கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.

***

“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.

அதனால் இவன் ஒருவனை கடத்தினால் வீடு அமைதியாகிவிடும் என்பது அப்பாவின் கணிப்பு, ஆகவே பாட்டு எழுதப்போகும் போது “நீ வந்து வண்டியில் ஏறு” என்று சொல்லி என்னையும் பாடல் எழுதும் இடங்களுக்கு அழைத்துப் போய்விடுவார். இது அவரைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய பயன்பட்டது.

அப்படித்தான் 1969-ம் ஆண்டில் வெளிவந்த ‘சாந்தி நிலையம்’ படத்தில் பாடல் எழுதும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

சரி பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை சொல்லுங்கள் என்றார்.

பள்ளிப் பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர். இதுதான் சூழ்நிலை என்றார் இயக்குனர்.

ட்யூன் போட்டாகி விட்டது பத்து நிமிடம் யோசித்தவர் எழுதிக்கொள் என்று சொன்ன பாடல்தான் “கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்” பாடல்.

பாடல் நன்றாக வந்தது, “இன்னொரு பாட்டுக்கும் எழுதலாமா? கவிஞரே” என்றார் இயக்குனர்.

’சரி சூழ்நிலையை சொல்லுங்கள்’ என்றார் அப்பா.

“அதே சூழல்தான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்” என்றார் இயக்குனர்.

“அப்படியா” என்ற அப்பா முதல் பாடலின் எந்த வரியும் பொருளும் திரும்ப வராமல் “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்” என்ற பாடலைச் சொன்னார்.

பாடல் பிரமாதமாக இருப்பதாக பாராட்டிய இயக்குனர் கவிஞர் உற்சாகமான மூடில் இருப்பதை புரிந்து கொண்டு ”இன்னொரு பாடல் சூழ்நிலை சொல்லவா” என்றார்.

“சரி சொல்லுங்கள்” என்றார் கவிஞர்.

“அதே சூழ்நிலைதான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்” என்றதும் “என்னப்பா இப்பதானே இரண்டு பாடல் கொடுத்தேன்” என்றவர்,

“சரி, எழுதிக்கோ” என்று சொல்லி மூன்றாவதாக சொன்ன பாடல்தான் “செல்வங்களே” என்ற பாடல்.

கைதட்டி பாராட்டிய இயக்குனர் “இந்தப் படத்தின் நாலாவதாக இடம்பெறும் ஒரு பாடலையும் கொடுக்கமுடியுமா?” என்று கேட்டார்.

“ம்” என்றார் கவிஞர்.

இயக்குனர் மிக மெல்லிய குரலில் “அதே சூழ்நிலைதான், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்” என்றதும் அப்பா டென்ஷனாகிவிட்டார்.

“ஏம்பா படம் முழுவதும் பிள்ளைகளை வெளியேவே கூட்டிட்டு போக போறீங்களா?” என்று வேடிக்கையாகக் கேட்டவர், “சரி பாடலைத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு தந்த பாடல்தான் ‘இறைவன் வருவான்’ என்ற பாடல்.

இப்படி ஒரு சூழலுக்கு நான்கு விதமான பாடல்களை அப்பாவால் மட்டுமே தரமுடிந்தது. அதுதான் அவரது அபார ஆற்றல்!

– நன்றி: தினமலர்.

You might also like