பீஸ்ட் – கொஞ்சம் ‘பயங்கரம்’ தான்!

கொடூரமான வில்லன் குணம். அதற்கு மாறான நாயகன் மனம். இதுதான் இப்போதைய ‘மாஸ் ஹீரோ’க்களுக்கான இலக்கணம். இந்த வகைப்பாட்டை அப்படியே தாங்கி நிற்கிறது ‘பீஸ்ட்’.

’பேர் சொல்லுமே அனைத்தையும்’ என்பதைப் போல டைட்டிலுக்கு ஏற்றவாறு முழுப்படமும் அமைந்திருக்கிறது என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. இதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு இப்படம் கொஞ்சமாய் மாறுபட்ட விஜய்யை காணத் தரும்.

வில்லனைப் பந்தாடும் கதை!

சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ‘ஈஸ்ட் கோஸ்ட்’ மால் ஒரு பயங்கரவாதக் கும்பலால் பிடிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பிடிக்கப்பட்ட உமர் பாரூக் (லில்லிபுட்) என்பவரை விடுவிக்க வேண்டுமென்பது அக்கும்பலின் கோரிக்கை.

தமிழ்நாட்டு காவல் துறை, தேசிய பாதுகாப்புப் படை தாண்டி இப்பிரச்சனை ‘ரா’ உளவுப்பிரிவு (?!) வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதனைக் கையாளும் தலைமை அதிகாரி அல்டாஃப் ஹுசைன் (செல்வராகவன்), தற்செயலாக அந்த மாலுக்குள் ராவில் பணியாற்றி விலகிய வீர ராகவன் (விஜய்) அங்கிருப்பதைத் தெரிந்து கொள்கிறார்.

வீரா மூலமாக அல்டாஃப் ஹூசைன் அக்கும்பலின் முயற்சியை முறியடிக்க எண்ணுகிறார்.

ஏற்கனவே தனது கேள்விகளுக்கு தவறாகப் பதிலளித்து ஒரு குழந்தையின் மரணத்திற்கு காரணமான ‘ரா’ உடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்கிறார் வீரா.

இப்படியொரு வலுவான முரண் இருக்க, இதனை மீறி வீரா அந்த பயங்கரவாத கும்பலைப் பந்தாடி அந்த மாலில் இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதுதான் ‘பீஸ்ட்’ கதை.

சிரிக்க வைக்கும் நெல்சன்!

மும்பையில் நடந்த 9/11 தாக்குதலை மையப்படுத்தி ‘துப்பாக்கி’ எடுக்கப்பட்டது போல, ஒரு மாலை தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் கும்பலை முன்வைத்து இக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன்.

மேலோட்டமாகப் பார்த்தால், விஜய்காந்த் நடித்த ‘வல்லரசு’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் சொல்லப்பட்ட ’பயங்கரவாத இயக்க சதி’களை முறியடிக்கும் நாயகனின் சாகசங்கள் தான் இதிலும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், முதலிரண்டு படங்களில் அவல நகைச்சுவையை துணையாகக் கொண்டு மரண பயத்தைக் காண்பித்த நெல்சன் இதிலும் அந்த பாணி திரைக்கதைக்குள் விஜய் ஏற்றிருக்கும் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

விடிவி கணேஷ், கொரியோகிராஃபர் சதீஷ், ‘பாரிஸ் ஜெயராஜ்’ பிருத்விராஜ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி இவர்களுடன் ’டாக்டர்’ படத்தில் வந்த அதே பாத்திரங்களை இதிலும் வழி மொழிந்திருக்கும் சுனில் ரெட்டி, சிவா ஆகியோர் விஜய்யின் ‘ஆக்‌ஷன்’ அதகளத்திற்கு நடுவே ஆங்காங்கே நம்மை கிச்சுகிச்சு மூட்டியிருக்கின்றனர்.

‘டாக்டர்’ படத்தில் வினய் குரூப்பை கொஞ்சம் முட்டாள்களாகச் சித்தரித்தது போல, இதிலும் பயங்கரவாத கும்பலை ‘பப்படம்’ ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

கொஞ்சமாய் அவர்களது கொடூரத்தைக் காண்பித்தாலும் ‘பேமிலி’ ஆடியன்ஸ் பின்வாங்கிவிடுவார்கள் என்று யோசித்தவர், அந்த வேலையை விஜய்யிடம் தந்தது ஏன் என்று விளங்கவில்லை.

ஏனென்றால், தொடக்கத்தில் வரும் சண்டைக்காட்சி முதல் இறுதி வரை விஜய்யின் ஆக்‌ஷன் முழுக்க வன்முறை நிரம்பி வழிகிறது. அதைப் பார்க்கையில், ‘ஓ ட்ரெய்லர்ல சொன்ன பயங்கரம் இதுதானோ’ என்று நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

விஜய்க்கு வயசாயிடுச்சு!

ஆக்‌ஷன், டான்ஸ், ஹ்யூமர் பகுதிகளில் துறுதுறுவென்று ஒரு கல்லூரி பையனை பார்க்கும் உணர்வை விஜய் ஏற்படுத்தினாலும், ‘க்ளோஸ் அப்’ காட்சிகளில் முகச்சுருக்கங்கள் வயதை நினைவூட்டுகின்றன.

