ரங்கா – கையளவு ‘ஏலியன்’ கதை!

சில படங்கள் வெகு நேரம் ஓடி நம் பொறுமையைச் சோதிக்கும்; சில மிகக்குறைவான நேரம் ஓடி திருப்தியின்மையை உருவாக்கும்.

சிபிராஜ், நிகிலா விமல், சதீஷ், ஷா ரா, மோனிஷ் ரஹேஜா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ரங்கா’ ரத்தினச்சுருக்கமாக அமைந்து நிறைவைத் தராமல் போயிருக்கிறது.

சொல்பேச்சு கேளாத கை!

ஒருவரது கை அவரது மூளையின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படாமல் போவதை ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ (Alien Hand Syndrome) என்று சொல்வார்கள்.

அப்படியொரு வினோதமான நோய்க்கு ஆளாகிறார் ஆதித்யா (சிபிராஜ்). இதனால் உறவுகள், நட்புகளை இழக்கும் சூழலுக்கு ஆளாகிறார்.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க, எந்நேரமும் ‘ஸ்மைலி’ பந்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்வே நரகமாக மாறும் அபாயம் உருவாகிறது.

அலுவலகத்தில் உடன் பணியாற்றும் அபிநயாவின் (நிகிலா விமல்) நட்பு கிடைத்தபிறகு ஆதித்யா வாழ்க்கை அடியோடு மாறுகிறது. ஒரு நன்னாளில் தன் காதலை ஆதித்யா வெளிப்படுத்த, இருவருக்கும் உடனடியாக திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

திருமணத்தின்போது ஆதித்யாவின் கையில் இருக்கும் பந்தை எவரும் பிடுங்கிவிடக் கூடாதென்று அவர் தரப்பு முயற்சிக்க, இப்பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுகிறார் அபிநயா.

அதன் பலனாக, ஒரு மருத்துவரையும் சந்திக்க தீர்வு கிடைக்கிறது. ஆதித்யாவின் கையில் ஒரு மருத்துவக்குணமிக்க மாலையொன்று கட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருமணம் இனிதே நடைபெற இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்கு தேனிலவுப் பயணம் மேற்கொள்கின்றனர். அங்கிருக்கும் ஒயிட் மவுண்டெய்ன் ஹோட்டலில் தங்குகின்றனர்.

சில நாட்கள் தேனிலவைக் கொண்டாடியபிறகு, ஒருநாள் அந்த ஹோட்டலுக்கு வரும் தம்பதிகளின் அந்தரங்கம் படம்பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் விவரம் ஆதித்யாவுக்கு தெரிய வருகிறது.

இந்த உண்மை அபிநயாவுக்கு தெரியாமல் மறைப்பதோடு, எவ்வாறு அந்த இடத்தை விட்டு இருவரும் தப்பிக்கின்றனர் என்பது மீதிக்கதை.

ஆதித்யாவின் கதையோடு, சில நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரங்க அரசுடையான் எனும் மன்னரும் இதேபோன்றதொரு பிரச்சனையில் சிக்கினார் என்பதாக இடைக்கதை ஒன்றும் உண்டு.

நாயகனுக்கு உள்ள நோய்தான் அவரைப் பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது எனும் ஒருவரிக் கதை அருமை. ஆனால், அதனை வெகுசாதாரணமான காட்சிகள் கொண்டு சொன்னதில் கவனம் ஈர்க்கத் தவறியிருக்கிறது.

நழுவிய வாய்ப்பு!

இரண்டாண்டுகளுக்கு முன் ‘காட்பாதர்’ என்றொரு படம் வந்தது. அதில், அபார்ட்மெண்டுக்குள் மாட்டிக்கொண்ட மனைவியையும் மகனையும் மீட்கப் போராடுவார் நாயகன்.

கிட்டத்தட்ட அதேபோன்ற காட்சிகள் என்றாலும், இதில் பெரியளவில் திரைக்கதை திருப்பங்கள் இல்லை.

அதனாலேயே இமாலய மலையின் சில்லிடும் அழகு பின்னணியாக இருந்தும் காட்சிகள் வெகுவேகமாக நகர்கின்றன மனதில் பதியாமல்.

தான் நடிக்கும் படங்களின் ஒன்லைன் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று சிபிராஜ் மெனக்கெடுவது தெளிவாகப் புரிகிறது.

அதற்கேற்றவாறு முழு திரைக்கதையும் அமையால் போவதே அவரது படங்களின் மீது கவனம் விழாமல் செய்துவிடுகிறது. ’ரங்கா’வும் அதிலொன்று.

காதல், நகைச்சுவை, பயம் என்று காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளை அளவுடன் கொட்டுவதில் ‘எக்ஸ்பர்ட்’ ஆக இருக்கிறார் நிகிலா.

