மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில் மனைவி கொடுமை செய்ததாகவும், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதோடு, தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் கூறி பராமரிப்புச் செலவை வழங்க முடியாது என வாதாடினார்.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங், “பராமரிப்புச் சட்டம் ஒரு ஆணின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய நடைமுறை சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தவும், கணவன் மீது சுமத்தப்படும் பொறுப்பிலிருந்து தப்பிக்க ஆதாரமற்ற சர்ச்சைகளை உருவாக்குவதுமாக உள்ளது.

மனைவி கொடுமை மற்றும் துன்புறுத்தல் போன்ற காரணங்களைக் கூறி பராமரிப்புச் செலவை வழங்காமல் இருக்க சட்டத்தில் இடமில்லை.

மனைவி கொடுமை காரணமாக கணவருக்கு விவாகரத்து வழங்கப்படும் வழக்குகளில் கூட, நீதிமன்றங்கள் மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்குகின்றன.

மனைவி ஜீவனாம்சம் கோருவதற்கு கொடுமைப்படுத்தினார் என்ற காரணம் தடையில்லை. அவை ஜீவனாம்சத்தைப் பறிக்காது. இதற்கு பல்வேறு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் முன்னுதாரணங்கள் உண்டு.

மனைவி பிரிந்துச் சென்ற பின் வேறொருவருடன் தொடர்ந்து உறவில் இருந்தார் என்பதை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

பிரிந்த பின் ஒருமுறை அல்லது எப்போதாவது ஒருவருடன் உறவில் இருப்பதனை காரணம் காட்டி ஜீவனாம்சத்தை நிறுத்த முடியாது” எனக் கூறினார்.

You might also like