உலகின் முதல் மாய எதார்த்த கதை?

படித்ததில் ரசித்தது:

எழுத்தாளர் தமிழ்மகன் உலகின் முதல் மாய எதார்த்த கதை பற்றிய குறிப்பை பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அந்த சிறு கட்டுரை தமிழ்நாடு டைம்ஸ் இதழுக்காக எழுதியது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சுவையான தகவல்கள் அடங்கிய இக்கட்டுரையை ‘தாய்’ இணைதள வாசகர்களும் வாசித்து மகிழட்டும்.

நூற்றுக்கணக்கான மகாபாரதம் இருப்பதாக கூறுவர். துரியோதனனை கதாநாயகனாக சித்தரிக்கும் மகாபாரதம்கூட உண்டு.

ஜெயம் என்பது ஆரம்பகாலக் மகாபாரதம். 7000 பாடல்களாக இருந்து ஒரு லட்சம் பாடல்களாக விரிவானதுதான் மகாபாரதம். காலம்தோறும் மகாபாரதம் விரிவடைந்தது.

இதிலே தேரையர் எனும் சித்தர் எழுதிய மகாபாரதம் முற்றிலும் வித்தியாசமானது. இது மருத்துவ பாரதம். இதில் கௌரவர்கள் அனைவரும் நோய்கள்… பாண்டவர்கள் மருந்துகள். நோயும் மருந்தும் போரிடுகின்றன.

மருந்துகளுக்கு தலைவராக இருந்து வழிநடத்துகிறார் கிருஷ்ணர். இறுதி வெற்றி மருந்துக்கு. இப்படியாக மகாபாரதத்தை வித்தியாசமாக சித்தரித்திருக்கிறார் தேரையர்.

ஆங்கிலத்திலே ஏசுவை மையப்படுத்தி நூல்கள் வெளிவந்துள்ளன. டான் ப்ரௌன் எழுதிய டாவின்சி கோட் என்ற கதையை பலர் படித்திருப்பார்கள். அது திரைப்படமாகவும் வெளி வந்தது.

ஏசுவின் சீடர்களில் ஒரு பெண்ணும் இருந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கும் ஏசுவுக்கும் நெருக்கமான உறவு இருந்ததாகவும் அந்தக் கதை நகரும்.

ஏசு இறந்த இரண்டாம் நாள் அவரைப் புதைத்த இடத்திலிருந்து அவரை அப்புறப்படுத்தி விட்டதாகவும் மூன்றாம் நாள் தோண்டிப் பார்த்தபோது அந்த இடத்தில் அவர் இல்லை என்றதும் அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாக இன்னொரு கதையும் வெளி வந்தது. அதற்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.

உலகம் முழுக்கவே பழைமையான ஒரு கதையை வேறுவிதத்தில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். அதை இலக்கிய உலகில் கட்டுடைத்தல் என்பார்கள்.

தமிழ்மகன்

இதையே இன்னும் கொஞ்சம் முன்பின்னாக நான்லீனியர் பாணியில் சொன்னால் மாய எதார்த்த வாதம் என்றும் சொல்வார்கள்.

அந்த விதத்தில் உலகின் முதல் கட்டுடைத்தல் கதையாக, மாய எதார்த்தவாத கதையாகத் தேரையரின் மருத்துவ பாரதத்தைப் முடிகிறது.

உதாரணத்துக்கு மகாபாரதத்தின் மூல கதாபாத்திரம் சாந்தனு மகாராஜா. மருத்துவ பாரதம் இவரை முதுகெலும்பு என்று வர்ணிக்கிறது. கிருஷ்ணர் மருத்துவராக அறிமுகமாகிறார்.

பஞ்சபாண்டவர்கள் பஞ்ச பூதங்களாக – அதாவது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.  கர்ணன் வயிற்று உபாதை என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனன் எய்தும் பாசுபதமே தாமிர பஸ்பம்.

வயிற்று வலிக்கு தாமிர பஸ்பம் தான் மருந்து என்கிறார் தேரையர்.இப்படியாக முழு நூலும் செய்யுளாகவும் நாடக வடிவிலும் அமைந்துள்ளது. இன்றைய மாய யதார்த்தவாதம் போன்ற உத்திகளை அன்றே இலக்கியத்தில் புகுத்தியவர் தேரையர்.

கார்ஸியா மார்க்வெஸ், மாய எதார்த்த வாதத்துக்காகப் போற்றப்படுபவர். தேரையரைப்  பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய இலக்கிய பரிசோதனைகளை செய்து பார்த்திருப்பது தெரிகிறது. அடிப்படையில் அவர் ஒரு சித்தர். சித்த மருத்துவர்.

யமக வெண்பா என்கிற மருத்துவ நூலும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை  சொல்கின்றன. அடுத்தடுத்த அடிகளில் ஒரே சொற்களைக் கையாண்டு வெவ்வேறு பொருள்களை உருவாக்கி  சிலேடையில்  ஆச்சரியபடுத்துகிறார். தமிழ் உத்தியும் மருத்துவ தெளிவும் பிரமிக்கவைக்கின்றன.

தேரையரின் இயற்பெயர், ராமதேவன் என்கிறது அபிதான சிந்தாமணி. பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில.

வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா என்பவையும் அவர் எழுதிய நூல்களே. சித்தர் மரபிலே இதிகாச இலக்கிய செறிவும் மருத்துவ அறிவும் கொண்டவர் இவர் ஒருவரே.

-பா.மகிழ்மதி

You might also like