சமகாலத்தில் விவாதங்களை எழுப்பிய, எழுப்பிக் கொண்டிருக்கிற பிரச்சனைகளை ஒரு திரைப்படத்தில் சொல்ல முடியுமா? அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி காட்ட முடியுமா?
முடியும் என்று நிரூபித்து பெருமை தேடிக்கொள்ளும் படைப்புகளில் ஒன்றாகியிருக்கிறது பிருத்விராஜ், சூரஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா, இளவரசு, கிட்டி, ஷம்மி திலகன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜன கண மன’.
போலி என்கவுண்டர், ஊடகங்களின் ஒருசார்புத்தன்மை, அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு பிரச்சனை திசை மாற்றப்பட்டு ஊதிப் பெரிதாக்கப்படுதல், தோற்றம் சார்ந்த அடையாளங்களை மக்களிடம் விதைத்தல் என்று பலவற்றை ஒரே கதையில் பொருத்திய விதத்தில் கவனத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
ஷரீஸ் முகம்மதுவின் எழுத்தாக்கத்தில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது இத்திரைப்படம்.
மரணமும் விசாரணையும்..!
பெங்களூரு நெடுஞ்சாலையொன்றில் ஒரு பெண்ணின் சடலம் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடைக்கிறது. அந்த பெண் ராமநகரா மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய சனா மரியம் (மம்தா மோகன் தாஸ்).
இந்நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவியரை கொந்தளிக்கச் செய்கிறது.
மாணவர்களின் கொந்தளிப்பை கடுமையான அடக்குமுறையைக் கொண்டு ஒடுக்குகிறது காவல் துறை.
இந்நிகழ்வில் காயப்படும் ஒரு மாணவி தான் தாக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட பிரச்சனை சூடு பிடிக்கிறது. பல மாநிலங்களில் மாணவர் எழுச்சி உச்சம் பெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஆசிரியை சனா யாரால் கொல்லப்பட்டார் என்ற விசாரணை முடுக்கி விடப்படுகிறது.
இவ்வழக்கை புலனாய்வு செய்யும் ஏசிபி சஜ்ஜன் குமார் (சூரஜ் வெஞ்சாரமூடு), இது தொடர்பாக 4 இளைஞர்களைக் கைது செய்கிறார். அவர்கள் மீது ஏற்கனவே திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஒருகட்டத்தில் சட்டத்தின் முன்னால் அவர்களை நிறுத்த முடியாத சூழல் உருவாக்கப்பட, அந்த நால்வரையும் ‘என்கவுண்டர்’ செய்கிறார் சஜ்ஜன் குமார். ஊடகங்கள் இதனை மக்கள் தீர்ப்பாக கொண்டாடுகின்றன.
நால்வரும் கொல்லப்பட்டது தொடர்பான மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, இவ்வழக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகிறார் வழக்கறிஞர் அரவிந்த் சுப்பிரமணியம் (பிருத்விராஜ்).
சனா கொல்லப்பட்டதற்கும் இந்நால்வருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வாதாடுகிறார். அரவிந்த் ஏன் அவ்வாறு வாதாடுகிறார்? நால்வரும் குற்றவாளி இல்லை என்றால் சனாவை கொன்றது யார்? அதற்குப் பின்னிருக்கும் காரணம் என்னவென்பதை விவரிக்கிறது ‘ஜன கண மண’.
சனா மரண விசாரணையைச் சுற்றி கதை வளைய வந்தாலும், உயர் கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தான் இக்கதையின் மையமாக இருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் சாதீய ஒடுக்குமுறை சமூகத்தின் அனைத்து அடுக்கிலும் ஒளிந்திருக்கிறது என்பதைச் சொன்ன வகையில் ‘தனித்துவமான இட’த்தைப் பெறுகிறது இத்திரைப்படம்.
சூரஜ் எனும் தீரன்!
