– போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்
பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்துவிட்டேன்.
இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும்.
கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், முதலமைச்சர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த ஓராண்டில், 112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், “கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது” என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.