இருக்கையின் நுனியில் அமர வைக்கும், கண்களில் பொறி பறக்க வைக்கும், நகம் கடிக்க வைக்கும், பயத்தில் வியர்வை அரும்ப வைக்கும், திகிலில் மூளையைச் சில்லிட வைக்கும், நினைத்தாலே தலையைக் கிறுகிறுக்க வைக்கும் என ‘த்ரில்லர்’ படங்களிலேயே பல கிளைகளைப் பிரிக்கலாம்.
கிட்டத்தட்ட இவையனைத்தையும் தொட்டுச் செல்கிற ‘அந்தாக்ஷரி’ நம் கண்ணெதிரே ஒரு கொடூரம் நிகழவிருக்கிறது என்று பயமூட்டிய வகையில் பாராட்டுகளை அள்ளுகிறது.
’த்ரிஷ்யம்’ இயக்குனர் ஜீத்து ஜோசப் தயாரிப்பில் விபின் தாஸ் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் சோனி லைவ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஒரு பாடல் முடியும் எழுத்தில் இன்னொரு பாடலைப் பாடும் ‘அந்தாக்ஷரி’ விளையாட்டில் எப்படி ஒரு கொலைகாரனின் கொடூரம் கலக்க முடியும் என்ற கேள்வி டைட்டிலை, ட்ரெய்லரை பார்த்ததும் எழுந்தது. அச்சவாலை படம் பூர்த்தி செய்ததா என்பதை அறிய இதனைக் காணலாம்.
புதிர்த் துண்டுகள்!
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தாஸ் (சைஜு குரூப்) கேதாரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்களை ‘அந்தாக்ஷரி’ பாடச் சொல்லி பாடாய் படுத்துபவர். அவரது இந்தச் செய்கையே சக போலீஸ்காரர்கள் மத்தியில் மரியாதை இல்லாமல் இருக்கச் செய்கிறது.
ஒருநாள் பழைய புல்லட் ஒன்றை வாங்கிக் கொண்டு காவல் நிலையம் வருகிறார். விசாரணை செய்து கொண்டிருக்கும்போது ஒரு போன் கால் வருகிறது.
எதிர்முனையில் இருப்பவர் தாஸ் போலவே அந்தாக்ஷரி பாடுகிறார். ‘யார் நீங்க’ என்று கேட்கும்போது ‘இதை உன் மகளிடம் கேள்’ என்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, முகம் தெரியாத ஒரு மர்ம நபரால் ஸ்டெதஸ்கோப் கொண்டு தாக்குதலுக்கு ஆளாகிறார் தாஸின் மகள்.
ஒரு கொடூரமான கொலைகாரனின் குறி தன் குடும்பம் மீது விழுந்ததும், அதற்கு என்ன காரணம் என்று கண்டறியத் தொடங்குகிறார் தாஸ்.
கொலையாளியையும் அவர் கொல்லத் துடிப்பதற்கான காரணத்தையும் அறிந்த பின்னர் என்ன செய்கிறார் என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
ஒரு கொலை, ஒரு முன்கதை, நடப்பு காலம் என ஆங்காங்கே துண்டு துண்டாகத் தென்படும் காட்சிகள். இவை அடுத்தடுத்து வரும்போது உருவாகும் வடிவம் கிளைமேக்ஸில் ஒரு கதையாக உருப்பெறுகிறது.
இந்த கதை சொல்லல்தான் குறைந்த செலவில் நிறைந்த அனுபவத்தைத் தந்துவிட்டார் என்று இயக்குனர் விபின் தாஸை பாராட்டத் தோன்றுகிறது.
அதிரும் மனம்!
‘த்ருஷ்யம்’ உள்ளிட்ட பல மலையாள த்ரில்லர் படங்கள் யதார்த்தமான கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் பிரதிபலித்தாலும் கூட, ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில் இருந்து விலகத் தோன்றாது.
தமிழில் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்தில் பாத்திரங்கள் அந்நியமாகத் தோன்றினாலும், அக்கதை உண்மையில் நிகழ்வது போன்ற உணர்வு ஏற்படும். அந்த வகையில், இதில் களமும் கதாபாத்திரங்களும் படுயதார்த்தமாக இருப்பது கூடுதலாக ஒருவித படபடப்பை நம் மீது போர்த்துகிறது.
இப்படைப்பின் சிறப்பம்சமே கொலையாளி யார் என்ற அனுமானத்தை நோக்கியே பார்வையாளர்களான நம்மைப் பயணிக்க வைத்திருப்பது. அதற்கேற்ப ஒரு மருத்துவர் நாயகனின் மனைவியிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயற்சிக்கிறார். அவரது மேஜையில் ஒரு ஸ்டெதஸ்கோப் உறங்குகிறது.
