டாணாக்காரன் – மக்களுக்கான போலீஸை அடையாளம் காட்டுபவன்!

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ அரசுப் பதவிகள், அரசியல் பீடங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் காவல் துறையின் அடித்தளம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் வெகு சொற்பம்.

வழக்கு எண் 18/9, விசாரணை, ஜெய்பீம், ரைட்டர், கொஞ்சமாக குள்ளநரிக்கூட்டம் என்று தொடரும் அரிய பட்டியலில் சமீபத்திய வரவாகியிருக்கிறது ‘டாணாக்காரன்’.

வெறுமனே காவல் துறையின் நியாய அநியாயங்கள் பற்றிப் பேசாமல், அப்பணி மேற்கொள்வோரின் உளவியல் அடிப்படை குறித்து விவாதித்ததில் வித்தியாசப்படுகிறது இத்திரைப்படம்.

புதுமுக இயக்குனர் என்ற அடையாளத்துடன் நுழைந்திருக்கும் தமிழ், இதன் மூலமாக ரத்தினக் கம்பள வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

பயிற்சித்தளமா வதைகூடமா?

1998ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொழிலாறு காவலர் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அறிவழகன் (விக்ரம் பிரபு) அவர்களில் ஒருவர்.

1982ஆம் ஆண்டு ஆட்சிக்கலைப்பினால் தேர்வு பெற்றும் பயிற்சி பெற முடியாமல் போனவர்களில் 100 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில், 16 ஆண்டு காலம் கழித்து அப்பயிற்சியில் இணைகின்றனர்.

முதல் நாளன்றே, அவர்கள் உடல் தகுதியில்லாதவர்கள் என்று கூறி ஒவ்வொரு குழுவிலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். ஒரு சிலர் பயிற்சியில் சேராமல் பயந்தோட, குடும்ப நிலையைக் கருதி சிலர் மட்டும் அதில் தொடர்கின்றனர்.

அந்த பயிற்சிப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி (மதுசூதன் ராவ்), அவரது சீடரான ஈஸ்வரமூர்த்தி (லால்) வைத்ததே சட்டம் என்றிருக்கிறது.

அவர்களை மீறி எவரும் காவலர் பதவியில் சேர முடியாது எனும் நிலைமை இருக்க, இருவரையும் பகைத்துக் கொள்கின்றனர் அறிவழகனும் அவரது நண்பர்களும்.

ஒருநாள் 82ஆம் ஆண்டு தேர்வானவர்களில் ஒருவர் உடனிருக்கும் சிலரது கொடுமைகள் தாங்காமல் கழிவறையில் தூக்கிலிட்டுக் கொள்ள, இன்னொரு நடுத்தரவயதுக்காரர் மைதானத்தில் ஈஸ்வரமூர்த்தியால் கொடுக்கப்படும் அதீத பயிற்சியில் கலந்துகொண்டு மரணமடைகிறார்.

இச்சம்பவங்கள் பயிற்சி பெறுவோரை கலகக்காரர்களாக மாற்ற, தேர்வு பெறுவோருக்கான குழுக்களும் பயிற்சி அதிகாரிகளும் மாற்றப்படுகின்றனர்.

ஆனால், முத்துப்பாண்டியின் அறிவுறுத்தலின் பேரில் அறிவழகன், முருகன், காதர் பாஷா (பாவெல் நவகீதன்) உள்ளிட்ட சிலர் மட்டும் முழுக்க முழுக்க 82ஆம் ஆண்டு தேர்வானவர்களுடன் சேர்க்கப்படுகின்றனர்.

அவர்களுக்கான பயிற்சி அதிகாரியாக செல்லக்கண்ணு (எம்.எஸ்.பாஸ்கர்) நியமிக்கப்படுகிறார்.

செல்லக்கண்ணுவும் முத்துப்பாண்டியின் அதிகார துஷ்பிரயோகத்தினால் பதவி உயர்வு மறுக்கப்பட்டு பாதிப்படைந்தவர்.

