மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்புப் பதிவு (ஏப்ரல்-25)
தமிழ் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை, புதினம் மட்டுமல்லாது ஆராய்ச்சி நூல்களின் மூலம் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்த சாமானியன்… அல்ல அல்ல சாமானியத் தோற்றம் பொதிந்த சாதனையாளன், ‘மு.வ’ என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் போன்ற பிரசித்திப்பெற்ற கல்விப் பட்டறைகளின் தமிழ்த் துறைத் தலைவராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி, தமிழுக்கே உரிய சிறப்புகளை தன் படைப்புகள் மூலம் பறைசாற்றிய பேராசிரியர்.
இத்தனை சிறப்புகளோடும் பெருமைகளோடும் நல்லாசிரியர், சிறந்த பண்பாளர், சமுதாயச் சிற்பி போன்ற பன்முகத் தன்மைகளின் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை இன்றும் கொண்டுள்ளார் ‘மு.வ’ .
தமிழுக்கும் தமிழ் மகனாருக்கும், அவர் சார்ந்த இனம் செய்யும் மரியாதையே இந்தக் கட்டுரை. ஆம், அண்ணாரின் நினைவு தினமான இன்று இந்தக் கட்டுரையைப் படைப்பதில் தமிழ் மொழியைப் போலவே நானும் பெருமிதம்கொள்கிறேன்.
1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, திருப்பத்தூர் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்கு, பொற்சிலை போன்றதொரு குழந்தை பிறந்தது.
தமிழ் இலக்கிய உலகை ஆளப்பிறந்த அந்தக் குழந்தைக்கு ‘திருவேங்கடம்’ எனப் பெயர் சூட்டினர் அந்தத் தம்பதி. தமிழ் உறவுகளின்மீது அந்தக் குழந்தைகொண்ட உரிமையின் காரணமாக தாத்தாவின் இயற்பெயரான ‘வரதராசன்’ என்ற பெயரே அந்தக் குழந்தைக்கு நிலைத்துவிட்டது.
தன் உயர் நிலைக் கல்வியை திருப்பத்தூரில் முடித்த மு.வ., 16-வது வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது யோசனையில் ஆழ்ந்த மு.வ., விரைவிலேயே தமிழின்பால் தணியாத மோகம்கொண்டார். தமிழுக்கே தன்னைத் தத்துக்கொடுத்துக் கொண்ட மு.வ., விரைவிலேயே எழுத்தர் பணியிலிருந்து விடுபட்டு, கிராமத்துக்குச் சென்று திருப்பத்தூர் முருகைய முதலியாரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.
1935-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ம் ஆண்டு பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.
அதே ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக சென்னை வந்த மு.வ., அங்கு `கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்’ என்ற பொறுப்பை ஏற்றார்.
1944-ம் ஆண்டில் `தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டத்தையும் பெற்றார்.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கிணங்க, சென்னை, திருப்பதி, மைசூர், கேரளா, பெங்களூரு, ஆந்திரா, டெல்லி, மதுரை எனப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மதிப்புமிக்க பதவிகள் அவரைத் தேடி வந்தன.
செனட் உறுப்பினர், கல்வி வாரிய உறுப்பினர் போன்ற பல பதவிகளை அலங்கரித்தார் மு.வ. அமெரிக்கக் கல்லூரியான Wooster, 1972-ம் ஆண்டு இவருக்கு இலக்கியப் பேரறிஞர் என்ற பட்டம் அளித்து அந்தப் பட்டத்துக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது.
இந்தப் பட்டம் பெற்ற முதல் தமிழர், தமிழ் அறிஞர், தமிழ்க் காவலர் மு.வ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் இசைச் சங்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் கலை மன்றம், ஆங்கிலம் – தமிழ் அகராதிக் குழு, இந்திய மொழிக் குழு, சாகித்ய அகாடமி குழு,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு மற்றும் மத்திய அரசு தேர்வாணையக் குழு போன்ற சமுதாயத்தை சீரான முறையில் வடிவமைக்கக்கூடிய பல்வேறு கல்விக் குழுக்களின் தலைமகனாக இருந்து, அங்கு தனக்கான தமிழ் முத்திரையைப் பதித்தார் என்பது அவரின் தனிச் சிறப்புகளுள் ஒன்று.
`சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பின் கீழ் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து, 1948-ம் ஆண்டு தமிழில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பெருமகனார் மு.வ. 1945-ம் ஆண்டு முதல் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர், 1948-ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்து தமிழுக்குத் தொண்டாற்றினார். 1971-ம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
`அகல் விளக்கு’, `கள்ளோ காவியமோ?’, `கரித்துண்டு’, `பெற்ற மனம்’, `நெஞ்சில் ஒரு முள்’, `மண் குடிசை’, `செந்தாமரை’ (மு.வ. தானே பதிப்பித்தது) போன்ற நாவல்களும், `குறட்டை ஒலி’, `விடுதலையா?’ போன்ற சிறுகதைகளும், அரசியல், அறம், பெண்மை, மொழி சார்ந்த கட்டுரைகளும், `தமிழ் நெஞ்சம்’, `ஓவச்செய்தி’, `இலக்கிய ஆராய்ச்சி’, `சங்க இலக்கியத்தில் இயற்கை’, `நடை வண்டி’, `நற்றிணை விருந்து’ போன்ற பல இலக்கியப் படைப்புகளும், சிறுவர் இலக்கியமும் மு.வ-வுக்குப் பெருமை சேர்த்த படைப்புகளில் சில.
மு.வ. தான் எழுதிய பெரும்பாலான நூல்களுள், தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டிலேயே வெளிவந்தன. இவர் எழுதிய `அகல் விளக்கு’ என்ற நாவலுக்கு 1963-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. `கள்ளோ காவியமோ?’ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.
கம்ப ராமாயணத்தின் தனிச் சிறப்புகளை தனக்கே உரிய பேச்சுவழக்கில் எடுத்துரைத்தவர். வள்ளுவமும் காந்தியமும் அவருக்குப் பிடித்தமானவை. தூய்மையான வாழ்க்கையில் பொதிந்துள்ள அறநெறிகளை அகிலத்துக்கு வழங்கியவர்.
திருவாசக வரிகளையும், தாயுமானவர் பாடல்களையும் தன்னகத்தே பதித்துக்கொண்டு தன்னை பண்படுத்திக்கொண்டதோடு, பெரியோர், சிறியோர், சான்றோர், சமூகத்தோர் போன்றோரிடம் வெளிப்படுத்தவேண்டிய நாகரிகப் பண்புகளையும் மரியாதையையும் பறைசாற்றியவர்.
சங்க இலக்கிய நூல்களையும் சிலப்பதிகாரச் சிறப்பையும் மனம் குளிர வெளிப்படையாகப் போற்றியவர் மு.வ.
1974-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தாம் மறையும் வரை தமிழுக்காகவே வாழ்ந்த மு.வ-வை காலம் கடத்திச் சென்றாலும், ஞாலம் முழுக்க வியாபித்திருக்கும் இவரின் படைப்புகள், வளரும் தமிழ் இலக்கியச் சமூகத்துக்கான உரமாக இருந்து தமிழை தழைத்தோங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை!
நன்றி: ஆனந்த விகடன்