எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் பிரதமருடன், மாநில முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்” என்று கூறினார்.

அதோடு, “தடுப்பூசிப் போடாதவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

You might also like