பங்களூர்: செப்டம்பர் பனிரண்டாம் தேதி மாலை 3-30. பாதி கட்டி முடித்திருந்த அந்த எட்டு மாடிக் கட்டடம், மூன்று நாட்களாக நசநசவென்று மழையில் நனைந்த பிறகு, தலையில் வைத்திருக்கும் பதினைந்து டன் வாட்டர் டாங்க்கின் கனமும் தாங்காமல் சற்று உட்காரலாமே என்று தீர்மானித்தது.
அருகே கபாவி தியேட்டரில் காலையிலிருந்து க்யூவில் நின்று 1-60 டிக்கெட் எடுத்து டாக்டர் ராஜ்குமார் படத்தின் (பக்த பிரகலாதா) டைட்டில்கள் ஓடிக் கொண்டிருப்பதை நாற்காலியில் சாய்ந்து ரசித்துக் கொண்டிருந்த சித்தகௌடா திடீர் என்று குளிர் காற்று வீசுவதை உணர்ந்து திரும்பினார்.
தியேட்டரின் பக்கவாட்டு சுவர் உடைபட்டு உள்ளே சரளமாக கான்க்ரீட்டும் இரும்பும் செங்கல்லும் சினிமா பார்க்க வரும் ஆவேசத்தைப் பார்த்து ‘இது என்ன புது மாதிரி சினிமா?’ என்று யோசிப்பதற்குள் – சித்தகௌடாவை அந்த வினோத கான்க்ரீட் அருவி குழ்ந்து கொண்டுவிட்டது.
அத்தனை பேரும் வாசல் வாசல் என்று பதறி ஓட, சஞ்சீவையா தன் மனைவி ஹனுமக்காவைத் தேடி எதிர்ப் பக்கம் ஓடினார். அந்தப் பெண் கணவரைத் தேடி ஓட, இரண்டு பேருக்கும் பலத்த அடி.
சுபதார் சத்திரம் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த செல்வராஜ் தன் வாழ்நாளிலேயே கேட்டிராத புது மாதிரி சப்தத்தைக் கேட்டான். ஒரு எட்டு மாடிக் கட்டடம் விழும் சப்தம்.
ஒரு மாதிரி உறுமல் போலவும், ஒரு விதத்தில் வெடிச் சப்தம் போலவும், எதோ ஹாலிவுட் படத்தில் போல அத்தனை கட்டடமும் அவசரமாகச் சரிய….
ஆறாவது மாடியில் கூலி வேளை செய்து கொண்டிருந்த ராணிக்குப் புரியவில்லை இது என்ன இத்தனை சீக்கிரம் கீழே போகிறோம் என்று நினைப்பதற்குள் அவளை இருள் சூழ்ந்து கொண்டது.
கட்டடம் பிரம்மாண்டமாகச் சரிந்தது. அதை ஸ்லோ மோஷனில் பார்க்க முடிந்தால் முதலில் கபாலி தியேட்டரை சிராய்த்துவிட்டு அதன்பின் ஒரு புடவை கடையைப் பதம்பார்த்துவிட்டு பங்களூர் புக் பீரோ என்னும் புத்ததக் கடையின் மேல் முழுக்க உட்காருவதைப் பார்த்திருக்கலாம். ஆனால், நடந்ததென்னவோ ஒரு விநாடி புக் ஷாப், மறு விநாடி குப்பை!
இருபத்தாறு வயசு நஸீர் தன்னை மண்டையில் அடித்தது என்ன என்று தெரிவதற்குள் மயக்கமடைந்தார்.
புத்தகக் கடையின் பேஸ்மெண்ட்டில் முதலாளி கங்காராமின் மகன் தேவி பிரசாத் தன் உறவுக்காரர் அஷோக் நண்பர் மேடப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார். கடைக்காரப் பையனை டேய், மூணு டீ வாங்கிட்டு வா என்று அனுப்பினார்.
பையன் கடைக்குப் போய் டீ வாங்கிக் கொண்டு திரும்பியபோது ஆச்சரியப் பட்டான். “அட, இங்க ஒரு கட்டடம் இருந்துச்சே, என்ன ஆச்சு”!