அதனை மறைக்க வேண்டாமே என்ற எண்ணத்துடன் ‘ட்ரிம்’ செய்யப்படாத ஆங்காங்கே வெள்ளை மயிர் கொண்ட தாடி மீசையுடன் தோன்றியிருக்கிறார்.

அதற்கேற்றவாறு, அவரது பாத்திரமும் கொஞ்சம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவாறு காட்டியிருப்பது அருமையான உத்தி. ஆனால், அது பிருத்விராஜ் இடம்பெறும் இரண்டொரு காட்சிகளோடு முடிந்தது வருத்தம்.

அதை மட்டும் பின்பாதியில் கொஞ்சம் மெருகேற்றிப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் சில முறை சிரிப்பை உதிர்த்திருக்கலாம்.

கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பூஜா ஹெக்டேவின் முன்பகுதி அழகை காட்டியிருக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா. முதன்மையான பாத்திரங்களின் பின்னணியில் இருக்கும் பெண்களையும் அத்தனை குட்டியூண்டு ஆடைகளில் காட்டியது ஏனோ?!

அதிகமும் ‘ஆக்‌ஷன்’ பகுதி இருப்பதால், அது மட்டுமே இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ஆசுவாசம் தருமென்று இயக்குனர் நினைத்துவிட்டாரா, தெரியவில்லை.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோவுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும், தமிழில் நல்ல அறிமுகம் என்றளவில் இருக்கிறது. அதேநேரத்தில், வில்லனாக வரும் அங்குர் அஜித் விகால், லில்லிபுட் ஆகியோருக்கு பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை.

காமெடியாக பேசி வில்லத்தனம் பேசி ஷாஜி மட்டுமே கொஞ்சம் ‘ஓவராக’ நடித்திருக்கிறார்.

இக்கதையில் ஒரு ஆச்சர்ய வரவு செல்வராகவன். ரொம்ப ‘கேஷுவலாக’ அவர் வந்துபோயிருப்பது, விரைவில் கவுதம் மேனனை போல இவரும் பல படங்களில் கனமான பாத்திரங்களில் நடிப்பார் என்பதைக் காட்டுகிறது.

‘டாக்டர்’ பாதிப்பு?!

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பாளர் நிர்மல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கிரண் ஆகியோர் இயக்குனருக்குத் தந்த ஒத்துழைப்பு கலர்ஃபுல்லான, செறிவான பிரேம்களை திரையில் பார்க்க வகை செய்திருக்கிறது.

அதோடு, ரசிகர்களின் உற்சாகம் பன்மடங்காகி ‘பீஸ்ட்’ மோடு எட்டும் வகையில் பின்னணி இசை தந்திருக்கிறார் அனிருத்.

இவர்களையெல்லாம் தாண்டி, இப்படத்தில் விஜய்யை வித்தியாசமாக காண்பித்ததில் சண்டை வடிவமைப்பாளர்கள் அன்பறிவுக்கு பெரும் பங்குண்டு. விஎஃப்எக்ஸ் மாயஜாலத்தோடு கைகோர்த்து அவர்கள் தந்திருக்கும் ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் அனைத்தும் திரைக்கதையில் நமக்கெழும் சந்தேகங்களை அடித்து நொறுக்குகிறது.

’டாக்டர்’ படத்தின் கிளைமேக்ஸில் வில்லன் வினய்யிடம் தானாக முன்வந்து சிவகார்த்திகேயன் சரணடையும் காட்சி பெருமளவு இப்படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே போன்றதொரு காட்சி இதிலும் வருகிறது. அதைப் போலவே, படுபயங்கரமான ஆக்‌ஷன் காட்சிகளையடுத்து மனதை லேசாக்க ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலுடன் படம் முடிவடைகிறது.

கனமான கதையைத் தேர்ந்தெடுக்காமல், ஆக்‌ஷன் காட்சிகளுக்கான ஒரு ‘கொக்கி’யை கதாபாத்திரத்தின் அம்சங்களில் ஒன்றாக்கி, அதனை மிகச்சரியான இடத்தில் வெளிப்படுத்தி, வெவ்வேறு முரண்களை ஒரு புள்ளியில் இணைக்கும் வித்தை வாய்த்தால் போதும்; ஒரு நல்ல கமர்ஷியல் திரைப்படம் அமைந்துவிடும்.

அதனை கைக்கொண்டிருப்பதே நெல்சனின் ஆகப்பெரிய வெற்றி. அதோடு, உயிர் பயத்தில் இருப்பவர்களின் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் நகைச்சுவையாக்கும் வித்தையும் அவருக்கு கைவந்திருப்பது ஆச்சர்யம். அதுவே ‘பீஸ்ட்’ மோடு ரசிகர்களை தொற்ற காரணம்.

என்னதான் பரபரவென படம் நகர்ந்தாலும், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறியே..! ஒருமுறை பார்த்தாலே ‘ஓஹோ’வென்று வசூல் கொட்டுமே என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அப்படிப் பார்த்தால் இத்திரைப்படம் நிச்சயம் ‘பீஸ்ட்’ தான்!

-உதய் பாடகலிங்கம்

You might also like