கொரோனா 4-வது அலை: தாங்க முடியுமா?

மூன்று முறை கொரோனா அலை உலகளாவிய அளவில் பரவி இது வரை பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கோடிக்கணக்கான பேர்களைப் பாதித்திருக்கிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் வாழ்வாதாரைத்தை இழந்திருக்கிறார்கள். பெரும்பான்மையினர் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

கொரோனா பீதியிலிருந்து மீண்டு சற்றே தலைதூக்கிப் பார்ப்பதற்குள் அடுத்து நான்காம் அலை குறித்த அச்சம் பொதுவெளியில் பரவிக் கொண்டிருக்கிறது.

கொரோனா முதல் அலை துளிர்விட்ட சீனாவில் மீண்டும் கொரோனா பேரலையாகப் பரவிக் கொண்டிருக்கிறது. பீஜிங்கில் கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

இந்தியாவிலும் நான்காம் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு. இதில் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்திலும் இதன் தாக்கம் தெரிகின்றது. ஐ.ஐ.டி போன்ற கல்வி வளாகங்களிலேயே கொரோனா தாக்கத்தை மீண்டும் பார்க்க முடிகிறது.

மறுபடியும் முக‍க்கவசம், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் பல்வேறு விதமாக தமிழ்நாடு அரசு தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக முந்தைய ஆட்சியில் சித்த மருத்துவத்திற்கு ஓரளவு பட்டும் படாமலுமாக கவனம் கிடைத்தது.

சித்த மருத்துவ முகாம்கள் கூடப் பல இடங்களில் நடந்தன. கபசுரக் குடிநீரின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அதில் இணைந்தவர்கள் எந்த உயிர்ப்பலியில்லாமல் விரைவில் குணம் பெற்றார்கள்.

இவை எல்லாம் ஊடகங்கள் வழியே நமக்குத் தெரிந்தது தான்.

இந்தச் சமயத்தில் கொரோனா தொடர்பாக என்னுடைய சொந்த அனுபவத்தையும் இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.

தி.மு.க ஆட்சி பதவியேற்றபோது பரவிக் கொண்டிருந்த கொரோனா தொற்றில் அப்போது நானும், என் குடும்பத்தில் இருவரும் பாதிக்கப்பட்டிருந்தோம்.

கொரோனா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்றாக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் சுகாதார ஊழியர்கள், வீட்டிற்கு முன்னால் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு நாங்கள் போனபோது இதே அறிகுறிகளோடு ஏக‍க் கூட்டம். கொரோனா மருத்துவமனைகளைக் கோலாகலமாக்கி இருந்தது.
அங்கும் நிறைய சோதனைகள் எடுக்கப்பட்டன.

என்னுடைய ரிப்போர்ட்டைப் பார்த்ததும் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர் நேரே மருத்துவரிடம் அழைத்துப் போனார்.

‘’சார்… உங்களுக்கு ‘பிரீதிங்கில்’ பிரச்சினை இருக்கு.. உடனே வென்டிலேஷன் போடணும்..’’ என்று படபடவென்று சொன்ன மருத்துவர் நாள் ஒன்றுக்கு எனக்கு ‘வென்டிலேஷன்’ சிகிசைக்குக் கேட்ட தொகை 70 ஆயிரம் ரூபாய்.

‘’எப்படியும் பத்து நாட்கள் சிகிச்சையில் இருந்தாகணும்.. பார்த்துக்குங்க’’ – கேட்கும்போதே பிரஷரை எகிற வைத்துவிட்டார் அந்த மருத்துவர்.

அவரிடம் பதிலுக்குக் கத்தி ‘’எதை வைத்து வென்டிலேஷனில் போடணும்னு சொல்றீங்க.. அதுக்கு ஒரு நாளைக்கு 70 ஆயிரம் வேறே கேக்கிறீங்க’’ என்றதும், அந்த மருத்துவரால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

‘’ஏற்கனவே இங்கே குறைவான ‘வென்டிலேஷன்’ பெட்கள் தான் இருக்கு.. முடிவு எடுத்துக்குங்க.. உங்க நல்லதுக்குத் தான் சொல்றோம்’’- என்று சொன்னதும் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தோம்.

வீட்டிலேயே இருந்தபடி சித்த மருத்துவச் சிசிச்சையை மேற்கொள்வது என்று தீர்மானித்தோம். தனி அறையில் இருந்தபடி சிகிச்சை. கபசுரக் குடிநீர், சித்த வைத்திய மருந்துகள் என்று உட்கொண்ட பிறகு ஒருவாரத்தில் கொரோனா பரிசோதனை எடுத்தபோது, அதன் அறிகுறிகள் இல்லை.

சிகிச்சைக்கு ஆன செலவு ஐந்தாயிரத்துக்கும் குறைவு தான்.

இதை விட்டுவிட்டு அலோபதி சிகிச்சைக்குப் போய், வென்டிலேஷனில் படுத்திருந்தால் பத்து நாட்களுக்கு மட்டும் ஏழு லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டியதிருக்கும்.
அனுபவம் எது எதை எல்லாம் உணர்த்துகிறது?

இப்போதும் கொரோனா பரிசோதனைகள் ஒருவேளை அதிகரிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்படுவதும் கூட அதிகரிக்கலாம்.

இந்தச் சமயத்தில் நம் தமிழக மருத்துவ மரபு சார்ந்த சித்த வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், பாதிக்கப்படுகிறவர்களுக்கும் நல்லது. பாதிக்கப்படுகிறவர்களின் பொருளாதாரத்திற்கும் நல்லது.

– மணா

You might also like