அஷோக், தேவிபிரசாத் மேடப்பா மூவரும் பேஸ்மெண்ட்டில் மாட்டிக் கொண்டு இதை எழுதும் வரை ஏழு நாட்கள் – இன்னும் காப்பாற்றப்படவில்லை. பேஸ்மெண்ட்டில் இருக்கும் போன் ஆச்சர்யமாக வேலை செய்கிறது. கால் போட்டால் ஹீனஸ்வரம் கேட்கிறது.
பங்களூரின் சரித்திரத்திலேயே மிக மோசமான விபத்து. தீயணைக்கும் படையினர், ராணுவம், கடற்படையினர், கோலார் தங்கச் சுரங்கத்து எக்ஸ்பர்ட்டுகள் மற்றும் தன்னிச்சையாக உதவி செய்ய முன்வந்தவர்கள், வெல்டர்கள், ஓட்டல்காரர்கள் பொழுதுபோகாமல் வேடிக்கை பார்க்க வந்தவர்கள், புத்தகம் சீப்பாகக் கிடைக்குமோ என்ற நம்பிகையில் வந்தவர்கள் என்று அந்தப் பிரதேசமே ஜனத்திரள்!
போதாக்குறைக்கு மழை வேறே! அந்த மகா கான்க்ரீட் குப்பையை ராப்பகலாக விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். உடல் உடலாக இழுத்தப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விபாகர் – கோலாரில் ஒரு கல்லூரியில் உதவி ப்ரொபஸர். ஒரு நாளைக்கு பங்களூர் வந்தவர், நண்பரிடம் கொஞ்சம் இருங்கள், ஒன்றிரண்டு புஸ்தகங்கள் வாங்கி வருகிறேன் என்று புஸ்தகக் கடைக்குப் போனவர்! கோலாரில் அவர் மனைவியும் குழந்தைகளும் எட்டு நாட்களாக அவர் வரவில்லையே என்று பதறிப்போய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே இருக்கிறாரா, உயிருடன் இருக்கிறாரா தெரியவில்லை. அவருக்கு ப்ரொபஸராகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறதாம்!
நஸீருக்கு நினைவு வந்தபோது விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்தார். மண்டையின் பல பாகங்கள் உடைந்து மூளை வெளியே தெரிய, அவர் இட்ட கூக்குரல் வெளியே மார்க்கெட் பூரா கேட்டது – நஸீர் நல்லவேளை இறந்து போனார்.
தப்பித்தவர்களும் உண்டு. சதானந்தமும் ஆறுமுகமும், “மாடியில் வேலை செய்து கொண்டிருந்தோம்!” என்று புஸ்தகக் கடைக்கு வந்தோம் என்று வியப்பதற்குள் அவர்களை கான்க்ரீட் மழை சூழ்ந்து கொண்டுவிட்டது.
கத்திப் பார்த்துப் பிரேயோசனமில்லை. வெளியில் எதோ நடக்கிறது, தெரிகிறது. மூச்சுத் திணறுகிறது. இதோ வருவார்கள் இதோ வருவார்கள் என்று எதிர்பார்த்துப் பன்னிரண்டு மணியாயிற்று இருபத்துநாலு….
ம்ஹீம்! பசி, அதைவிட தாகம்! தாகம்! இருக்கிற பீடியையெல்லாம் குடித்தாகி விட்டது… பசியையாவது சமாளிக்க முடிந்தது. ஆனால், இந்தக் தாகம்தான்! என்ன செய்வது? மூத்திரம்தான்! மீனாட்சியின் கதை வேறு. ஒரு பெரிய கான்க்ரிட் உத்தரத்தின்கீழ் அவள் கால் வசமாக மாட்டிக் கொண்டுவிட்டது.
சின்ன ஓட்டை வழியாக வெளியுலகம் தெரிகிறது. நடக்கும் கால்கள் தெரிகின்றன. கூப்பிட விரும்புகிறாள், குரல் எழவில்லை. காலை நகர்த்த முடியவில்லை. வலியோ வலி. காலை வெட்டிக் கொண்டுவிட முயற்சி செய்கிறாள். முடியவில்லை. அருகே ஒரு கயிறு தெரிகிறது.
