாடிக் கல்லூரியில் பல குட்டிக் கவிஞர்கள். ‘அந்தி சிவப்பது ஏன்?’ என்கிற தலைப்பில் சில காரணங்களை கவிதைகளாக எழுதுகிறவர்களுக்குப் பரிசு என்று கல்லூரி நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு கொடுத்தார் ரகுமான்.

ஒரே குவியலாக நூற்றுக்கணக்கான கவிதைகள் வந்துவிட்டன. அற்புதமான கற்பனையுடன் இருந்த கவிதைகளை ஒழுங்கு பண்ணித் தொகுத்துப் புத்தகமாக்கியபோது அதற்குப் பாராட்டு தெரிவித்தவர்கள் கலைஞரும், எழுத்தாளர் சுஜாதாவும்.

திமுக 67-இல் ஆட்சி பொறுப்பேற்ற சமயம். சென்னையில் ‘அண்ணா கவியரங்கம்’. தலைமை தாங்கியவர் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி. அந்தக் கவியரங்கத்திற்கு நல்ல பெயர் கிடைத்ததும் தமிழகம் முழுக்க – மாவட்ட வாரியாகக் கவியரங்கங்கள்.

அனைத்திலும் அப்துல் ரகுமான் சிலவற்றில் வசன கவிதைகளை எழுதி வாசிக்க, அதற்கு நல்ல வரவேற்பு. ஒரு மேடையில் அப்துல் ரகுமான் பாடியதைத் தலைமையேற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

ரகுமான் பாடி முடித்ததும் அவரிடமிருந்து பாரபட்சமில்லாத பாராட்டு.
“நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும்போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாரும் இல்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார்.”

அப்துல் ரகுமானுடன் எம்.ஏ படித்தவரான கவிஞர் மீராவுக்கு ரகுமான் பற்றிப் பேசும்போது ஒரு சகோதர வாஞ்சை.

“முதன்முதலில், தமிழில் மேடையில் வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் ரகுமான். புதுக்கவிதை என்கிற கருத்தாக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தவர் இவர். அவருக்குக் கிடைத்த உருது மொழிப் பரிச்சயம் அவரது கவிதைகளுக்கு தனி மெருகைக் கொடுத்தது.

பழைய இந்திப் பட பாடல்களை விரும்பி ரசிப்பார். “எங்கே கீதை இல்லையோ, அங்கே பள்ளிவாசல் இல்லை. எங்கே குர்ஆன் இல்லையோ அது கோவிலும் இல்லை” என்று அப்போதைய ஹிந்தி சினிமாப் பாட்டு வரிகளைச் சிலாகித்து மொழிபெயர்த்து எங்களிடம் சொல்வார்.

முஷைரா என்ற வடிவத்தில் உருதுக் கவிதைகளைப் பாடுவதையும் இவர் வாணியம்பாடிக் கல்லூரியில் பணிபுரிந்தபோது செய்திருக்கிறார். கவிதை மூலமாக அண்ணா, கலைஞர், கண்ணதாசன் உட்படப் பலருக்கு நெருக்கமானவர்.
கவிதைகளில் மட்டுமல்ல, கவியரங்கத்தில் பல சோதனை யுக்திகளை மேற்கொண்ட அவருக்குப் புதுக்கவிதை உலகில் தனி இடம் உண்டு.”

வாணியம்பாடியில் 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து தானாகவே ஓய்வு பெற்று, மனைவியுடன் 1991-இல் சென்னைக்கு வந்துவிட்ட ரஹ்மானின் மனைவி மெகபூப் பேகம். மூத்த பெண் வகிதா திருமணமாகி வாணியம்பாடியில் இருக்கிறார்.
அடுத்தது மகன் சையது அஷ்ரப் இருப்பது ரியாத்தில் டாக்டராக. பால்வீதி கவிதைத் தொகுப்பில் துவங்கி இதுவரை இவர் தந்திருப்பது எட்டு தொகுதிகள். அதோடு சன் டிவியில் வாரா வாரம் கவிதை நிகழ்ச்சிகள்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி, ஒரு விழாவில் கலைஞர் கருணாநிதி இப்படிச் சொன்னார்.

