செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!

உலக செலிவியர் தினம்: மே-12

உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’.

தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நோயாளிகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்.

இந்த நாள் உருவாக காரணமாக இருந்தவர் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்ற செவிலியர். இந்த நாளில் அவரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் 1820-ம் ஆண்டு மே 12-ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

வசதியான குடும்பத்தில் பிறந்த நைட்டிங்கேல், சிறு வயதிலேயே ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளைக் கற்றுக் கொண்டார்.

மொழிகள் மட்டுமின்றி கணக்கு மற்றும் தத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் சிறு வயதிலேயே அவர் தேர்ச்சி பெற்றார்.

நைட்டிங்கேலுக்கு 16 வயதாக இருந்தபோது, செவிலியராகும் (நர்ஸ்) தனது விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் செவிலியருக்கு உரிய மரியாதை அளிக்கப்படாமல் இருந்தது.

அவர்களுக்கான ஊதியமும் குறைவாக இருந்தது. இதனால் அவரது விருப்பம் பெற்றோருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

வேறு ஏதாவது தொழிலைத் தேர்ந்தெடுக்குமாறு நைட்டிங்கேலிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தன் எண்ணத்தில் பிடிவாதமாக இருந்த நைட்டிங்கேல், லண்டன் நகரை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தார்.

தனது தொழிலை ஆத்மார்த்தமாக காதலித்த அவர், அதற்காக திருமணத்தைத் தவிர்த்தார்.

1850-களில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோவியத் நாடுகளிடையே நடந்த போரின்போது (கிரிமியன் போர்), காயமடைந்த இங்கிலாந்து வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் 38 செவிலியர்களைக் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று செயல்பட்டார் நைட்டிங்கேல்.

இந்தப் போர் நடந்த காலகட்டத்தில் இரவில் சிறு விளக்கு ஒன்றை கையில் ஏந்தி போரில் காயமடைந்த வீரர்களைத் தேடிப்பிடித்து சேவையாற்றியதால், ‘கைவிளக்கேந்திய காரிகை’ (Lady with the Lamp) என்று புகழப்பட்டார் நைட்டிங்கேல்.

நோயாளிகளிடம் ஒரு தாதியாக மட்டும் அல்லாமல், ஒரு சகோதரியாக, அன்னையாகப் பழகினார். அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்களை எழுதிக் கொடுத்தார். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார்.

செவிலியர் துறைக்கான பிரத்யேக புத்தகமான ‘நோட்ஸ் ஆன் நர்சிங்’ என்ற நூலை எழுதினார். இந்நூல் இன்றுவரை செவிலியர் துறைக்கு வருபவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளைக் கூறும் வேத நூலாக இருந்து வருகிறது.

நைட்டிங்கேலின் சேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட இங்கிலாந்து ராணி விக்டோரியா, இவரது விசிறியாக மாறினார்.

ராணியின் விருப்பத்துக்கு ஏற்ப 1856-ம் ஆண்டில் அவரை நைட்டிங்கேல் சந்தித்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இருவரும் நெருங்கிய தோழிகளாய் இருந்தனர்.

அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்த சமயத்தில் அந்நாட்டுக்கு சென்று சேவையாற்றிய நைட்டிங்கேல், அந்நாட்டின் முதலாவது நர்ஸ் என்று அறியப்படும் லிண்டா ரிச்சர்ட்சுக்கு பயிற்சி கொடுத்தார்.

90 வயதுவரை வாழ்ந்த நைட்டிங்கேல், 1910-ம் ஆண்டு லண்டன் நகரில் காலமானார்.
மருத்துவ உலகுக்கு நைட்டிங்கேல் ஆற்றிய சேவைகளின் காரணமாக இவர் பிறந்த மே 12-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

  • பிரேமா நம்பியார்
You might also like