சாணி காயிதம் – ஏன் இவ்ளோ கொலவெறி?!

ஒரு இயக்குனருக்கு அல்லது கதாசிரியருக்கு ஒரு கதையின் சில காட்சிகள் மட்டும் மனதில் தோன்ற, அதன்பிறகு முன்பின்னாக அதன் மொத்த வடிவமும் உருப்பெறக் கூடும். அப்படிப்பட்ட காட்சிகள்தான் அத்திரைப்படத்தின் உயிர்நாடியாகவும் இருக்கும்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘சாணி காயிதம்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியொன்றை பார்த்தபோதும் அதுவே தோன்றியது.

அது என்ன காட்சி என்று அறியும் முன்னர், ‘சாணி காயிதம்’ எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை வழங்குகிறது என்று தெரிந்து கொள்வது முக்கியம்.

ரத்தம் வடியும் கதை!

பொன்னி (கீர்த்தி சுரேஷ்) ஒரு கான்ஸ்டபிள். போலீஸ் அதிகாரம் குறித்த அக்கறை எதுவுமில்லாமல் கணவன், மகள் என்றிருக்கும் ஒரு சாதாரண பெண்.

அரிசி ஆலையொன்றில் வேலை செய்யும் பொன்னியின் கணவர் மாரி (கண்ணா ரவி), உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறார். ஆலையின் உரிமையாளரோ அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு சாதியைச் சேர்ந்தவர்.

அவருக்கு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாரியோ, அவரது கூட்டாளியோ தேர்தலில் இறங்குவது பிடிக்கவில்லை.

ஒருநாள் கழிப்பறையைக் கழுவுமாறு ஆலையின் நிர்வாகி ஒருவர் தகராறு செய்ய, அவருடன் சண்டையிடுகிறார் மாரி. இதனால், தன் வேலையை இழக்கிறார்.

நடந்ததை அறியும் பொன்னி, மீண்டும் அதே வேலையில் சேருமாறும் அரசியல் நமக்கு வேண்டாம் என்றும் சொல்கிறார்.

அதன்படி நடக்க முயல்கையில், மனைவியின் நடத்தை பற்றி ஆலை உரிமையாளரும் அவரது உறவினர்களும் கூறும் சொல் கேட்டு கொதித்தெழுகிறார் மாரி.

பிரச்சனை சாதிரீதியானதாக உருவமெடுக்க, அதற்குப் பழி வாங்க பொன்னியைக் குறி வைக்கிறது எதிர்த்தரப்பு.

உயரதிகாரி மூலமாக பொன்னியைத் தம் இடத்திற்கு வரவழைத்து வல்லுறவுக்கு ஆளாக்குகிறது. அதோடு, மாரியையும் அவரது மகளையும் உயிரோடு எரித்துக் கொல்கிறது.

இவ்விவகாரத்தை சட்டரீதியாகத் தீர்க்க முடியாது என்றெண்ணும்போது, தன் சகோதரர் சங்கையாவுடன் (செல்வராகவன்) இணைந்து சம்பந்தப்பட்டவர்களைப் பொன்னி பழி வாங்குவதுதான் ‘சாணி காயிதம்’ படத்தின் கதை.

புதிது என்றோ, வழக்கத்தில் இருந்து சற்றே விலகியதென்றோ கூற இயலாதபடி ஒரு கதை. அதனைத் திரையில் சொல்வதற்காக அகன்ற நிலப்பரப்பையும் மிகச்சில பாத்திரங்களையும் கவிதைத்தனமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதற்கான ஒளிப்பதிவு மற்றும் கலையமைப்பின் கூட்டணியையும் நம்பியிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

கொஞ்சம் செயற்கையாகத் தோன்றினாலும், அதுவொரு இடையூறாகத் தெரியவில்லை. இதனை மீறி, பெரும்பாலான காட்சிகளில் திரையில் வடியும் ரத்தம்தான் நம்மை அயர்வுற வைக்கிறது.

’ஏன் இவ்ளோ கொலவெறி’ என்று கதற வைக்கிறது. இவ்வளவு வன்மத்தை கடைவிரிக்கும் அளவுக்கு கதையில் அழுத்தமான விவரிப்பு இல்லையே என்று எண்ண வைக்கிறது.