“இவர் நமது ஆஸ்தானத்துப் புலவர்.”
***

பின்னிணைப்பு:

“என்னுடைய மூலமே நதி தான்” – அப்துல் ரகுமான்

“என்னுடைய மூலமே நதிதான். வைகைக் கரையில் எங்கள் வீடு. விளையாடினது, படித்தது எல்லாம் அந்தக் கரையிலேதான்னு சொல்லணும். வறட்சியாகக் கிடந்தாலும், எனது நல்ல நண்பர் மாதிரி ஆகியிருந்தது வைகை நதி.

எங்க தாத்தாவும் அப்பாவும் உருதுக் கவிஞர்களாக இருந்ததும் நான் எழுத ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம். பிரிட்டிஷார் காலத்தில் ‘வெடி குண்டு’ என்ற பத்திரிகையை நடத்தியவர் எங்க அப்பா. அதை அப்போ தடை பண்ணிட்டாங்க.

ஜீவானந்தம், பாரதிதாசன் கூட எல்லாம் நெருக்கமான பழக்கம் இருந்தது அவருக்கு. ‘மஹதி’ங்கிற பெயரில் நிறைய கவிதைகள், கட்டுரைகளைத் தமிழிலும் எழுதினார்.

சந்தைப்பேட்டையில் இருந்த எங்க சொந்த வீட்டை விற்கக் காரணமே அப்பாவோட எழுத்துதான். பத்திரிகை நடத்திப் புத்தகம் போடுறதுக்கு வீட்டை அடமானம் வைக்க, அதைக் கட்ட முடியாமல் விற்றோம்.

எம்.ஏ படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில் மின்சார இணைப்பு இல்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பேன். எங்க அப்பாவுக்கு நேர் எதிரா, வெகுளியானவங்களா எங்க அம்மா.

ஆரம்பத்தில் இருந்தே எனக்குக் கூச்ச சுபாவம். யாருடனும் போய்ப் பேசுறதுக்கு ஒரு தயக்கம். அது இன்னைக்கு வரை இருக்கு. இளைஞனாக இருந்தபோதே சினிமாவுக்குப் பாட்டெழுத வாய்ப்பு வந்தது. ஆனாப் போகலை.

கலைஞரோட நெருக்கமாக இருக்கிறதனாலே பல சமயங்களில் என்னை அரசியலுக்குள் நுழைக்க முயற்சித்திருக்கிறார்.. வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் நிற்கக்கூடச் சொல்லியிருக்கிறார்.

அப்படி போயிருந்தால் இந்நேரம் அமைச்சராகக் கூட ஆகியிருக்கலாம். இருந்தாலும் எதுவும் இழப்பாகத் தெரியலை.

அரசியல்வாதிகளுடன் பழக்கமிருந்தாலும் அப்படிப்போக ஏனோ விருப்பமில்லை. அப்படியே ஒதுங்கியே இருந்துட்டேன். அவர்களிடம் போய் எனது தேவைகளுக்காக நிற்க மாட்டேன். இது நமக்குச் சுபாவமாயிடுச்சு… எனக்குன்னு பெரிய தேவைகள் ஒண்ணுமில்லை. நான் விரும்பிய காரியங்களைச் செஞ்சுக்கிட்டிருக்கேன்.

“உயிர்களின் கருப்பை நான், சமாதியும் நான்” என்று துவங்குகிற மண் என்ற கவிதைதான் தமிழில் அரங்கில் வாசிக்கப்பட்ட முதல் வசன கவிதை.
அறிஞர் அண்ணா பல முறை அதைக் கேட்டு பாராட்டியது எனக்குச் சந்தோஷமாய் இருந்தது. பிறகு பெரியார், கலைஞர் என்று பலர் தொடர்பு கிடைச்சது கவிதையினாலதான்.

‘எழுத்து’ பத்திரிகைக்கு முன்பே தமிழில் வசனக் கவிதையை எழுதியவர் கலைஞர். அவருடைய பாதிப்பு என்னிடம் உண்டு. திராவிட இயக்கத் தொடர்பினாலும், அதன் தாக்கம், எனக்குக் கிடைத்த அரபு, உருது மொழிப் பரிச்சயம் – இப்படிப் பல விஷயங்களின் கலவைதான் என்னோட கவிதைன்னு சொல்லுவேன்” என்று சொல்கிறார் அப்துல் ரகுமான்.

  • மணா-வின் ‘நதிமூலம்’ என்ற நூலில் இருந்து ஒரு கட்டுரை.
You might also like