கதிர்-கொஞ்சம் சீராகவும் கூராகவும் இருந்திருக்கலாம்!

சில திரைப்படங்களைப் பார்த்து முடித்தபிறகு, ‘இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி வேறு மாதிரி உருவாக்கியிருக்கலாமே’ என்று தோன்றும்.

அந்த கதையின் சில காட்சிகளை, சில கூறுகளை, சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றம் செய்திருக்கலாமே என்று மனம் ஏங்கும்.

தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ், ரஜினி சாண்டி, சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, ஆர்யா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கதிர்’ திரைப்படமும் அப்படியொரு வரிசையில் சேர்ந்திருக்கிறது.

ஒரு சாதாரணமான கதை!

கோயம்புத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரவன் (வெங்கடேஷ்) ஒரு பொறியியல் பட்டதாரி. வேலை செய்யாமல் வீட்டிலேயே இருக்கும் இவர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் சாப்ட்வேர் துறையில் வேலை தேடி சென்னைக்கு இடம்பெயர்கிறார்.

சென்னையில் கல்லூரி நண்பனோடு தங்குபவர், அவ்வீட்டின் உரிமையாளர் சாவித்ரியோடு (ரஜினி சாண்டி) மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மோதல் நல்ல புரிதலாக மாறுகிறது.

இதனால், ஆங்கிலம் தெரியாது என்ற தாழ்வு மனப்பான்மையுடன் திரியும் கதிரவனிடம் மாற்றம் ஏற்படுகிறது.

எல்லாம் சரியாகச் செல்லும் நிலையில், ஒரு இண்டர்வியூவில் வெற்றி பெற்ற பிறகும் அந்த வேலையில் சேர முடியாமல் போகிறது.

காரணம், கதிரவனின் முன்னாள் காதலி தீப்ஷிகா (பவ்யா த்ரிகா) அங்கிருக்கிறார். அவரது கோலத்தை சீரணிக்க முடியாமல் ‘ஓவராக’ மது அருந்திவிட்டு விபத்தில் சிக்குகிறார் கதிரவன்.

மன மாற்றத்திற்காக சொந்த ஊர் திரும்ப முடிவு செய்ய, அவருடன் சாவித்திரியும் செல்கிறார். போன இடத்தில், நெருங்கிய நண்பன் பரூக் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மனம் வெம்புகிறார்.

வாழ்வே வெறுமை என நினைக்கும் கதிரவனிடம், இழந்த காதலையும் தான் வாழ்வதற்கான காரணத்தையும் சாவித்திரி பகிர்வதோடு படம் நிறைவடைகிறது.

ஆங்காங்கே சில இடங்கள் செயற்கையாகத் தென்பட்டாலும், படம் முழுக்க ரொம்பவும் சிரத்தையுடன் இப்படக்குழு செயலாற்றியிருக்கிறது.

அதுவே இப்படத்தை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக செதுக்கியிருக்கலாமே என்று நினைக்கவும் வைக்கிறது. அதே நேரத்தில், இது எல்லோரது வாழ்வையும் பிரதிபலிக்கும் ‘சாதாரண கதை’ என்ற உணர்வையும் உருவாக்குகிறது.

நல்ல முயற்சி!

கைகளில் இருக்கும் விரல்கள் ஐந்தும் ஒரே அளவில் இருந்தால், நம்மால் ஒரு வேலையும் செய்ய முடியாது. அது போல இப்படத்தில் நான்கு கதைகள் ஒரே அளவில் இடம்பெற்றிருக்கின்றன.

கதிரவனுக்கும் சாவித்திரிக்குமான புரிதல் பெருகுவது, தீப்ஷிகா – கதிரவன் ஜோடியின் காதல் உடைவது, தான் வாழ்வதற்கான காரணத்தை சாவித்திரி விளக்குவது, தன் கிராமத்தை முன்னேற்ற கதிர் உழைப்பது என்று தனித்தனியாக நிகழும் நான்கு பகுதிகளை ஒரு திரைக்கதைக்கான இலக்கணத்திற்குள் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தினேஷ் பழனிவேல்.

அதை மீறி, ஒரு மனிதனின் வெவ்வேறு காலகட்டங்களை காட்டுவதாக மாறியிருக்கிறது ‘கதிர்’.

