ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள்!

ளைஞன் ஒருவன் ‘வாழ்க்கை வாழ்வது எப்படி’ என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென் குருவைத் தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.

ஜென் குருவைச் சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆலமரத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார்.

அவரிடம், “வணக்கம் ஐயா… வாழ்க்கையை வாழ்வது எப்படி” என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான்.

“ஓ….. அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார். முன் அறையில் அமருங்கள், வருவார்” என்றவர் ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார் அந்த இளைஞனுக்கு.

இயற்கை எழில் கொஞ்சும் மலையையும், குளிர்ந்த காற்றையும், சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும், ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான். தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார். அவன் எழுந்து வணங்கினான்.
குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.

“வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்” என்றான்.

குரு லேசாக புன்னகை செய்தார். பின்னர், “உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே! அதை வெளியில் கொட்டிவிடு” என்றார்.

அவன் அப்படியே செய்தான். பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.

அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் குரு விடை கூறாமல் மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார்.

அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.

“உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?” என்று கேட்ட துறவியிடம் நடந்ததைக் கூறினான்.

அதற்கு அந்தத் துறவி “குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலைக் கூறிவிட்டாரே”!! என்றார்.

“ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள். மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல், இந்தப் பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை. இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்.” என்று விளக்கினார்  இளம் துறவி.

வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையைப் புரிந்து கொண்டான். அந்த நொடியில் வாழத்தொடங்கினான் மகிழ்ச்சியுடன்.!

நன்றி: முகநூல் பதிவு

You might also like