பயிற்சிப் பள்ளியின் இறுதிநாட்களில் நடைபெறும் அணிவகுப்பில் பரிசு பெறுவதே உயர் கவுரவம் என்று கருதப்படும் சூழலில், செல்லக்கண்ணுவின் குழுவைப் புறக்கணிக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இதனை மீறி செல்லக்கண்ணுவும் அறிவழகனும் தம் குழுவை வெற்றி பெற வைத்தார்களா என்பதைச் சொல்கிறது ‘டாணாக்காரன்). கூடவே, மக்களுக்கான போலீஸ் யார் என்பதையும் அடையாளப்படுத்துகிறது.

பயிற்சிக்கு அனைவரும் வருவதில் தொடங்கும் திரைப்படம், அவர்கள் பணிக்கு தயாராவதுடன் முடிவடைகிறது. இடைக்காலத்தில் நாயகனும் அவரைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கும் வலிகளும் வேதனைகளும் சேர்ந்து அது பயிற்சித்தளமா வதைகூடமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அந்தளவுக்கு பயிற்சி பெறுபவர்கள் மீது அதிகாரிகளால் வன்மத்தைக் கக்க முடியும் என்று காட்டியிருப்பது இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத களம்.

விக்ரம் பிரபுவின் வெற்றி!

சிகரம் தொடு என்ற இரண்டாவது படத்திலேயே போலீஸ் அதிகாரியாக நடித்து வெற்றிக் கணக்கைத் தொடர்ந்தவர் விக்ரம் பிரபு. திரைக்கதைகளை தெரிவு செய்வதில் அவரது கவனம் கூர்மையாகியிருப்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது ‘டாணாக்காரன்’.

பயிற்சியில் நாட்கள் செல்லச் செல்ல உடல் இறுக்கமாகியிருப்பதை வெளிக்காட்ட மெனக்கெட்டிருப்பதும் இறுதிக்காட்சியில் உணர்ச்சிவசப்படும்போதும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்.

சந்தேகமேயில்லாமல் இத்திரைக்கதையின் இரு தூண்களாக விளங்குகின்றனர் மதுசூதன் ராவும் லாலும். முத்துப்பாண்டி, ஈஸ்வரமூர்த்தி எனும் பாத்திரங்களில் இருவரும் வந்துபோவது உண்மையிலேயே அப்படிப்பட்ட மனிதர்களை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

எம்.எஸ்.பாஸ்கர் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சம்பிரதாயமான வார்த்தை.

ஆனால், விக்ரம்பிரபு மைதானத்தில் தொடர்ந்து சளைக்காமல் பயிற்சிக்கு உட்படும்போது ‘அப்படிப்பட்ட ஆளா நீ’ என்று அசந்து உட்காருமிடத்தில் அவரது முகபாவனை ‘அடடடாடா’!

லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட், பாவெல் நவகீதன், லிங்கேஷ், மறைந்த நிதிஷ் வீரா, உதயபானு உட்படப் பலர் வந்து போகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இருக்கிறதென்றாலும் திரைக்கதையின் இடையே எவ்வித முன்கதையும் இல்லாமல் பாவெல் நவகீதன் விக்ரம்பிரபுவுடன் சேர்வதும், அவருடன் இருந்த லிங்கேஷ் சட்டென்று திரைக்கதையில் மறைந்து போவதையும் தவிர்த்திருக்கலாம்.

இவர்கள் தவிர சித்தப்பாவாக வரும் நபரும் முருகனாக வருபவரும் நம் மனம் கவர்கின்றனர்.

