விசித்திரன் என்ற பெயரைக் கேட்டதுமே, ‘விசித்திரமாக இருக்கிறதே’ என்று நினைப்போம். அதற்குத் தக்கவாறு அமைந்திருக்கிறது எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘விசித்திரன்’.
முதல்முறை பார்ப்பவர்களுக்கு விசித்திரனாக தெரிந்தாலும், பத்மகுமார் இயக்கத்தில் 2018இல் சத்தமில்லாமல் வெளியாகி மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’பின் தழுவல்தான் இது.
மறைக்கப்படும் பிரச்சனை!
மாயன் (ஆர்.கே.சுரேஷ்) ஒரு ஓய்வு பெற்ற கான்ஸ்டபிள். ஆனாலும், அவரது விசாரணை முறையும் குற்றவாளிகளைக் கண்டறியும் திறனும் ஓய்வுக்குப் பின்னும் காவல் துறைக்கு உதவியாக இருக்கிறது.
அன்பெனும் இறுக்கத்தின் எல்லையைத் தொட்ட மாயன், குறிப்பிட்ட காலகட்டத்தில் தன் மனைவி ஸ்டெல்லாவை (பூர்ணா) விட்டு விலகிச் செல்கிறார். பிரிந்து செல்லும் மனைவியிடம், தன் மகளை மட்டும் விட்டுச் செல்லுமாறு கூறிவிடுகிறார்.
அதன்பிறகு, டேவிட்டை (பகவதி பெருமாள்) திருமணம் செய்துகொள்கிறார் ஸ்டெல்லா.
உறவுப் பிணைப்பு பெரிதாக இல்லாவிட்டாலும், வெளியூர் செல்லும்போது மகளை முன்னாள் மனைவியிடம் விட்டுச் செல்லும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார் மாயன்.
ஒருநாள் சாலை விபத்தில் மகள் சிக்க, மூளைச்சாவு அடைந்த அவரது உடலுறுப்புகளை தானம் செய்கிறார் மாயன். சில மாதங்கள் கழித்து, அதே இடத்தில் அது போலவே ஸ்டெல்லாவுக்கும் ஒரு விபத்து ஏற்படுகிறது.
அதே போன்று மூளைச்சாவு ஏற்பட, ஸ்டெல்லாவின் உடலுறுப்புகளை தானம் செய்யச் சம்மதிக்கிறார் டேவிட்.
அப்போது, ஸ்டெல்லாவுக்கு ஏற்பட்டது விபத்தல்ல கொலை முயற்சி என்பதைக் கண்டறிகிறார் மாயன். யார் அச்செயலில் ஈடுபட்டனர், எதற்காக அப்படியொரு கொடுமையைச் செய்தனர் என்ற தகவல்களை அவர் அறிவதுதான் மீதிக்கதை.
உடலுறுப்பு தானம் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பது பற்றி பல கட்டுரைகளும் கதைகளும் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், ஒரு ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் குடும்பத்தினர் அதில் சிக்குவதைச் சுவாரஸ்யமாக சொன்னது ‘ஜோசப்’. அதன் மறுபதிப்பாக விளங்கும் ‘விசித்திரனு’ம் கூட அதைச் செவ்வனே பின்பற்ற முயன்றிருக்கிறது.
மண்டைக்குள் ‘கிர்ர்..’…!
மோகன்லால் நடிப்பில் பெரும்பொருட்செலவில் வெளியான ‘ஒடியன்’ படத்தின் வசூலையே பின்னுக்குத் தள்ளியது ‘ஜோசப்’. காரணம், அப்படத்தில் நாயகனாக நடித்த ஜோஜு ஜார்ஜ். தமிழில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் லண்டன் தமிழராகவே வருவாரே, அவரேதான்..!
மனதில் நிரம்பியிருக்கும் வேதனையை மறக்க தினம் தினம் குடித்து வீங்கிப்போன உடம்புடன் இருப்பதை வெளிக்காட்ட ஜோஜுவின் தொப்பை ஒன்றே போதும்.
அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக போதைப்பொருட்களை உட்கொண்டதால் மூளை சொல்வதை உடல் கேட்கவில்லை என்பது போலவே, அப்படம் முழுக்க அவரது ‘பாடி லேங்க்வேஜ்’ அமைக்கப்பட்டிருக்கும்.
’விசித்திரன்’ ஆர்.கே.சுரேஷ் அதனைப் பெருமளவில் பின்பற்ற முயற்சித்திருந்தாலும், ஒரு செயலை மிக நிதானமாக மேற்கொள்பவர் போலும் என்ற எண்ணமே உருவாகிறது. இதனால், ‘ஜோசப்’பை ரசித்தவர்களால் விசித்திரனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.
அதையும் மீறி தளர்ந்த உடல்மொழி, மென்மையான உடலியக்கம் என்று உருமாற முயன்றிருக்கும் ஆர்.கே.சுரேஷை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவரது முறுக்கேறிய உடல்தான், அப்பாத்திரத்தின் மீது கவியும் இரக்கத்தை அப்படியே விலக்கித் தூர எறிகிறது.
மலையாளத்தில் ஆத்மியா செய்த ஸ்டெல்லா பாத்திரத்தை பூர்ணாவும், திலேஷ் போத்தனின் டேவிட் பாத்திரத்தை பகவதி பெருமாளும் ஏற்றிருக்கின்றனர்; இருவருமே தத்தமது பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.
