மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!

தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பின் தங்கிய பகுதியான வடபழனி, கோடம்பாக்கத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு வைத்திய வசதியைத் தந்தார்.

நான் விஜயா மருத்துவமனையைத் தொடங்கக் காரணமாக இருந்தது எம்.ஜி.ஆர். நிறுவிய அந்த மருத்துவமனைதான்.

பிரபல நடிகர் என்ற வகையில் மட்டும் அவர் பிரபலமாகவில்லை. நேர்மை, மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலும்தான் அவர் பிரபலமானார். தமது ஏழு முதல் எழுபது வயது வரையில் ஈர இதயமும், இரக்க சிந்தனையுடையவராகவே வாழ்ந்தார்.

தன்னுடைய ஆட்சித் காலத்தில் அவர் செயல்படுத்திய மனிதாபிமானமிக்க சமுதாய நல்வாழ்வுக்காகவும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காகவும் ஆற்றிய பணிக்கும் பட்டியல் போட முடியாது.

ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, “விஜயா கார்டனில் நான் ஒரு சுகாதார நிலையத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு உங்கள் ஆசி தேவை” என்றேன்.

அவ்வளவுதான். உடனே முதல்வர் அவர்கள். “இந்த மாதிரி சுகாதார மையம் இங்கே இல்லையே என்கிற ஏக்கம் எனக்கும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்தக் கனவை நீங்கள் பூர்த்தி செய்ய இருக்கின்றீர்கள்.

உங்களால் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பண உதவி கேளுங்கள். ஐம்பது லட்சம் போதுமா?

அந்த நிதியை வசூலித்துத் தருவது என் பொறுப்பு என்றவர் அங்கே தன் உதவியாளர் பிச்சாண்டியிடம் “ரெட்டியார் என்ன உதவி கேட்டாலும் செய்ய வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து அங்கேயே உயர்ந்து நின்றார்.

“உங்களுடைய ஆசியைத்தான் வழங்க வேண்டும். வேறு ஒன்றும் பெரியதல்ல” என்று சொன்னேன். எனது கனவு நிறைவேற “வாழ்த்துக்கள்’ என்றார் முதல்வர்.

அண்மையில் அமெரிக்காவிலிருந்து முதல்வர் திரும்பி வந்ததும் அவரை அழைத்து வந்து அவரை கனவு நிஜமானதைக் காண்பிக்க வேண்டும் என்று விரும்பி அழைத்தேன். அவரும் வருகை தர ஒப்புக் கொண்டார்.

ஆனால்….

விஜயா சுகாரார நிலையம் என்கிற கனவு நிஜமாகி அவரை எப்போதும் என்னுள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க அவர் மறைந்து விட்டார்.

என்னுடைய மூத்த புதல்வன் பிரசாத்தின் மறைவை அறிந்தவுடன் என்னிடம் வந்து முதலில் துக்கம் விசாரிக்க வந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். மறைந்த செய்தியைக் கேட்டவுடன் பூமி அதிர்ச்சி போன்ற ஷாக் என்னுள் ஏற்பட்டது. அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் சில நொடிகளில் ஒரு எண்ணம். வாழ்நாள் முழுவதும் ஹீரோவாகவே வாழ்ந்தார். மறைவிலும் ஹீரோவாகி விட்டார்.

நம் நாட்டில் எந்த மாநில முதல்வருக்கும் கிடைக்காத அரசு மரியாதை, தேசிய மரியாதை, எம்.ஜி.ஆர் அவர்களுக்குத்தான் கிடைத்தது.

ஒரு மாநில முதல்வரின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூடி முதல் முறையாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது எம்.ஜி.ஆர். அவர்களுக்குத்தான்.

இந்திய குடியரசுத்தலைவர், துணைத்தலைவர், இந்தியப் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் இலங்கை அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செய்தது.

நம் நாட்டில் உள்ள எல்லா சட்ட மன்றங்களுக்கும் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது…

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, பிரதமர் பிரேமதாசா ஆகியோரின் அஞ்சலி….

இந்தியநாடு முழுவதும் அவர் மறைந்த அன்று பணிகளை நிறுத்தி செயலற்று துக்கம் அனுசரித்தது…

அமெரிக்க மலேசிய அரசு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது….

லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், இன்னும் வரிசை வரிசையாக வந்து அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவது…

அவர்மீது உலகமே கொண்டிருக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டு.

மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் அழியாப் புகழ் பெற்ற அவர் தலைவர்களில் புரட்சித் தலைவர்.

எங்கள் நிறுவனத்திற்காக ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார். அவர் எங்க வீட்டுப் பிள்ளை மட்டுமல்ல, உங்கள் எல்லோருடைய வீட்டுப் பிள்ளையும்கூட.

படங்களில் அவர் ஹீரோ.

மக்களில் அவர் ஹீரோ.

அரசியலில் அவர் ஹீரோ.

ஆபிரகாம் லிங்கன், கென்னடி, இந்திரா காந்தி ஆகியோரைப் போல புகழின் உச்சியில் இருக்கும்போது அமரராகிய அவர் மறைந்த போதும் ஹீரோ.

மறைந்த பிறகும் அவர் ஹீரோ. இந்த தலைமுறையில் மட்டுமல்ல. வரும் தலைமுறைகளிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஹீரோவாகவே இருப்பார்.

மேஜர்தாசன் (எ) தேவாதிராஜன் எழுதிய எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.என்ற நூலிலிருந்து ஒரு பகுதி

You might also like