ஒரு நகைச்சுவை நடிகரை எப்படியெல்லாம் விதவிதமாக திரையில் காட்டலாம் என்பதற்கான சிறந்த உதாரணம் சூரஜ் வெஞ்சாரமூடு.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மம்முட்டி, மோகன்லால் படங்களில் வடிவேலு, சூரி, சந்தானம் போன்று ஒன்லைனர்களை உதிர்த்துக் கொண்டிருந்தவர் இன்று தன் நடிப்பினால் உச்ச நட்சத்திரங்களுக்கே சவால் விடும் அளவுக்கு மாறியிருக்கிறார்.
அவர் நடிப்பில் வெளியான ‘விக்ருதி’, ‘டிரைவிங் லைசென்ஸ்’, வரிசையில் மற்றுமொரு மகத்தான படைப்பாகி இருக்கிறது ‘ஜன கண மண’.
சஜ்ஜன் குமார் எனும் போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் மாறும் திரைக்கதை திருப்பங்களை நியாயப்படுத்துவது அவரது நடிப்புதான்.
சூரஜ் எனும் தீரன் தான் ‘ஜன கண மண’வைத் தாங்கி நிற்கிறார் என்றால் அது மிகையல்ல.
தான் வரும் காட்சிகள் குறைவென்றாலும் கண்டிப்பாக கைத்தட்டல்கள் பெறுவோம் என்ற அபாரமான நம்பிக்கையுடன் இப்படைப்பை தயாரித்திருக்கிறார் பிருத்விராஜ். அவரது முயற்சிக்கு தியேட்டரில் பலன் தெரிகிறது.
சனாவாக வரும் மம்தா மோகன்தாஸ், அவரது தாயாக வரும் சாதனா, அரசு வழக்கறிஞராக வரும் ஷம்மி திலகன், நீதிபதியாக வரும் கிட்டி, போலீஸ் கான்ஸ்டபிளாக வருபவர், உள்துறை அமைச்சராக வரும் ஜி.எம்.சுந்தர், வின்சி அலாய்சியஸ் உள்ளிட்ட மாணவர் கும்பல், அடியாட்களாக வருபவர்கள் என்று பலரும் சிறப்பான நடிப்பை நல்கியிருக்கின்றனர்.
இவர்களோடு ஓரிரு காட்சிகளில் வரும் இளவரசுவும் நம் கவனம் ஈர்க்கிறார்.
சுதீப் இளமோன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் இருளும் ஒளியும் ஒப்பந்தம் செய்துகொண்டாற்போல குறிப்பிட்ட விகிதத்தில் நிறைந்திருக்கின்றன.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதையோடு பாந்தமாக ஒட்டியிருக்கின்றன.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு மிகச்சீராக காட்சிகளைக் கோர்த்திருக்கின்றன. ஆனால், கிளைமேக்ஸில் பிருத்விராஜ் குறித்த பிளாஷ்பேக்கை ஒரு ட்ரெய்லர் போல காட்டியிருப்பதும், ஏற்கனவே வெளியான டீசர், ட்ரெய்லர் காட்சிகள் படத்தில் இடம்பெறாமல் இருப்பதும் கேள்விக்குறியை பெரிதாக்குகின்றன.
மேலே சொன்னவை தவிர ஸ்ரீதிவ்யா உட்பட சில கலைஞர்கள் இடம்பெற்ற காட்சிகள் இதன் அடுத்த பாகத்தில் இடம்பெறும் என்று பிருத்விராஜ் தரப்பு விளக்கமளித்தாலும்,
இப்படைப்பில் அவை இடம்பெற்றிருப்பது அதுவரை திரைக்கதையில் இருந்த நேர்த்தியைச் சீர்குலைத்திருப்பதை மறுக்க முடியாது. போலவே, தொடக்கத்தில் வரும் பிருத்விக்கான அறிமுகக் காட்சியும் கூட இத்திரைக்கதைக்கு ஆறாம் விரலே!
சமகால பிரச்சனைகளுக்கான உருவம்!
