நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!

“இந்தக் கொடுமை செய்தால்

ஏழைகள் என்ன செய்வோம்?

இனிப் பொறுக்க மாட்டோம்

ஈட்டியாய் வேலாய் மாறுவோம்”

– இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர்.

*. சென்னை முரசொலி அலுவலகத்திற்கு கலைஞர் வரும்போது ஒரு சமயம் ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை முரசொலியில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரும், நண்பருமான சின்னக் குத்தூசியிடம் கொடுத்தார்.

பைண்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட நோட்டுப் புத்தகம் அது.

அது ஒரு சரித்திர நாவல்.

நாவலின் பெயர் “செல்வ சந்திரா”

எழுதியவரின் பெயர் ‘டி.எம்.கருணாநிதி’ என்றிருந்தது.

1937-38 களில் எழுதிய கதை.

ஆனால், அந்த நோட்டில் பாதிக்கு மேல் பூச்சிக்கு இரையாகியிருந்தது.

ஆச்சரயத்துடன் அந்த நோட்டைப் புரட்டியபடி “இதை எழுதிய போது எந்த வகுப்புப் படித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று  சின்னக்குத்தூசி கேட்டபோது, கலைஞர் சொன்ன பதில்.

“ஆறாவது அல்லது ஏழாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது எழுதியிருக்கலாம்.”

*. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் கட்டம் அது. இந்தி திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மாணவர்களை ஒன்றுசேர்த்து கலைஞர் இளம் வயதில் நடத்திய பேரணி தான் அவருடைய அரசியல், சமூக வாழ்வுக்கான முதல் படி.

*. மேடைப் பேச்சுக்கான தளமும் சிறுவயதிலேயே துவங்கிவிட்டது. பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பள்ளி மாணவனாக அவர் பேசிய தலைப்பு ‘நட்பு’.

*. திருவாரூரில் உள்ள பள்ளியில் கலைஞர் படித்த பள்ளியில் அவர் படித்த வகுப்பறைச் சுவரில் “மு.க” என்று ஆணியால் கலைஞர் இளம் வயதில் பதித்திருந்த  கையெழுத்தை அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கச் சென்றபோது, பார்க்க முடிந்தது. அப்போது துவக்கிய அமைப்பு ‘தமிழ்நாடு – தமிழ்  மாணவர் மன்றம்’.

அவரிடம் அப்போது பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பத்திரிகை பெரியார் நடத்திய ‘குடியரசு’. அதன் பாதிப்பில் அவர் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை ‘மாணவ நேசன்’.

*. திருவாரூர் பள்ளியில் படிக்கும்போது, மகாவித்வான் தண்டபாணி தேசிகர், சி.இலக்குவனார், முத்துக்கிருட்டிண நாட்டாரய்யா, இராசகோபாலப் பிள்ளை என்று புலமைகொண்ட தமிழாசிரியர்கள்;

கவிஞர் சுரதா, கா.மு.ஷெரீப் போன்ற மாணவ நண்பர்கள்  தமிழ் மீதான ஈடுபாடு அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

திராவிட இயக்க உணர்வைக் கொடுத்தவை பெரியார் மற்றும் தளபதி அழகிரிசாமியின் பேச்சுக்கள்.

*. அறிஞர் அண்ணா நடத்தி வந்த ‘திராவிட நாடு’ பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புகிறார் கலைஞர். கட்டுரை பிரசுரமாகி விட்டது ‘இளமைப் பலி’ என்ற தலைப்பில். பிரசுரிக்கப்பட்ட ஆண்டு 1942.

*. தான் நடத்திக் கொண்டிருந்த தமிழ் மாணவர் மன்ற ஆண்டுவிழாவுக்காக அப்போதே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களான க.அன்பழகனையும், கே.ஏ. மதியழகனையும் அழைத்துப் பேச வைத்தார்.

அப்போது அதற்கு வாழ்த்தைக் கவிதையாக அனுப்பியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

*. துடிப்பும், துள்ளலும் நிறைந்த எழுத்து கலைஞர் எழுதிய முதல் நாடகத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அவர் எழுதி நடித்த முதல் நாடகம் ‘பழனியப்பன்’. எழுதப்பட்ட ஆண்டு 1944.

“இது ஒரு உலகம்! இது ஒரு வாழ்வு! இதற்கொரு சமுதாயம்! கட்டியாள ஒரு கடவுள்!” – இது நாடகத்தில் அவர் எழுதிய வசனத்தின் ஒரு துளி.

எல்லோரும் கடவுளின் பெயரைப் போட்டு ‘துணை’ என்று போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் நன்கொடை வசூல் செய்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்ததால் இப்படிப் போட்டிருந்தார்.

“நற்பணி நிதிக்கு நாடகத் துணை”

*.முரசொலியின் துவக்கத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். திருவாரூரில் இருந்த கலைஞரின் நண்பர் தென்னன் முரசொலியின் ஆரம்ப காலத்திய இதழ்களை வைத்திருந்தார். கேட்டபோது அதை நகல் எடுத்துக் கொடுத்தார்.

இரண்டே பக்கங்களில் துண்டு நோட்டீஸ் போன்று தான் இருந்தது. வெளிவந்த ஆண்டு 1944.

அதில் கலைஞர் ‘சேரன்’ என்ற பெயரில் எழுதியிருந்தார். அதன் செயலாளர் ‘தென்னன்’ என்றிருந்தது.

அதில் சேரனான ‘கலைஞர்’ எழுதியிருந்த கட்டுரையின் தலைப்பு: “வருணமா? மானமா?”

