சோளத்தில் இத்தனை ரெசிபியா?

சமையல் இது ஒரு தனி கலைதான். பாரம்பரிய உணவு தொடங்கி வித்தியாசமான உணவுகள் வரை எல்லோருக்கும் ருசித்துவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றும்.

அந்த வகையில் இந்த தொகுப்பில் சோளத்தில் செய்யக் கூடிய உணவுகளை பார்க்கலாம்.

1] வெள்ளைச் சோளம் தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:

வெள்ளைச் சோளம் – 1 கப்

தண்ணீர் – 4 கப்

தயிர் – 2 கப்

பால் – ½ கப்

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 1 கப்

கேரட் – 1

உப்பு – தேவையான அளவு

மாங்காய் துருவல் தேவையான அளவு

செய்முறை: வெள்ளைச் சோளத்தை மிக்‌ஷியில் உடைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் வேகவைக்கும் போது உப்பு சேர்த்து நன்றாக வெந்த பின் இறக்கவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய கேரட், மாங்காய் தேவையான அளவு, கொஞ்சம் உப்பு தாளித்து இறக்கவும்.

எடுத்து வைத்துள்ள சாதத்தில் தயிர், காய்ச்சி ஆறிய பால், கலந்து தாளித்தவற்றையும் கொட்டி கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் சுவையான சோள தயிர் சாதம் ரெடி.

*****

2] சோள காரப் பணியாரம்

தேவையான பொருட்கள்:

மாவு அரைக்க;

வெள்ளை சோளம் -1 கப்

தோல் உளுந்து – 3 ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

தண்ணீர் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

பெரிய வெங்காயம் – 1

கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மிளகாய் – 1

செய்முறை: மாவு அரைக்க தேவையானவை ஊறவைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், மிளகு பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி அரைத்த மாவில் கலந்து கொள்ளவும்.

பிறகு பணியார கல் சூடானதும் எண்ணெய் தடவி கலந்த மாவை ஊற்றி திருப்பி போட்டு எடுத்தால் சுவையான வெள்ளை சோளப் பணியாரம் ரெடி.

****

3] சோள தோசை

தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்

சோளம் – 1 கப்

உளுந்து – 1/2 கப்

வெந்தயம் – 1/2 ஸ்பூன்

உப்பு

இட்லி அரிசி, சோளம் எல்லாவற்றையும் ஒரே கப்பில் அளந்து கொள்ளலாம்.

எல்லாவற்றையும் கலந்து கழுவி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவு குறைந்தது 5 மணி நேரமாவது புளிக்கவிட வேண்டும்.

மாவு புளித்த உடன் தேவையான அளவு உப்பு கலந்து தோசை கல்லில் தோசையாக ஊற்றி எடுத்தால் சுவையான சோள தோசை ரெடி.

இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா போன்ற வகைகள் பொருத்தமாக இருக்கும்.

*****

4] சோள ரவை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

சோள ரவை – 1 கப்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு, உளுந்து – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

பெருங்காயத் தூள் தேவையான அளவு

உப்பு தே.அளவு

தேங்காய் துருவல் தே.அளவு

கருவேப்பிலை தே.அளவு

செய்முறை;

கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டு பெருங்காயம்,உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோள ரவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

மிதமான தீயில் தாளித்தவற்றையும் கொட்டி கிளறி விடவும். மாவு கொழுக்கட்டை பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான சோளக் கொழுக்கட்டை ரெடி.

– யாழினி சோமு

You might also like