அம்மாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா?!

அன்னையர் தினம் மே 8. சமூகவலைத் தளங்களில் தங்கள் தாயின் நினைவுகளைப் பற்றிய அவரவர் அனுபவங்களை எழுதியுள்ளனர்.

அதில் சில படைப்பாளர்களின் உள்ளம் உருகவைக்கும் அன்னையர் நினைவுகள்…

ராம் சரசுராம், எழுத்தாளர்

மீன் தொட்டியில் தங்க மீன்களுக்கு அம்மா நேரத்திற்கு உணவிடுவாள். வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் அதற்கு தண்ணீரும் மாற்றுவாள். அதுகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பது அம்மாவுக்கு நன்றி சொல்கிற மாதிரி இருக்கும்.

அம்மாவின் காலைச் சுற்றும் அந்த வெள்ளைப் பூனைக்கு பாலை ஊற்றுவாள். அது வாலை நிமிர்த்தி எல்லாம் குடித்துவிட்டு மீண்டும் அம்மாவின் காலையே சுற்றிச் சுற்றி வரும்.

இன்னும் என்ன வேண்டுமோ அதுக்கு? பிறகு பின்புற வாசலில் அழைக்கும் கூண்டு குருவிகளுக்கும் தனிப்பட்ட கவனிப்புகள் தொடரும். தானிய தூவலுக்கும் அம்மாவின் குரலுக்கும் பிறகே அது தன் சத்தங்களை அடக்கி வாசிக்கும்.

அப்புறம் தவறாமல் வருகிற அந்த அழுக்கு மூட்டை பிச்சைக்காரன். அவனுக்கும் இருப்பதை தந்து அம்மா தினந்தோறும் கவனிப்பாள்.

இவைகளுக்கே ராஜ உபசாரம் நடக்கிறது என்றால் என் மீதான அம்மாவின் கவனிப்பை என்ன சொல்வது? நான் நினைத்துக்கொள்வேன். அம்மாவின் ராஜ்ஜியத்தில் வாழப் பிறந்த அத்தனை உயிர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைதான்!’

யவனிகா ஸ்ரீராம், கவிஞர் 

“இளங்கோன்னு ஏம்மா இவனுக்கு பேரு வைச்ச  வீடு தங்கிறானில்லை சாமியாரப் போயிருவான்!!?? போலருக்கே பேர மாத்தியாகனும்” என்ற கணவனிடம்  சும்மா இரு மனுசா.

சிலப்பதிகாரம் எழுதுன இளங்கோ அடிகள் பெயரை வைச்சுருக்கேன் (ஆடி போயி ஆவணி வந்தா எல்லாம் சரியாயிடுவான் – டோன்) பிள்ளைய நொட்டை சொல்லிக்கிட்டே

கவிஞன் என்ற கைமாறன்றி உன்னை நினைக்க வேறு ஒன்றும் போதவில்லை.

வள்ளலாரின் பதினேழாயிரம் பாசுரங்களை பள்ளிச்சிறுமி போல மனனம் ஒப்பிப்பாய். உருவ வழிபாடு நீங்கினாய். தனியே வந்தேன் தனியே போவேன் என்றாய். போயும் விட்டாய். பராபரமே…

மனுஷ்யபுத்திரன், கவிஞர்

ஐந்தாம் வகுப்பு படிக்கையில்

ஒரு விடுமுறை முடிந்த நாளில்

அம்மாவிடம் சொன்னேன்

“அம்மா நான் இன்னைல இருந்து

ஸ்கூல் போகலை

எனக்கு

பொம்பள பிள்ளங்க கூட

படிக்க கூச்சமா இருக்கு

அவங்க என்னை பாவமா பார்க்கிறாங்க”

என்றேன்

அம்மா

ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை

“உனக்கு இஷ்டமில்லாத

எந்த இடத்திலும் நீ இருக்கவேண்டாம்

உனக்குப் பிடிக்காத

எதையும் நீ செய்யவேண்டாம்

நீ வீட்லயே இரு”

என் அம்மாவைத் தவிர

வேறு எந்த அம்மாவும்

இதைச் சொல்லியிருக்க மாட்டாள்

எனக்கு அதிகபட்சமாக

அம்மா கற்றுத் தந்ததும்

அது ஒன்றுதான்

உண்மையாகவே

அம்மாவாக இருப்பது

எல்லோருக்கும் சாத்தியப்படுவதல்ல

இளம்பிறை, கவிஞர்

நண்பர்களே, வாழ்வெனும் நாடகத்தில் நகைச்சுவை காட்சிகளை நிறைய வைத்துக் கொள்பவர்கள் நானும் என் மகன்களும்.

எமது மூவர் கூட்டணிப் பொழுதுகளாக இன்று வரை போய்க் கொண்டிருக்கும் வாழ்வோட்டத்தில் நான் அவர்களை புரிந்து கொண்டதைவிட என்னை அவர்கள் புரிந்து கொண்டதே அதிகமெனச் சொல்லலாம்.