திணிக்கப்பட்ட வன்முறை!

எண்பதுகளில் வெளியான படங்களில் நாயகனைப் போலவே நாயகி ’பழிக்குப் பழி’ வாங்குவதில் வெற்றி பெறும் திரைப்படங்கள் கணிசமாக உண்டு. அப்படங்களில் நாயகியின் கவர்ச்சியும் காமக்களிப்பூட்டும் காட்சிகளும் கட்டாயம் இடம்பெறும். ‘சாணி காயிதம்’ படத்தில் அது இல்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.

வல்லுறவு காட்சியின்போது கூட கீர்த்தி சுரேஷின் குளோசப் இடம்பெறாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அதற்குப் பதிலாக எதிர்முனையில் இருப்பவரின் உடல்மொழியை காட்டுகிறார். அது நல்ல உத்தி என்றாலும், அதன் தொடர்ச்சியாக காட்டப்படும் வன்முறை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

இத்தனைக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்குமான மோதல்தான் இப்படத்தில் நிரம்பியிருக்கிறது. அப்படியானால், தன்னை ஒடுக்கப்பட்ட்டவனாக நினைத்துக்கொள்ளும் பார்வையாளர் அக்காட்சியின்போது ரவுத்திரம் நிறைந்தவராக மாற வேண்டும்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக நினைத்தால் அவமானமும் எரிச்சலும் ததும்ப வெறுமையுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். மாறாக, இரு தரப்பும் அருவெருப்பு அடையும் அளவுக்கே அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன.

காரணம், படத்துடன் நம்மை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு கதையில் விவரிப்புகளோ, வலுவூட்டும் அம்சங்களோ இல்லை.

‘சுருங்கச் சொல்லுதல்’ எனும் உத்தியை இயக்குனர் பயன்படுத்தியிருப்பதாக கருதினாலும் கூட, நம் மனதில் அது தொடர்பான சிந்தனை விரிவோ, சுய புரிதலோ உருவாகவில்லை.

இதுவே, இப்படத்தில் நிறைந்திருக்கும் வன்முறையைத் திணிக்கப்பட்டதாக உணர வைக்கிறது.

அது மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற இரு வேறு சாதிகள் குறித்த தெளிவான விளக்கமோ, காலத்தைச் சுட்டுவதற்கான காரணமோ, நிலப்பரப்பு குறித்த வரையறையோ சுத்தமாக இல்லை.

இதனால், மொத்தக் கதையும் உயிரற்ற உடல் போலவே தோற்றமளிக்கிறது.

தாங்கி நிற்கும் அம்சங்கள்!

முக்கியப் பாத்திரங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மட்டுமின்றி கண்ணா ரவி, அவரது குழந்தையாக நடித்த சிறுமி, ஆர்.கே. விஜய் முருகன் மற்றும் லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட வில்லன் தரப்பு என்று அனைத்து கலைஞர்களும் நன்றாக நடித்திருக்கின்றனர்.

அழவும் ரவுத்திரம் பழகவும் கோபத்தில் கர்ஜிக்கவும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் அதிகம். போலவே, செல்வராகவனும் சோர்வான உடல்மொழியுடன் தன் பாத்திரத்திற்குள் எளிதாகப் புகுந்து கொண்டிருக்கிறார்.

இவர்களது இருப்புதான் மொத்த படத்தையும் பார்க்கலாம் என்ற எண்ணத்தை வலுவூட்டுகிறது.

நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒளிப்பதிவும் ஒளிக்கலவையும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவில் பல பிரேம்கள் ஏதோ புகைப்படக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டவையோ என்று எண்ண வைக்கிறது.

ஆனால், அந்த பிரேம்களின் உள்ளடக்கத்தில் இடம்பெற்ற கட்டடங்கள், அவற்றில் நிரம்பியிருக்கும் பொருட்கள், கோடிட்ட தாளில் இடம்பெறும் ஒற்றைப்புள்ளி போல திரையில் சப்ஜெக்டை சுற்றி விரிந்திருக்கும் நிலப்பரப்பு ஆகியன ரொம்பவும் செயற்கையாகத் தெரிகின்றன.