சுரேஷின் நண்பர்களாக வரும் இளவரசுவும் மாரிமுத்துவும் இயல்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கின்றனர்.
முன்னாள் காதலியாக வரும் மது ஷாலினி முகத்தில் வடியும் மேக்கப், அவரது வயது முதிர்வை பளிச்சென்று காட்டுகிறது.
மலையாளத்தில் இக்கதைக்கு உயிர் கொடுத்த சஹி கபீரின் வசனங்களை தமிழுக்கு மாற்றியிருக்கிறார் ஜான் மகேந்திரன். கிட்டத்தட்ட அதே லொகேஷன்களில் அது போன்றதொரு காட்சியாக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்.
சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக ஒரு காட்சித் தொகுப்பைத் தர முயன்றிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஈர்த்தாலும், பின்னணி இசை அப்பட்டமாக ‘ஜோசப்’பை நினைவூட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.
ஜோசப்பின் மாபெரும் பலமே ரத்தக்களறி நிறைந்த ஜோஜு ஜார்ஜின் விசாரணைக் காட்சிகள்தான். குறிப்பாக, இறந்து கிடப்பது தனது காதலி என்பதை உணரும்போது அவரது மண்டைக்குள் கேட்கும் ‘கிர்ர்..ர்..ர்’ எனும் சத்தம், படம் முடிந்தபின்பு பார்வையாளர்களான நம்மைத் தொற்றிவிடும். ‘விசித்திரன்’ அப்படியான காட்சிகளை, உணர்வுகளை அறவே தவிர்த்திருக்கிறது.
போலவே, மகள் மீதான பாசமும் அவர் இறந்துபோன விதமும் ஜோசப்பில் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கும். இதில், அப்பகுதி பெரும்பாலும் வெட்டப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
மகளையும் மனைவியையும் ஒருசேர இழந்ததை உணர்வதுதான், அப்பாத்திரத்தை மது போதையில் இருந்து தெளியச் செய்யும். இப்படத்தில், அந்த மன மாற்றம் தெளிவாக உணர்த்தப்படவில்லை. இதனால், கிளைமேக்ஸில் மாயன் பாத்திரம் செய்யும் தியாகம் சரிவர பார்வையாளர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போகும் அபாயம் அதிகம்.
இன்னொரு கோணத்தில் உடலுறுப்புகள் தானம்!
‘ஜோசப்’ வெளியானபோது மருத்துவ உலகமும் உடலுறுப்பு தானத்தில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளும் பெரும் எதிர்ப்பை தெரிவித்தன. அதையும் மீறி, அவ்விஷயத்தில் சில முறைகேடுகள் நடப்பதை உண்மை என்று அறிந்தபிறகே அக்கதை தயாரானதாகச் சொன்னது படத்தரப்பு. அந்த வகையில் ‘விசித்திரன்’ கூட சில எதிர்ப்புகளை சம்பாதிக்க வாய்ப்புண்டு.
வில்லனை முதன்மையாக காட்டாவிட்டாலும் கூட, வெறுமனே அச்செயலை மட்டுமே எதிரே நிற்க வைத்திருப்பதுதான் இத்திரைக்கதையின் பலமும் பலவீனமும். இதனாலேயே ஜோசப் பலவாறாக விமர்சனங்களை எதிர்கொண்டது.
தற்போது இக்கதை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் கூட ‘ரீமேக்’ செய்யப்பட்டு வருகிறது. இதுவே, இதன் தரம் என்னவென்பதைச் சொல்லிவிடும்.
ஒரே திரைப்படத்தை ‘பிரேம் பை பிரேம்’ பிரதியெடுத்தாலும் கூட, சில நேரங்களில் ஒரேமாதிரியான உணர்வைத் திரையில் உருவாக்க முடியாது. அதனால்தான் ஒரு படம் உருவாவதை ‘மேஜிக்’ என்கின்றனர் திரையுலகினர். அந்த வகையில், ‘ஜோசப்’பில் இருந்த மாயாஜாலத்தை தவறவிட்டிருக்கிறது ‘விசித்திரன்’. அதுவே அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசமாகவும் ஆகியிருக்கிறது.
ஆனாலும், ஒரு வித்தியாசமான படத்தை பார்த்தாக வேண்டுமென்று முதல்முறை இக்கதையை எதிர்கொள்பவர்களுக்கு, இது பலவித ஆச்சர்யங்களைத் தருமென்பதை மறுதலிக்க முடியாது. அந்த வகையில், அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் உத்தரவாதத்தை வழங்குகிறது இத்திரைப்படம்.
ஸ்டெல்லா டேவிட் என்ற பெயர்கள் அப்படியே இருக்க, ஜோசப்பை மட்டும் மாயனாக மாற்றி, அப்பாத்திரத்தை முருகனை வணங்குமாறு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த ஒரு விஷயத்தால் மட்டுமே திரைக்கதை முழுக்க தமிழ்மயமாகிவிடும் என்று நினைத்தால், அது தவறானதாகத்தான் இருக்கும்.
போலவே, வால்பாறை என்று காட்டினாலும் கூட அனைத்து பாத்திரங்களும் கோவை வட்டார வழக்கை வெளிப்படுத்தவில்லை. இது மாதிரியான காரணங்களால் தமிழ் ரசிகர்களிடம் இருந்து அந்நியப்படாமல் இருந்திருந்தால், இன்னும் மனதுக்கு நெருக்கமானதாக மாறியிருக்கும் இந்த ‘விசித்திரன்’!
– பா.உதய்