“பரணி பல பாடிப் பாங்குடன் வாழ்ந்த

பைந்தமிழ் நாட்டில்

சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச்

சோதரர்கள் சிலர் கூடி

வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக்

கரணங்கள் போட்டாலும்

மரணத்தின் உச்சியிலே மானங்காக்க

மறத்தமிழா! போராடு!

வருணாசிரமம் வீழ்க!”

இந்த முழக்கத்தை முரசொலி வழியே முன்வைத்த போது அவருக்கு வயது 20.

*.புதுச்சேரியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, தாக்குதலுக்கு ஆளானார். பிறகு பெரியாரைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த ‘குடியரசு’ வார இதழின் துணை ஆசிரியர் ஆனார்.

*.1949 ல் கலைஞரின் திரைத்துறை வாழ்க்கை துவங்கியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் அவருக்கு மாதச் சம்பளம் ரூ.500. கலைஞர் நாடகமாக எழுதியிருந்த ‘மந்திரி குமாரி’யைத் திரைப்படமாக்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்.

*.சேலத்தில் அப்போது கலைஞருக்கு அறிமுகமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.

தான் தயாரிக்கும் ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை, வசனத்தை எழுதுமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டு அதற்கு கலைவாணர் அளித்த பணம் – பத்தாயிரம் ரூபாய்.

* 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்கா அருகில் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டபோது, சேலத்திலிருந்து தனது நண்பர் கண்ணதாசனுடன் வந்து கலந்து கொண்டார் கலைஞர்.

* மறுநாள் சென்னை பவளக்காரத் தெருவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பிரச்சாரக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

*1950 – திருச்சியில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தினார்.

* 1951-ல் திராவிட நாடு – கோரிக்கைக்கான கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. அதைக் கண்டித்து ராஜாஜிக்கு எதிராக கருப்புக் கொடிப் போராட்டம் நடந்தபோது கலந்து கொண்டார்.

* 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 அம் தேதி டால்மியா புரம் என்றிருந்த பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்றக் கோரி, ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்துப் போராட்டம் நடத்திய போது, கலைஞர் கைதானார். சில மாதங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.

* 1958-ல் பிரதமர் நேரு தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராகப் பேசியதைக் கண்டித்து அவருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போதும் கைது செய்யப்பட்டார் கலைஞர்.

* 1960-ல் நடைபெற்ற கழகத் தேர்தலில் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

*1962-ல்  தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆனார்.

*1963-ல் ‘இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி’ என்று கூறும் அரசியல் சட்டப்பிரிவை எரிக்கும் போராட்டத்தில் கைதாகி ஒரு வார காலம் சிறை.

* 1965-ல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங் கோட்டையில் தனிமைச் சிறை.

*1967-ல் தி.மு.க ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனார்.

*1968 – சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டை முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவுடன் இணைந்து சிறப்பாக நடத்தினார்.

* 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஆனார். தி.மு.க.வின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

* அதிலிருந்து 2018-ல் கலைஞர் மறையும் வரை எத்தனையோ நிகழ்வுகள் நடந்தாலும் அவருக்கு இறுதி வரை உடன் வந்திருப்பது எழுத்து.

*. “முழுமையாக ஒரு நாள் இதயத்தை இடரும் எந்தச் செய்திகளும் இல்லை – எனவே இன்று நிம்மதி” என்று அமைதியாக ஒரு சேர இரவும், பகலும் இணைந்து கழிந்ததே கிடையாது.

அப்படியொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட எனக்கு, பாலைவனத்தில் நடந்தால் பாதம் கொப்பளிக்குமே என்பது கூடவாத் தெரியாது!

இதயமே கொந்தளித்தது. அதற்கு எந்த மருத்துவரும் தர முடியாத மருந்தாக என் கைவசம் இருப்பது தான் எழுத்து!” – இப்படி எழுத்தைப் பற்றி கலைஞரே எழுதியிருக்கிறார்.

*. “எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்? இனத்திற்கு என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்” – இப்படி அவருடைய இலக்கு பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

*. “வரவேற்காமல் வரக்கூடியது நோய்

தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடியது சாவு

இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும்

உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள் தான்

நிலைத்து வாழக் கூடியவை”

– இது செயல்பாட்டைப் பற்றிய கலைஞரின் எழுத்து.

  • கலைஞரின் திரையிசைப் பாடல் “ வெல்க நாடு”

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே

வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே

படைகள் செல்கவே படைகள் செல்கவே…

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே

தாயின் ஆணை கேட்பதற்குத்

தலை வணங்கும் தங்கமே

தலை கொடுத்து தாயின் மானம்

காத்திடுவாய் சிங்கமே

சென்று வா வென்று வா…

குழலைப் போலை மழலை பேசும்

குழந்தைகளின் முத்தமும்

கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்

கோல மொழி சத்தமும்

உன் குன்றத் தோளில் புது பலத்தை

வழங்குமடா நிதமும்

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்

மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்

மாவீரர்களின் கைகள் சென்று வா சென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா- அவர்

ஒளி விழியில் உலகத்தின் படிவமடா-

வேங்கைப் புலி மன்னனடா

வீரர்களின் தலைவனடா- அவர்

கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே

களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே!”

– காஞ்சித் தலைவன் – படத்தில் இடம் பெற்ற பாடல் – 1963

*
பரிதி பதிப்பகம் வெளியிட்ட மணா-வின் ‘கலைஞர் என்னும் மனிதர்’ தொகுப்பு நூல் –விரிவுபடுத்தப்பட்ட பதிப்பாக – கலைஞர் பிறந்த நாளை ஒட்டி இரண்டாம் பதிப்பாகக் கூடுதல் பக்கங்களுடன் வெளிவர இருக்கிறது.

அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கட்டுரை இது.

You might also like