அதை எப்படியாவது எடுத்துக் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு செத்துப் போய்விட முயல்கிறாள். அதுவும் முடியவில்லை. எங்கேயோ உயிர் வாழும் இச்சை மிச்சமிருந்தது. தொண்ணூறு மணி நேரம் மீனாட்சி தாக்குப் பிடித்திருக்கிறாள். காப்பாற்றப்பட்டாள்.
மெஜஸ்டிக் பிரதேசத்தில் அந்த இடத்தைப் பார்த்தால் எதோ பெய்ரூட் யுத்தப் பிரதேசம் போலத்தான் இருக்கிறது. கட்டடம் யாருடையது? கங்கா ராம்… பங்களூர் புடப பீரோ! இந்தியாவிலேயே மிகப் பெரிய புத்தகக் கடையில் புத்தகங்கள் அத்தனையும் நடுத் தெருவில் மழையில் கிடக்கின்றன. போலீஸ் உதவி கமிஷனர் கீழே பொறுக்குகிறார்.
‘போலீஸ் பவர்’ என்கிற புத்தகம்! பத்திரிகை நிருபர் காலில் நிரடுவது ‘களிமண் வேலை’ செய்வது எப்படி? என்கிற புத்தகம். சமீபத்தில்தான் பிபிபியை விரிவுபடுத்தி பேஸ்மெண்ட் ஷோரூம் மாடியில் பெரிய ஹால் என்று ஆயிரக்கணக்கான புத்தங்களை அடுக்கினார்கள்.
கங்காராமுக்கு மூன்று பிள்ளைகள் மூவரையும் எனக்குத் தெரியும். எந்தப் புத்தகம் கேட்டாலும் அதை எழுதியது யார், சப்ஜெக்ட் என்ன, எந்த அலமாரியில் இருக்கிறது என்று எல்லாமே அத்துபடி!
லண்டன் ஃபாயில்ஸ் நியூயார்க் பார்ண்ஸ் அண்ட் நோபிள் போன்ற பிரம்மாண்டமான புத்தகக் கடைகளைப் பார்த்து வந்து அது போல் புத்தகக் கடை ஆறு மாடியாவது வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பக்கத்து மனையை வாங்கிப் போட்டு இந்த எட்டு மாடிக் கட்டடத்தை எழுப்பினார்கள் அத்தனையும் பொடிப் பொடியாகி விட்டது.
இதற்கெல்லாம் காரணம் யார்? கங்காராமை அரஸ்ட் பண்ணி பெயிலில் விட்டார்களாம். கண்ட்ராக்டரைத் தேடலாம் என்றால் கட்டடம் விழுந்தபோது மாட்டிக் கொண்டு காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்தியில் காலமாகிவிட்டார்.
யார் காரணம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். சிமெண்டு கலப்படமா, டிஸைன் பண்ணது தப்பா, ஆர்க்கி டெக்ட்டைப் பிடிக்கலாமா என்று யாராவது அகப்படுவார்கள்….
எத்தனை பேர் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நூறு என்கிறார்கள் முன்னூறு என்கிறார்கள். மொத்தம் அம்பது உடல்களை எடுத்து விட்டார்கள்.
உள்ளே இன்னும் எத்தனை ஈனஸ்வரங்கள் பாக்கியிருக்கின்றன என்று தெரியவில்லை. எடுக்க எடுக்க சீதம்மா, கங்கம்மா, மல்லியம்மா, எல்லம்மா என்று வந்துகொண்டே இருக்கிறது! எல்லாரும் ஏழை கட்டடத் தொழிலாளிகள்.
பங்களூரில் பல மாடிக் கட்டடங்களை எல்லாவற்றையும் சர்க்கார் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள். ஜனங்கள் கொஞ்சம் தள்ளியே நடந்து போகிறார்கள். இங்கே காப்பாற்றும்
வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது பேட்டையே ஒரு மாதிரி நாறுகிறது. வானத்தில் பருந்துகள் வட்டமிடுகின்றன. டாக்டர் ராஜ்குமாரின் பிரம்மாண்டமான கட்அவுட் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
– 1990-ல் பெங்களூரில் ஒரு விபத்து பற்றி எழுத்தாளர் ‘சுஜாதா எப்படி எழுதியிருக்கிறார்’ பாருங்கள்.