சிறுவயதில் ஐஸ் வண்டிக்காரரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி, வளர்ந்து பெரியவளாகி அதே கேதாரம் ஊருக்கு வருகிறார்.
இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், அதிலும் நிம்மதியை எதிர்கொள்ளாமல் தன் மகனோடும் மகளோடும் வாழ்கிறார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தனியிடத்தில் வாழும் ஒரு தாயும் மகனும் சிலரது கழுகுப் பார்வைக்கு இரையாகின்றனர். அவர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த சிறுவனுக்கு புல்லட் வாகனம் மீது அளப்பரிய ஆசை இருக்கிறது.
இத்தனை தகவல்களையும் திரைக்கதையில் ஆங்காங்கே கொட்டி, இதன் வழியே தெள்ளத்தெளிவாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறேன் என்று இறுதியில் ‘த்ரில்’ கூட்டுகிறார் இயக்குனர்.
ஒவ்வொரு காட்சிக்குப் பின்னும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நம் மனம் அதிர்வதே இதற்குச் சாட்சி.
ஒரு மனிதனின் பார்வை!
‘அந்தாக்ஷரி’யின் ஒட்டுமொத்த வெற்றியும் விபின் தாஸ் எனும் ஒற்றை மனிதரின் நம்பிக்கையில் அடங்கியிருக்கிறது. வழக்கமான திரைப்படங்களுக்கே உரிய ‘கொக்கி’ போட்டு இழுக்கும் திருப்பங்கள் இதில் கிடையாது.
ஆனாலும், படம் பார்க்கும்போது தலைக்குள் ‘கிர்.ர்..ர்…’ என்று ஒருவித பரபரப்பு பரவும். மரண பயத்தை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் உணரச் செய்யும்.
இப்படியொரு த்ரில்லர் கதையில் சாதீய அடக்குமுறைகள், பெண்களை இழிவுபடுத்துதல், சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்கள், குடும்ப வன்முறை, நாயகனின் எளிமையான மனதைக் கிண்டல் செய்யும் சமூகம் என்று பல விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் விபின் தாஸ்.
சைஜு குரூப், சுதி கோப்பா, ‘வெயில்’ பிரியங்கா என்று துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களைக் கொண்டே ஒரு முழுநீளப் படத்தை தந்திருக்கிறார்.
அதே நேரத்தில் சம்பந்தமில்லாமல் சில பாத்திரங்களையும் அவை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் காட்டி, நம் மனதை ஊசலாட வைத்திருக்கிறார்.
கால வேறுபாட்டை திரையில் சொல்லாதது, சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகுதல் உள்ளிட்ட சில கிளைக்கதைகள் திரைக்கதையில் இடம்பெற்றமைக்கான காரணம் சொல்லப்படாதது, கொலையாளியை முன்கூட்டியே நம் கண்ணில் காட்டாதது உட்பட மிகச்சில விஷயங்கள் கொஞ்சம் துருத்தலாகத் தெரிகின்றன.
ஒடுக்கப்பட்ட சில சமூகத்தினர் மீது மேலும் பல அத்துமீறல்களை அள்ளிக்கொட்டும் வண்ணம் சில கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது எதிர்ப்புக்கு உள்ளாகலாம். அதையும் மீறி, எவ்வித துவேஷங்களும் இல்லாமல் தான் சொல்ல நினைத்ததை திரை வடிவமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தொடக்க காட்சிகளில் பாப்லு அஜுவின் ஒளிப்பதிவு ஒரு தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் உணர்வையே உருவாக்குகிறது. ஒருகட்டத்தில் அதுவே திரைக்கதையை உண்மைத் தன்மையை நோக்கி நகர்த்துவதாக மாறுகிறது.
போலவே, மிகச்சில இடங்களில் மட்டுமே வரும் அங்கீத் மேனனின் பின்னணி இசை மாராத்தான் ஓட்டப்பந்தயத்தின் இறுதியில் வேகமெடுக்கும் வீரனைப் போல கிளைமேக்ஸில் பரபரப்பின் உச்சத்தைத் தொடுகிறது.
படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் விபின் தாஸின் பேட்டியைப் படித்தால், கொரோனா கால ஊரடங்கினால் முன் தயாரிப்புப் பணி, படப்பிடிப்பு மட்டுமல்லாமல் பின் தயாரிப்பும் வெளியீடும் கூட பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளானதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
இதையெல்லாம் மீறி, இந்த படத்தில் ஜீத்து ஜோசப்பின் பெயர் இணைந்ததே பலரது கவனத்தையும் பெறக் காரணமானது.
அந்த வகையில், மலையாள சினிமாவுக்கு விபின் தாஸை அறிமுகப்படுத்திய ஜீத்துவை வரவேற்கும் அளவுக்கு மரியாதை செய்திருக்கிறது ‘அந்தாக்ஷரி’.
- உதய் பாடகலிங்கம்