மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது.
“மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம். அன்றே கமலின் தோற்றம் வியப்பாக இருந்தது.
கமலுக்குள் இடைவிடாத கேள்விகள் பல இருந்தது. அதற்கு பதில் நான் சொல்வேன். நானே வெறுப்படையும் அளவுக்கு கமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்.
நான் கன்னடத்தில் ‘கோகிலா’ என்ற படத்திற்கு கமலைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அதேபோல் ‘மூன்றாம் பிறை’ படத்திற்கும் அவரே பொருத்தமானவர் என்று அவரையே நடிக்க வைத்தேன்.
அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. முதலில் மூன்றாம் பிறை படத்தில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்குமா? என்றார் கமல்.
நீங்கள் நடிக்கவே வேண்டாம் இதில் நீங்களாகவே இருந்தால் போதும் என்றேன். அப்படியே செய்தார் விருதை வென்றார்.
சினிமா மேல் இருக்கும் காதல் கமலுக்கு இன்னும் தணியவில்லை. புதுமைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார். ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை. அப்போது கமலைப் பாக்கணும் போல் இருந்தது.
நானும் பார்க்கச் சென்றேன். பார்த்தேன், பேசினேன்.
என்ன திடீர் வருகை என கமல் கேட்டதற்குச் சொன்னேன், “என் உடல் நிலை மோசமாகி விட்டது. நான் இறப்பதற்குள் உன்னைக் காணவேண்டும் என்ற ஆவலில்தான் உனைக் காண வந்தேன்” என்றதும் கமல் என்னை கட்டிப் பிடித்து அழுதார்.
கமலுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவர் எழுதிய ‘பாம்பு’ என்ற சிறுகதையில் அந்த உணர்வே மிகுந்திருந்தது.
கமலைப் பற்றிய இந்த நூல் பதிவு எனக்கு மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. கமலின் தீவிர ரசிகன் நான்.
மூப்பே நெருங்காத இளைஞனாக வலம் வருகிறார் கமல். மணாவின் சில கட்டுரைகளையே நான் படித்திருக்கிறேன். அவரின் இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”