இதற்கான பல உதாரணங்கள் அன்றாடம் வீட்டில் நிகழ்வதுண்டு.

திலீபன் ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் பசித்ததென ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தான் அப்போது வீடு திரும்பிய எனக்கும் பசித்ததால் அவன் முதலில் போட்டு வைத்த ஆம்லெட்டை எடுத்துச் சாப்பிட்டேன்.

அடுத்ததையும் எடுத்துக் கொண்டேன் அவன் ஒன்றும் சொல்லவில்லை மூன்றாவது ஆம்லெட் எடுத்தபோது என் கையை பிடித்துக் கொண்டான்.

“மொத்தமே நாலு ஆம்லெட்தான், ஒரு அம்மாவ நீங்க என்ன செஞ்சிருக்கணும் ஒன்னு நீங்க எடுத்துகிட்டு மூனு எனக்கு வச்சிருக்கணும் இல்ல ரெண்டோட நிறுத்தியிருக்கணும் மூணாவது ஆம்லேட்டையும் எடுக்கிறீங்களே எப்படிமா?”

– எனக் கேட்டுவிட்டு கூடவே அவர்களைவிட எனக்கு நிறைய உடைகள் நான் வாங்கிக் கொள்வதைப் பற்றியெல்லாம் சிறப்புரையாற்றி ‘உண்மையிலேயே நீங்கதாம்மா உலகப் புகழ்பெற்ற தாய்’ என்ற சிறப்பு மிக்கப் பட்டத்தை எனக்கு வழங்கினான்.

எனக்கு, விபத்தால் கால் எலும்புகள் முறிந்தபோது நான் நடந்து பயிற்சி எடுக்கும் போதெல்லாம் விழுந்துவிடுவேனோ என்ற பயத்தில் “நீயும் என் பக்கத்திலேயே வா தம்பி” என முகிலனை கூப்பிடுவேன்.

முதலில் நடக்க முடிந்த காலினை எடுத்து ஓர் அடி வைக்க வேண்டும். அடுத்து ஊன்று கோலினை எடுத்து முன்னால் வைத்துவிட்டு அதற்கு அடுத்து எலும்பு முறிந்த காலினை மெல்ல எடுத்துவைத்து நடக்கவேண்டும்.

இதன்படி நடந்து பயிற்சி எடுக்கும் போதெல்லாம், நடிகர் வடிவேல் அவர்களின் தீவிர ரசிகரான முகில் “ஏய் தம்பி நீயும் வாடா அம்மா நடக்கப் போறாங்க நாம ‘அஜக் பஜக் லொஜக்’ சொல்லலாம்” என திலீபனையும் அழைத்துவிடுவான்.

முதலில் ஓர் அடி எடுத்து வைக்கும்போது ‘அஜக்’ என்பார்கள் அடுத்து கோலினை எடுத்து வைக்கும்போது ‘பஜக்’ அடுத்து எலும்பு முறிந்த காலினை எடுத்து வைக்கும்போது லொஜக்’ என்பார்கள் எனக்கு வலியைவிட சிரிப்பு அதிகமாகிவிடும். இப்படி சொல்லாத தம்பி சிரிப்புல கால் தடுமாறிடும் என்பேன்.

‘நாங்கதான் பக்கத்துல இருக்கோம்ல. நீங்க சிரிச்சிகிட்டே நடங்க’ என நடந்து முடிக்கும்வரை வடிவேல்போல் அஜக் பஜக் லொஜக்’ எனச் சொல்லி சிரிக்க வைத்தே நடக்க வைத்தார்கள்.

என் கவிதைகளை கேலி பேசுவது உட்பட வீட்டில் ஒருநாளில் நான்கைந்து நகைச்சுவையேனும் இயல்பாக சொல்லிச் சிரித்து மகிழ்வித்து மகிழும் முகிலனும் திலீபனும் எனக்களித்திருக்கும் ‘உலகப் புகழ்பெற்ற தாய்’ பட்டத்தை உலக அன்னையர் நாளில் பகிர்ந்து மகிழ்கிறேன்.

நசீமா ரஸாக், கவிஞர் 

ஒரு முறை கல்லூரி தோழிகள், என்னிடம் “நீ ஏன் பெண்ணாக பிறந்திருக்கனு நினைக்கிற?” என்று கேட்டார்கள். அதிகம் யோசிக்காமல், “எங்க அம்மாவுக்கு நல்ல தோழியா இருக்கனு” பதில் சொன்னேன்.

அம்மா, நாலு வயசுல அவங்க அம்மாவ இழந்தாங்க, ரொம்ப சீக்கிரம் திருமணம் ஆனதால், கூடிப் பேசி விளையாடத் தோழிகள் இல்ல.

இந்த நிமிடம் வர, அம்மாவா மட்டும் இல்லாம என் உயிர்த்தோழியா இருக்கும் என் செல்ல குட்டி அம்மாவுக்கு முகநூல் மூலம் ஒரு முத்தம்.

– பா. மகிழ்மதி

You might also like