ஒரு கட்டத்திற்கு பிறகு, இதுவே திரையுடன் ஒன்ற நம்மை அனுமதிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் அடுத்தடுத்து ஒரே காட்சிகள் வெவ்வேறு ஷாட்களில் விரிவது நல்ல அனுபவம். ஆனால், அது படம் முழுவதும் தொடராதது வருத்தம் தரும் விஷயம்.

அதையும் தாண்டி, முழுக்கதையிலும் பல காட்சிகள் விடுபட்டுவிட்டனவோ என்ற எண்ணம் ஏற்படுவது பெரிய மைனஸ்.

சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் இறுக்கத்தை கூட்டுகிறது. குறிப்பாக, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி நிகழும் நிமிடங்கள் முழுக்க பரபரப்பு நம் மீது படர்ந்து கொள்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘சாணிக்காயிதம்’ பார்க்க முதல் காரணமாக இருப்பது இயக்குனர் தான். ஏனென்றால், அவரது முதல் படமான ’ராக்கி’ திரையில் வித்தியாசமான ஒரு பார்வை அனுபவத்தைத் தந்தது; இதுவும் அப்படியே.

ஆனால், அதனால் ஒரு முழுமையான படைப்பை கண்ட திருப்தி ஏற்படுகிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள்!

’சாணிக்காயிதம்’ பார்த்து முடித்தவுடன், இயக்குனர் தன் மனதில் பொங்கிப் பெருகும் வன்முறை எண்ணங்களை பார்வையாளர்களுக்கு மடை மாற்றுகிறாரோ என்று தோன்றியது. அது உண்மை என்றால், அதற்கு அவர் முன்வைக்கும் சமூக அரசியல் காரணங்கள் பொதுவில் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வெறுமனே சாதீய அடக்குமுறை என்று சொல்லிவிட்டு இஷ்டத்திற்கு திரையில் வன்முறையையும் வெறுப்பையும் கொட்டுவதை ஏற்க முடியாது.

மேற்கத்திய திரைப்படங்களிலும் கொரிய படங்கள் உள்ளிட்ட பல கீழை நாட்டு படைப்புகளிலும் கூட வன்முறை மிகப்பெரிய அளவில் காட்டப்படுகிறது. ஆனால், அதில் சமூகம் சார்ந்த கருத்தாக்கம் இடம்பெற்றால் அதில் தெளிவு மிக உயர்ந்த அளவில் இருக்கும்.

அப்படி அமையாத காரணத்தால், வெறுமனே அவற்றின் காட்சிரீதியான நகலெடுத்தலாகவே சாணிக்காயிதத்தை கருதத் தோன்றுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வழங்கப்பட்ட பெயர்கள் நமக்குள் நேர்மறை தாக்கத்தை சிறிதளவு கூட ஏற்படுத்தவில்லை.

இப்படிப்பட்ட அயர்ச்சியை மீறி, இதனைக் கொண்டாட ஒரே ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் வில்லனை கொல்வதற்கான வேலைகளில் கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் ஈடுபடும்போது, பின்னணியில் ‘மலர்ந்தும் மலராத’ எனும் ‘பாசமலர்’ பாடல் ஒலிக்கும்.

கதைப்படி இருவரும் ஒரே தந்தைக்கும் இரு வேறு தாய்களுக்கும் பிறந்தவர்கள். இந்த முரணும் கொலைக்களமும் அப்பாடலுடன் சேரும்போது ‘கிளாசிக்கை ரீபூட் செய்திருக்கிறார்களே’ எனும் எண்ணம் பலப்படும்.

இதையே படம் முழுக்க நிரப்பியிருந்தால் நீங்கள் தெளிக்கும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ‘சாணி காயித’த்தை கொண்டாடியிருப்போம். அது நிகழாததால், பார்த்தவுடன் மறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம். அடுத்த படத்திலாவது இயக்குனர் இதனை மனதில் கொள்வாராக..!

– உதய் பாடகலிங்கம்

You might also like