இதனை முன்கூட்டியே உணர்ந்து சேரனின் ‘ஆட்டோகிராப்’ போலவோ அல்லது ‘நான் – லீனியர்’ முறையிலோ கதை சொல்லியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

அதோடு, கதிரவனை பிரிந்த தீப்ஷிகாவுக்கு என்னவானது என்பதையும் விளக்கியிருக்கலாம். அதனைச் செய்யாத காரணத்தால், நல்ல முயற்சி என்றளவில் நின்று போயிருக்கிறது.

கலக்கும் பவ்யா த்ரிகா!

வெங்கேஷும் ரஜினி சாண்டியும் முன்பாதியில் நம்மை இருக்கையில் அமர வைத்தாலும், ‘கதிர்’ படத்தின் முதுகெலும்பாக இருப்பது ஆர்யா ரமேஷ், சந்தோஷ் பிரதாப் இடம்பெறும் ‘பிளாஷ்பேக்’ தான்.

பொதுவுடைமை சித்தாந்தங்கள் சமூகத்தில் நீர்த்துவரும் வேளையில் இப்படம் கீழ்வெண்மணி சம்பவத்தை நினைவூட்டுகிறது. ஏற்கனவே பார்த்த உணர்வு ஏற்பட்டாலும், அக்காட்சிகள் புத்துணர்வைத் தருகின்றன.

பள்ளி மாணவி போல தோற்றமளிக்கும் ஆர்யா ரமேஷ் பிளாஷ்பேக் காட்சியில் அளவாக வந்து போகிறார்.

மாறாக, தற்கால காதலர்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளில் இடம்பிடித்த பவ்யா த்ரிகாவுக்கு ரசிகர்கள் மனதை குத்தகைக்கு எடுக்கப் பெரும் வாய்ப்பு. அவரும் அதற்கேற்ப திரையில் தன் திறமையை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார்.

இவர்கள் இருவரையும் தாண்டி ‘முத்தச்சி கதா’வில் பாட்டியாக வந்து அமர்க்களப்படுத்திய ரஜினி சாண்டி இப்படம் முழுக்க வருகிறார்.

அவரை ‘கிழவி’ என்று வெங்கடேஷ் கிண்டல் செய்தாலும், சாதாரணமாகப் பேசும் வசனங்களில் ‘பாட்டி’ என்று அழைப்பது இயல்பானதாக இல்லை.

அதற்குத் தகுந்தவாறு, சாவித்திரி பாத்திரத்திற்கான தோற்றமும் முதுமையானதாக வடிவமைக்கப்படவில்லை.

வெங்கடேஷுக்கு திரையில் தோன்ற அதிக வாய்ப்பு. அதனைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். மாறாக, கிடைத்த ‘பிளாஷ்பேக்’ இடைவெளியில் கவனம் ஈர்க்கிறார் சந்தோஷ் பிரதாப். அவரது குரல் நடிப்புக்கு கூடுதல் பலம்.

வெங்கடேஷின் கல்லூரி நண்பர்கள், ஊர்க்காரர்களாக நடித்திருப்பவர்களும் கூட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஜெயந்த் மாதவனின் ஒளிப்பதிவும் தீபக் எஸ்.துவாரகநாத்தின் படத்தொகுப்பும் கொஞ்சமும் நாடகத்தன்மை திரையில் தென்படாமல் பார்த்துக்கொள்கின்றன. பிரசாந்த் பிள்ளையின் பாடல்களும் பின்னணி இசையும் மேலும் பலம் கூட்டுகின்றன.

விவசாயிகள் லாபம் பெறுவதற்காக இப்படம் முன்வைக்கும் தீர்வில் புதுமை இல்லாவிட்டாலும், அது நல்லதொரு உத்தி என்பதால் இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இன்னும் செதுக்கியிருக்கலாம்!

நம்பிக்கையோடும் கவனத்தோடும் அனைவரும் ஒன்றுகூடி தேர் இழுப்பதை போல இப்படத்தை உருவாக்கியிருந்தும், ஏதேனும் ஒரு புள்ளியை மட்டும் மையப்படுத்தாமல் விட்டதால் மொத்த திரைக்கதையும் ஒரு வடிவத்திற்குள் அடங்கவில்லை.

அதே நேரத்தில் நான்கைந்து தனித்தனி பகுதிகளாகவும் அவற்றை வார்க்கவில்லை.

இதனாலேயே ‘இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்’ என்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு ‘கதிர்’ படத்தை கடக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நல்ல முயற்சி கவனம் பெறாமல் போவதை போல வருத்தமான விஷயம் வேறில்லை! கதிர் – கொஞ்சம் சீராகவும் கூராகவும் இருந்திருக்கலாம்..!

– உதய்.பா

You might also like