பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!

மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக ஒருவர் வழக்குத் தொடுத்து நீதிமன்றம் அதைத் தள்ளுபடி பண்ணியது வரை எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இஸ்லாமிய மாணவிகள் உடை உடுத்துவது கூடச் சர்ச்சையாகி இருக்கிறது. உடை மட்டுமல்ல, உணவு கூடச் சர்ச்சைப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

அமைதியான குளத்தில் தொடர்ந்து கற்களை வீசி எறிவது மாதிரி பல சம்பவங்கள்.

ஏன் இந்த நிலை? எதனால் இதைப் போன்ற நிகழ்வுகள் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு துளிர் விட்டிருக்கின்றன? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதம் தொடர்பான சண்டைகள் நடந்திருக்கலாம். ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்திருக்கலாம்.

அதைக் காரணமாக வைத்து இப்போது தொல்லியல் ஆய்வைச் செய்து வன்மத்தை வளர்த்துப் பிரச்சினை ஆக்கினால், அதை நாகரீகம் என்று சொல்ல முடியுமா?

எவ்வளவு இயல்பான மத நல்லிணக்கம் இங்கு நிலவியது?

இந்துக்களின் விழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்கிறார்கள். நாகூர் அனிபாவில் பாடல்களை விரும்பிக்கேட்கும் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள். நாகூர் தர்ஹாவுக்குப் போகும் இந்துக்களைப் பார்க்க முடியும்.

டி.எம்.எஸ் குரலில் முருகன் பாடல்களை விரும்பிக் கேட்கும் கிறித்துவர்கள் இருந்திருக்கிறார்கள். பண்டிகைக் காலங்களில் உணவைப் பரஸ்பரம் பரிமாறி மகிழ்கிறார்கள். மற்றவர்களுடைய இறை நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் சாதாரண மக்கள் மதிக்கவே செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட அமைதி தான் இங்கு விரவியிருக்கிறது.

மதங்களைத் தாண்டி மக்களை இணைக்கிற விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது?

அந்தப் பொது அமைதியைக் குலைக்கச் சிலச் சில முயற்சிகள் நடக்கின்றன. இதற்குச் சில குழுக்கள் ஆதரவாக இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இதற்கான குரல் கேட்கிறது.

மக்களை ஒருங்கிணைப்பதை விட, அவர்களைக் கூறு போட்டு, பிறப்பால் ஒட்ட வைக்கப்பட்ட மத அடையாளங்களை நினைவூட்டிப் பிரிவு மனப்பான்மையை வளர்ப்பதற்கும், வீண் பகைமையை வளர்ப்பதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அனைத்து மதத் துறவிகளும், தலைவர்களும் மத பேதங்களை மீறிய ஒற்றுமை உருவாகவே இங்கு பாடுபட்டிருக்கிறார்கள். பாகுபாடற்ற மன ஒருமைப்பாட்டைப் பற்றியே பேசி வந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பொருளாதாரத்தினால் பலருடைய வாழ்வாதாரம் குலைந்திருக்கும் நிலையில், புற அடையாளமான மதங்களை முன்னிறுத்தி யார் சலனங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், அதற்கு இடம் தராத, அதைப் புறக்கணிக்கிற மனம் தான் இப்போதைய தேவை.

நம்மைப் பிரிக்க நினைப்பவர்களை நம்மிடமிருந்து பிரிப்போம்.

மனிதத்தோடு இயல்பாக இணைந்திருப்போம்!

-யூகி

You might also like