காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!

(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!)

1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தீர்களே. ஒரே ஒரு சந்தேகம். காங்கிரசார் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். இந்த நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நீங்களும் தானே!

உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்தும் ஒப்புக்கொள்ள மனம் இல்லை என்றால், காங்கிரசுக்கென்று தனி நீதிமன்றமும், தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் இருக்கிறதா? அல்லது ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்கிற ஆங்கிலேயரிடமிருந்து இரவல் வாங்கப்பட்ட கட்சி தான் காங்கிரஸ் என்பதால் உங்களுக்கென்று தனிச் சட்ட நியாயங்கள் இருக்கிறதா?

2. முன்பாவது ஒரு காலத்தில் காங்கிரசை வழிநடத்திய மகாத்மா காந்தியின் மெல்லிய சாயல் கொஞ்சமாவது காங்கிரசில் இருந்தது. இப்போது காந்தியின் பெருங்காய வாசனை கூடக் காங்கிரசில் இல்லை.

சத்தியாகிரகம் பேசி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி அகிம்சையைப் போதித்த காந்தியிடமிருந்து வெகு தூரத்திற்கு வந்துவிட்டது காங்கிரஸ்.

கடைசியில் காங்கிரசைக் கலைக்கச் சொன்ன சொல்லைத் தான் கால வேகத்தில் நிதானமாக இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

உண்மையாகவே காங்கிரசுக்கும், காந்திக்கும் இடையில் தொன்மத் தொடர்பாவது தற்போது இருக்கிற மாதிரித் தெரிகிறதா?

3. ராஜீவ்காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டதை யாரும் ஆதரிக்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை நியாயப்படுத்தவும் முயலவில்லை. 31 ஆண்டுகளாகச் சட்டரீதியாகத் தானே குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தது குறித்து 19 வயதான அவருக்கு அதை எதற்காகப் பயபடுத்தப் போகிறார்கள் என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை என்று ராஜீவ்காந்தி கொலை பற்றி விசாரணை செய்த அதிகாரியே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் தவறையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதைத்தீர விசாரித்த அடிப்படையிலேயே பேரறிவாளனின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது. இதை நீங்கள் உணரவில்லையா?

4. காங்கிரசின் அகராதிப்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சட்டரீதியாக வாதாடி விடுதலை பெறவே கூடாதா? ஆயுள் முடிகிற வரைக்கும் சிறையிலேயே இருந்தாக வேண்டுமா?

காந்தி கொலை விவகாரத்திலேயே குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே!

இன்று கோட்ஸேக்களை நியாயபடுத்துகிறார்கள்; காந்தியைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

காங்கிரசில் இருந்த வல்லபாய் பட்டேலை உயரமாக நிறுத்தி காந்தியின் உயரத்தைக் குறைக்கத் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் பார்வையாளராகத் தானே இருந்து கொண்டிருக்கிறது இன்றைய காங்கிரஸ்?

5. இந்திரா காந்தி கொலையுண்டபோது, எத்தனை சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது நிதானமாக “பெரிய மரம் விழுந்தால்” என்று நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி. அதற்கும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு மிகவும் காலதாமதமாக அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள்.

ஆனால், அந்த வருத்தம் கூட தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது, பெரும் இன அழிப்பே நடந்து தமிழ்ச் சமூகம் சிதறடிக்கப்பட்டபோது, நீங்கள் தெரிவிக்கவில்லை. மாறாக இலங்கையில் இன அழிப்பு தமிழர்களுக்கு எதிராக நடந்தபோது, அதற்குத் துணை நின்றீர்கள்.

கொத்துக் கொத்தாக எம் தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கு இவ்வளவு காலமாகியும் உரிய நியாயம் சர்வதேச அளவில் கிடைக்கவில்லையே? இதற்குக் காரணம் யார்?

6. அதற்கு முன்பு இலங்கைக்கு இந்திய அமைப்படையை அனுப்பியது இதே காங்கிரஸ் தானே! அமைதி காக்கப்போன படையினர் இலங்கையில் நடத்திய அத்துமீறல்களை அப்போது யார் கண்டித்தார்கள்?

அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர் அமைதிப்படை சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது வரவேற்கச் செல்ல மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லையா?

7. காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை குறித்து “சட்டப்படியான விசாரணை நடக்கட்டும்” என்று பல பேட்டிகளில் தெரிவித்திருந்த நிலையில், இப்போது தமிழக காங்கிரசார் நடத்திய போராட்டம் தலைமைக்குத் தெரியாமலா நடந்திருக்கப் போகிறது? ஏனிந்த இரட்டை முகம்?

அண்மையில் தமிழகத்திற்கு வந்திருந்த போது தமிழைப் பற்றியும், “நானும் தமிழன்” என்று பேசியதெல்லாம் தமிழர்கள் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்.

தமிழினத்தை அண்டை நாட்டில் கொத்தாகச் சாகடிக்கத் துணைபுரிந்துவிட்டு, காலங்கடந்து தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்தினால், அந்த அடையாளம் இங்கு செல்லுபடி ஆகுமா?

8. பேரறிவாளனை தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கட்டிப்பிடிப்பது தான் திராவிட மாடலா என்று கூட காங்கிரசிலிருந்து ஒரு சில குரல்கள் கேட்டிருக்கின்றன.

கூட்டணியில் சேர்ந்து அதன் பலத்தில் தாங்களும் சில பல தொகுதிகளில் ஜெயிப்பதற்கு மட்டும் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டியிருக்கிறது.

ஏன்… தனித்து நின்று தமிழ்நாட்டில் தங்கள் பலத்தை காங்கிரஸ் நிரூபிக்கத் தயாராக இருக்கிறதா?

9. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, காமராஜர், கக்கன் போன்று அளப்பரிய தலைவர்களால் வளரத்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1967 ல் ஏன் விழுந்தது என்பதை காங்கிரஸ் என்றேனும் உணர்ந்திருக்கிறதா?

மொழிப் போராட்டம் இதே தமிழக மண்ணில் நடந்து, பல இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்தபோதும் கூட, அந்தப் போராட்டத்தின் வீர்யத்தைக் கொஞ்சமும் உணராமல், அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தது காங்கிரஸ்.

அதனால் தானே விருதுநகரில் – தனது சொந்தத் தொகுதியில் சீனிவாசன் என்கிற மாணவர் தலைவரிடம் பெருந்தலைவரான காமராஜர் தோற்க நேர்ந்தது?

சுற்றியுள்ள சமூகத்தின் உணர்வைச் சரிவர உணராமல் போனதால் தானே காங்கிரஸ் அன்றைக்குச் சரிவைச் சந்தித்தது? அதே மனநிலை தானே இன்று வரை காங்கிரசுக்கு இருந்து கொண்டிருக்கிறது?

இந்த மனநிலையில் இருக்கிற வரை “காமராஜர் ஆட்சி” என்பது காங்கிரசுக்கு வெறும் கனவு அல்லது வெற்றுச் சொல் மட்டும் தான்.

10. அண்மையில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் மக்களிடம் சென்று சேர்வதில் பா.ஜ.க.வின் முன்னேற்றமான நிலை பற்றியும், காங்கிரஸ் பின்தங்கிப் போயிருப்பது பற்றியும் பேசிவிட்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை போவது பற்றியும் பேசியிருக்கிறார் ராகுல்காந்தி.

ஆக – தங்களுடைய பலவீனத்தைக் காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருப்பதின் அறிகுறிகள் தானே இந்தப் பேச்சு. காங்கிரஸ் தன் பலவீனத்தை உணர்ந்து, தங்களின் வறட்டுப் பிடிவாதங்களை விட்டு வெளியே வராத வரை, அவர்கள் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கே உதவுவதாகத் தான் அர்த்தம்.

இப்போதைக்கு அது தான் உண்மையும் கூட. தமிழக காங்கிரஸூம் இதற்கு விதிவிலக்கல்ல. சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறினால், ஏற்கனவே சரிந்து போயிருக்கிற காங்கிரஸ் இதைவிட மோசமாகத் தனிமைப்பட்டுவிடும்.

முதலில் தமிழக காங்கிரசார் தங்களின் முகத்தை ரசம் குறைந்து போயிருக்கும் தங்கள் கண்ணாடிகளில் கண்களை மூடாமல் பார்க்க வேண்டும். தங்கள் கட்சியின் அசலான எடையை கால இயந்திரத்தில் நிறுத்திப் பார்த்தாக வேண்டும். பார்ப்பார்களா?

நிறைவாக காங்கிரசாருக்கு செந்தமிழில் சொல்ல விரும்புவது ஒரே ஒரு வார்த்தைதான் – தீதும் நன்றும் பிறர்தர வாரா.

– யூகி

You might also like