ஷரீஸ் முகம்மதுவின் எழுத்தாக்கம் இப்படத்தின் பெரும் பலம். முன் பாதிக் கதையில் விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘த்ரில்லர்’ ஆக்கியவர், இரண்டாம் பாதியில் நீதிமன்ற விசாரணைக்கு இடம் தந்து இதனை ‘அரசியல்’ படமாக மாற்றியிருக்கிறார்.
ஒரு கதையில் ஒரேயொரு சமகால பிரச்சனையைச் சொல்வதற்கே திணறும் வேளையில் பலவற்றை புகுத்தியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
மிக முக்கியமாக ‘ஊடகங்களில் சொல்லப்படுவதெல்லாம் உண்மையா’ என்று கேள்வி எழுப்பப்படும் இடமும், ’ஒரு செய்திக்கு மட்டுமே முன்னிலை தரப்பட வேண்டும் என்று திட்டமிடுவது யார்’ எனும் கேள்வியை எழுப்பிய விதமும் பாராட்டுக்குரியது.
உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை நீக்கப்படுதல், பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுதல்,
பொதுவெளியில் ஒரு பிரச்சனை முன்னெடுக்கப்படுவதற்கும் அதன் பின்னிருக்கும் உண்மைக்குமான வேறுபாடு, அடையாள அரசியல் என்று பலவற்றை விலாவாரியாக விவரித்திருக்கிறார் ஷரீஸ்.
அத்தனையும் செய்தவர் படத்தின் மொத்த நீளத்தை திட்டமிட்டிருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டதனால், பல முக்கியமான காட்சிகள் இரண்டாம் பாகத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
பெங்களூருவில் கதை நடப்பதாகச் சொன்னாலும் கதை மாந்தர்கள் பலர் மலையாளம், கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளை கலந்து பேசுகின்றனர். அதுவும் ஒரே பாத்திரமே மூன்றுவிதமாகவும் பேசுவது அபத்தமாக தெரிகிறது.
குறிப்பாக, தமிழ் மட்டுமே தெரிந்த இளவரசு இறுதியில் மலையாளத்தில் விளக்கமளிப்பது துருத்தலின் உச்சம். கான்ஸ்டபிள் மூர்த்தி பாத்திரம் அடுத்தடுத்து மலையாளம், கன்னடம், தமிழ் ஆகியவற்றைக் கலந்து பேசுவதும் கூட அந்த ரகம்தான்.
மலையாளிகளுக்கு தமிழ் தான் எளிதில் புரியுமென்றால், திரையில் கன்னடத்தை இடம்பெறச் செய்ய வேண்டிய அவசியமென்ன அல்லது கதை நிகழும் களம் குறித்த எதிர்ப்பு உருவாகிவிடக் கூடாது என்று திட்டமிட்டு இது மேற்கொள்ளப்பட்டதா? படக்குழுதான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
மலையாளத் திரையுலகில் தமிழர்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்ற வாதத்திற்கு வலு சேர்ந்துவிடாமல் இருக்க, ஜி.எம்.சுந்தரின் பாத்திரத்தை எப்படிக் காட்டுவது என்பதிலும் தடுமாறியிருக்கின்றனர் திரைக்கதையாசிரியரும் இயக்குனரும்.
அதனால், அந்த பகுதி மட்டும் ‘ஸ்டீரியோடைப்’ ஆக தென்படுகிறது. அதேபோல, கம்யூனிச மற்றும் வலதுசாரி மாணவர் இயக்கச் செயல்பாடுகள் குறித்த விமர்சனமும் திரைக்கதையை ‘க்ளிஷே’வாக மாற்றுகிறது.
இக்குறைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சமகாலப் பிரச்சனைகளை ஒரு சாதாரண மனிதனுக்கு நலம் பயக்கும் வகையில் சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘ஜன கண மண’.
தற்போதைய சூழலில் சாதாரண ஜனங்களை பற்றி நினைக்க வைத்ததோடு நின்றுவிடாமல் அவர்களை மதிக்க வேண்டும் என்ற படிப்பினையையும் வலியுறுத்தியதற்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்கலாம்!
-உதய் பாடகலிங்கம்