ரேணுகா, சதீஷ், ஷா ரா, மனோபாலா, சுவாமிநாதன் உள்ளிட்டோரின் நகைச்சுவை தொடக்கத்தில் லேசுபாசாக நம்மைச் சிரிக்க வைக்கிறது. அதன்பின்பு, அப்படியொரு வாய்ப்பே திரைக்கதையில் வைக்கப்படவில்லை.

வில்லன் கும்பலில் மோனிஷ் ரஹேஜா மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.

அர்வியின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமையாக இருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் படுவேகமாகச் சுற்றிச் சுழன்றிருக்கிறது. ராம்ஜீவனின் இசையில் மெலடி மெட்டுகள் மனதில் ஒட்ட, பின்னணி இசை திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ரூபன் படத்தொகுப்பில் ஒவ்வொரு காட்சியும் ஜெட் வேகத்தில் நகர, இன்னும் கொஞ்சம் திரைக்கதை ஆங்காங்கே நீண்டிருக்கலாமோ என்ற எண்ணம் பலப்படுகிறது.

வீணாக்கப்பட்ட ரஜினி பட தலைப்பு!

பொல்லாதவன், படிக்காதவன், பாயும் புலி வரிசையில் அவர் நடித்த ‘ரங்கா’ எனும் தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறது இப்படக்குழு.

அதற்கான காரணம் கதையில் இருந்தாலும், அது முழுமையாக நம்மை கவர்ந்திழுக்கவில்லை. இதனால், இன்னொரு ரஜினி பட தலைப்பு வீணான உணர்வே ஊற்றெடுக்கிறது.

நீண்ட தாடியுடன் இருக்கும் சிபிராஜை ‘ட்ரிம்’ செய்து அழகாக காட்ட வேண்டுமென்று மெனக்கெட்டதிலேயே திரைக்கதையின் அழுத்தம் கொஞ்சம் குறைந்துவிடுகிறது.

சிபிராஜுக்கும் நிகிலாவுக்குமான காதலில் குறும்பு கொப்பளிக்கத் தொடங்கியவுடனேயே கல்யாண கலாட்டா வந்துவிடுகிறது.

அதற்கடுத்தாற்போல தேனிலவுக் காட்சிகள். அதிலாவது மனதைத் தொடும் காதல் சொல்லப்படுகிறதா என்று உற்றுக் கவனிக்கும் முன்னரே ரத்தக்களறி தொடங்கிவிடுகிறது.

திரைக்கதையில் இந்த இடத்தைச் சமன்படுத்த தவறியிருப்பது மட்டுமே அதற்குப் பின்வரும் செம ‘ட்ரிம்’மான காட்சிகளை ‘போர்’ என்று சொல்ல வைக்கிறது.

அதிலும், பட்ஜெட் காரணமாக ரங்க அரசுடையான் சம்பந்தப்பட்ட களப்பிரர் காலத்து கதை வெறுமனே சில நொடி கிராபிக்ஸ் உடன் முடிவடைந்துவிடுவதும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்துவதில்லை.

இமாச்சலப் பிரதேசத்தில் எங்கெங்கும் வில்லன் ஆட்கள் மட்டுமே இருப்பதாக காட்டப்பட, மருந்துக்கு கூட ஒரு போலீஸை கூட காட்டாமல் விட்டிருப்பது திரைக்கதையை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.

இதனால் வலுவான கதைக்கரு, நல்லதொரு லொகேஷன், செமையான நடிப்புக் கலைஞர்கள், அற்புதமான காட்சியாக்கம் எல்லாம் இருந்தும் சட்டென்று மனதில் ஒட்டாமல் போயிருக்கிறது ‘ரங்கா’.

ஒருவேளை இக்கதைக்கு வேறொருவர் அல்லது இன்னொரு குழு கொண்டு இயக்குனர் வினோத் டி.எல். திரைக்கதை அமைத்திருந்தால் இக்குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.

கிட்டத்தட்ட முழுதாகத் தயாராகி மூன்றரை ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு திரையைத் தொட்டிருக்கிறது ‘ரங்கா’. ஆனாலும், காட்சிகளில் பழைய நெடியை உணர முடியவில்லை.

அந்தளவுக்கு நம் பொதுப்புத்திக்கு எட்டாததாக இருக்கிறது ’ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’. அதுவே இப்படத்தின் பெரும்பலம்.

இப்படியொரு சிறப்பு இருந்தாலும், அதற்கேற்றவாறு திரைக்கதை வடிக்கப்படாத காரணத்தால் நம்மை ஈர்க்காமல் நழுவிச் செல்கிறது ‘ரங்கா’.

திரைக்கதையில் வெறுமனே கையளவு மட்டும் சிறப்பான அம்சங்களைப் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ளவற்றை காற்றில் கரைய விட்டிருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

You might also like