ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!

– முனைவர் குமார் ராஜேந்திரன்

***

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு

*

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது.

1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளை அறிந்திருந்த இவருக்குச் சிறுவயதில் இருந்தே கலைகளில் ஈடுபாடு.

அதனால் பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி என்று நாட்டியங்களைக் கற்றுக் கொண்டவர் தமிழ் சினிமா இயக்குநரான கே. சுப்பிரமணியம் நடத்தி வந்த ‘நிருத்யோதயா’ நாட்டியப் பள்ளியில் முதல் மாணவியாகச் சேர்ந்தார்.

அங்கு நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ‘நடன கலா சேவா’ என்று தனியாக நாட்டியக் குழுவை ஆரம்பித்து நாட்டிய நாடகங்களை நடத்தியிருக்கிறார்.

இதையடுத்து 1937 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் 31 படங்கள் வரை நடித்திருக்கிறார். அப்போதே அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்திருக்கிறார்.

அப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர், பிறகு 1962 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்க்கைத் துணை ஆனார். திரைத்துறையை விட்டு விலகி எம்.ஜி.ஆரைப் பாதுகாக்கும் நிழலைப் போல மாறினார்.

திரைத்துறை, அரசியல் என்று எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்குப் பின்னணியாக நின்றவர் ஜானகி அம்மாள்.

1956 ல் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் துவக்கப்பட்டபோது அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும், இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தவர் ஜானகி அம்மையார்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘நாடோடி மன்னன்’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய  படங்களின் வெற்றியில் முக்கியப் பங்கு இவருக்குண்டு.

ஜானகி அம்மாள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அதாவது எம்.ஜி.ஆருடன் திருமணம் நடப்பதற்கு முன்பாகவே வாங்கப்பட்டது தான் தற்போது சென்னை லாயிட்ஸ் ரோட்டில் (அவ்வை சண்முகம் சாலை) இருக்கும் அ.தி.மு.க தலமைமை அலுவலகம். அவரால் கட்சிக்கு அளிக்கப்பட்ட அந்த இடம் தான் அ.தி.மு.க.வின் இதயத்தைப் போல இன்றும் இருக்கிறது.

1967-ல் எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்ட போதும், 1984-ஆம் ஆண்டில் உடல்நலம் குன்றி அவர் சிகிச்சை எடுத்தபோதும் அவருடனேயே இருந்து அவரை நலத்துடன் மீட்டு எடுத்தவர் இவர்.

எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது உடனிருந்து கவனித்துக் கொண்ட ஜானகி அம்மையார், அவர் சிகிச்சை பெற்றுத் தமிழகம் திரும்பிய பிறகு எங்கு சென்றாலும் உடன் சென்று அவரைப் பாதுகாத்துத் தந்தவர்.

அரசியலிலும் அவருக்குப் பின்னணியில் பக்க பலமாக நின்றவர். அ.தி.மு.க என்ற இயக்கத்தை தன்னலம் பாராமல் ஒன்றிணைத்தவர் என்று அவருடைய சிறப்பு இயல்புகளை அ.தி.மு.க தொண்டர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அந்த விதத்தில் தமிழக அரசியல் வரலாற்றிலும், அ.தி.மு.க.வின் வரலாற்றிலும் தனித்துச் சிறப்பிடம் வகித்தவர் ஜானகி அம்மாள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

அவருக்கு உரிய மதிப்பு அளிக்கும் விதத்தில் அவருடைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் அபிமானிகளின் விருப்பம்.

ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்கும் நேரத்திலாவது அவர்களுடைய எளிய விருப்பத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

நூற்றாண்டுத் தருணத்தில் ஜானகி அம்மா படித்து வளர்ந்த கும்பகோணத்தில் அவருடைய உருவச்சிலையை அமைக்க வேண்டும். அவருடைய நினைவைப் போற்றும் விதமாக அரசு இதைச் செய்ய வேண்டும்.

திரைத்துறையிலும், தமிழக அரசியலிலும் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்திருக்கிற ஜானகி எம்.ஜி.ஆரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக இந்தச் செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

பரபரப்பான அரசியல் சூழலில் பெருந்தன்மையான அரசியல் பார்வையோடு தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயங்கியிருக்கிற அவரை நினைவில் நிறுத்துவோம்.

You might also like