கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும் தயார்படுத்தி ஏற்படுத்தி தினமணியில் வெளிவந்ததும் உண்டு.
அந்தக் கட்டுரை உள்ளடக்கி என்னுடைய நூலாக கடந்த 1995 ஆண்டு மார்ச் மாதம் “உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று மயிலை பாரதிய வித்யா பவன் வெளியிட்ட நூலில் இடம்பெற்றுள்ள கண்ணகி கோவில் வரைபடம் இது.
தன் கணவன் கோவலன் கொல்லப்பட்டதையறிந்த கண்ணகி, மாமதுரை பாண்டிய மன்னனின் அரசவைக்கு நேரில் சென்று நீதி கேட்டு முறையிடுகிறாள்.
பாண்டிய மன்னன், தான் தவறிழைத்ததை அறிந்து உயிர் துறக்கிறான். கோபம் கொண்ட கண்ணகி மதுரை மாநகரையேத் தீக்கிரையாக்கிச் சாபமிடுகிறாள்.
பின்னர் அங்கிருந்து நடைப்பயணமாகக் கிளம்பி, பதினான்கு நாட்களுக்குப் பின்பு, திருச்செங்குன்றம் எனும் மலைப்பகுதியைச் சென்றடைகிறாள்.
அங்கிருந்த மலைவாழ் மக்களிடம் அவள் கதையைக் கூறி, அங்கிருந்து கணவன் கோவலனுடன் விண்ணுலகம் சென்றடைந்தாள் என நம்பிக்கை.
பழங்குடியின மக்களின் வழியாக, கண்ணகியின் கதையை அறிந்த சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு மலைப்பகுதியில் கோவில் அமைத்து வழிபட்டான் என்கிறது வரலாறு.
தேனி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், பிற்காலத்தில் சரியான பராமரிப்பின்றி சிதைந்து போய்விட்டது.
அதன் பிறகு, இக்கோயிலைப் புதுப்பிக்கத் திட்டமிட்ட நிலையில், கோவில் அமைந்திருக்கும் பகுதியானது தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையாக உருவெடுத்தது.
அதன் பிறகு, இன்று வரை கோவிலைப் புதுப்பிக்க முடியாமல் இருந்து வருகிறது. கோவிலுக்குச் செல்ல சரியான பாதையின்றி, ஆண்டுக்கொரு முறை (சித்திரை முழுநிலவு) மட்டுமே வழிபாடு செய்யப்படும் கோயிலாக சிதைந்து போய்க் கிடக்கிறது.
இதற்கு என்ன காரணம்? இதனை எப்படிச் சீரமைப்பது? ஆண்டுக்கொரு முறை என்றிருக்கும் வழிபாட்டை மாற்ற முடியாதா? இதில் இருக்கும் இடையூறுகள் என்ன? இந்த இடையூறுகளைத் தகர்க்க என்ன வழி?
என்பது இன்றைய நமது கேள்விகள்.
முதலில், தேனி மாவட்டம், கூடலூர், பளியன்குடியிலிருந்து மங்கலதேவி கண்ணகி கோவிலுக்குச் செல்லும் நடைபாதையை மாற்றி, புதிய சாலை அமைக்க வேண்டும்.
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.