குஜராத் அணி கோப்பையை வென்றதற்கான காரணங்கள்!

அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.

வலுவான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயஸ்ஸ் போன்றவற்றை வீழ்த்தி குஜராத் அணி கோப்பையை வென்றுள்ளது.

முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றதற்கான 5 காரணங்களைப் பார்ப்போம்:

1.பதற்றமில்லாத கேப்டன்:

குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்கியதுமே அதன் உரிமையாளரான சிவிபி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் செய்த முதல் காரியம் தங்கள் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்ததுதான்.

ஹர்த்திக்கை கேப்டனாக நியமிப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சொன்னதும் முதலில் அனைவரும் சிரித்தார்கள்.

காயங்களால் இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் ஹர்த்திக் பாண்டியாவால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஹர்த்திக் பாண்டியா அதிரடி வீரராக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்.

கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆடுவது மட்டுமே அவரது பணியாக இருந்தது. பந்துவீச்சிலும் அவர் பெரிய நட்சத்திரமாக இல்லை. 5-வது பந்துவீச்சாளராக மட்டுமே அவர் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டார்.

இப்படி 2 துறைகளிலும் பெரிதாக சாதிக்காத ஹர்திக் பாண்டியா, கேப்டன்ஷிப்பில் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக இந்த ஐபிஎல்லில் ஹர்த்திக் பாண்டியா செயல்பட்டார். இந்த ஐபிஎல்லில் பெரும்பாலும் பாட்டிங் வரிசையில் 4-வது வீரராக வந்த ஹர்த்திக் பாண்டியா, பேட்டிங்கில் தனது இன்னொரு முகத்தைக் காட்டினார்.

முதல் 15 ஓவர்கள் வரை திராவிட்டைப் போல் நிதானம் காட்டியவர், அதன்பிறகு தோனியைப் போல் அதிரடி காட்டினார். தோனியின் ஸ்டைலில் கேப்டனாக செயல்பட்ட எந்த கட்டத்திலும் பதற்றம் அடையவில்லை.

சிரித்துக்கொண்டே எதிரணிகளை காலி செய்தார். அவரது தலைமைப் பண்பு, குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது.

2.அணித் தேர்வு:

வெற்றிக்கான தங்கள் முதல் அடியை அணித் தேர்விலேயே வைத்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம்.

ஏலத்துக்கு முன்பே ஹர்திக் பாண்டியா, ரஷிக் கான், சுப்மான் கில் ஆகியோரை வாங்கிய குஜராத் டைட்டன்ஸ், ஏலத்தில் கவனமாக இருந்தது.

நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதில், தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டுமே வாங்கினார்கள்.

பேட்டிங்குக்கு ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சாஹா, சுப்மான் கில், ஜேசன் ராய், திவாட்டியா, பந்துவீச்சுக்கு முகமது ஷமி, ஜாக்கி ஃபெர்கசன், அல்சாரி ஜோசப், ர்ஷித் கான் என்று பார்த்துப் பார்த்து வீரர்களை தேர்ந்தெடுத்தார்கள். அது மைதானத்தில் கைகொடுத்தது.

3.திறமையான பயிற்சியாளர்கள்:

ஆயுதங்களின் ஆற்றல் அவற்றை கூர் தீட்டுவதில் உள்ளது. அந்த வகையில் தங்களிடம் கிடைத்த வீரர்களைப் பார்த்துப் பார்த்து கூர் தீட்டினார்கள் குஜராத்ய் டைட்டன்ஸின் பயிற்சியாளர்களான நெஹ்ராவும், கிர்ஸ்டனும்.

இந்திய அணி 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன்.

குஜாராத் அணிக்கு பேட்டிங் பயிற்சியளிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பு நெஹ்ராவிடம் வழங்கப்பட்டது.

இந்த 2 பயிற்சியாளர்களும் தங்கள் பணியை துல்லியமாகச் செய்தார்கள். அதிரடி வீரரான ஹர்த்திக்கை ஒரு பொறுப்புள்ள பேட்ஸ்மேனாக கிர்ஸ்டன் மாற்ற, பவர் ப்ளேயில் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத பந்துவீச்சாளராக ஷமியை நெஹ்ரா உருவாக்கினார்.

போட்டி நடக்கும்போதே வெளியில் நின்றுகொண்டு இவர்கள் ஆலோசனைகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது.

4.முடக்கிப் போட்ட பந்துவீச்சு:

இந்த ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு அதன் பந்துவீச்சு முக்கிய காரணமாய் இருந்தது. குறிப்பாக ஜாக்கி ஃபெர்கசன், முகமது ஷமி ஆகியோர் பவர் ப்ளேயில் எதிரணி பேட்ஸ்மேன்களின் கழுத்தை நெரித்தனர்.

எதிரணி பேட்ஸ்மேன்கள் அதையும் மீறி தப்பித்து வந்தாலும், இடைப்பட்ட ஓவர்களில் ரஷிக் கான் தாக்குதல் நடத்தினார்.

இந்த 3 பந்துவீச்சாளர்களுக்கு துணையாக சாய் கிஷோர், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப் போன்ற பந்துவீச்சாளர்களும் துல்லியமாக தாக்குதல் நடத்த எதிரணிகள் துவண்டன.

5.எதிர்பார்ப்பு இல்லாத அணி:

இந்த ஐபிஎல்லை பொறுத்தவரை சிஎஸ்கே, மும்பை இந்தியன், ஆர்சிபி போன்ற அணிகள் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்புகளே அந்த அணிகளின் வீரர்களுக்கு சுமையாக மாறிப்போனது.

ஆனால் ஐபிஎல்லில் முதல் முறையாக ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை.

மிகச் சுதந்திரமாக எந்த சுமையும் இல்லாமல் சுதந்திரமாக ஆடினர். இதுவே அவர்களுக்கு பலமாக அமைந்தது. முதல் தொடரிலேயே அவர்கள் கோப்பையையும் கைப்பற்றினர்.

சுதிர் பி.எம்

நன்றி: வாவ் தமிழா இணையதளம்

You might also like