மிகக்குறைவான பெண் பாத்திரங்களே இடம்பெற்றுள்ள இத்திரைக்கதையில் ஈஸ்வரியாக வரும் அஞ்சலி நாயரின் பாத்திரம் திணிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவர் திரையில் வரும் காட்சிகள் இனிமையாக கையாளப்பட்டிருக்கின்றன.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு வறட்சியான பிரதேசத்தில் இருக்கும் பயிற்சிப் பள்ளியை சட்டென்று உணர வைப்பதோடு, அங்கிருப்பவர்களின் வாழ்வு தகிக்கும் வெயிலை விடவும் வெம்மையானது என்று சொல்லத்தக்க வகையில் சிவப்பு வண்ணத்தை தாங்கியிருக்கிறது.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு கடைசிகட்ட அணிவகுப்பு காட்சியில் ‘சபாஷ்’ போட வைக்கிறது. போலவே, இருபதாண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தைக் காட்டுவதில் திருமன் ராகவனும் தன் பங்கைக் கவனித்திருக்கிறார்.

கிப்ரான் இசையில் ’கட்டிக்கோடா’ பாடல் வெம்மையைப் பாய்ச்சும் திரைக்கதையில் குளிர்மை ஊட்டுகிறது என்றால், அதற்கு மாறாக உத்வேகம் கூட்டுகிறது ‘துடித்தெழு தோழா’.

சூழலின் ஒலிகளுக்கும் பாத்திரங்களின் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல இடங்களில் மவுனமே நிறைந்திருக்கிறது.

அதையும் மீறி, தேவையான இடங்களில் மிகச்சன்னமாக ஒலிக்கிறது பின்னணி இசை. அந்த திட்டமிடல் தான் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

வசனங்கள் ‘பஞ்ச்’களாக இல்லாவிடினும் மனதைத் தொடும் வகையில் யதார்த்தமாக அமைந்திருக்கின்றன.

இறுதிக்காட்சியில் போஸ் வெங்கட் வசனம் பேசப்பேச பின்னணியில் லிவிங்ஸ்டன் குரல் ஒலிப்பதாக காட்டுவது மனதைத் தொடும் ‘சென்டிமெண்ட்’ காட்சி!

சாதி வெறியும் போலீஸ் அதிகாரமும்..!

வெறுமனே காவலர் பயிற்சியை மட்டும் மையமாக வைத்துக்கொண்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து திரைக்கதை ஆக்கியதில் பெருவெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் தமிழ்.

காவலர் பணியில் சிலவற்றிற்கான காரணங்களுக்குப் பதில் இல்லாமல் இருப்பது விமர்சிக்கப்படும். அதற்கொரு உதாரணமாக அமைந்துள்ளது, ஒரு வேப்ப மரத்தினடியில் காவலர் ஒருவர் ‘பாரா’ டியூட்டி பார்ப்பதற்கு எம்.எஸ்.பாஸ்கர் பாத்திரம் சொல்லும் காரணம்.

போலவே, அரசுத் துறைகளில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் அடக்குமுறையைக் கையாள்வதையும் விமர்சிக்கிறது தமிழின் திரைக்கதை.

‘அவங்கிட்ட இருக்குற ஆள் பலமும் சாதி பலமும் நம்மகிட்ட இல்லையேப்பா’ என்று பாஸ்கர் பேசும் வசனம் காவல் துறையில் நிகழும் சில அத்துமீறல்களின் பின்னணியைப் புடம் போட்டு காட்டுகிறது.

காவல் துறையில் இருப்பவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே இருப்பார்கள் என்பதனை ‘டாணாக்காரன்’ மீண்டுமொரு முறை சொன்னாலும், அதற்கான அடிப்படையை ஒரு ‘முன்கதை’ கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதுவே பின்பாதி முழுமையையும் தாங்கி நிற்கிறது.

இயக்குனருடன் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சேர்ந்தியங்கியதன் மொத்த விளைவாகி இருக்கிறது இதனைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்.

பாதிக்கப்பட்டவர்களின் வலிகளைச் சுட்டிக்காட்டியோ, அவர்களது பின்னணியை காட்டுவதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வையும் சாதி வன்மங்களையும் பெரிதுபடுத்தியோ, நாயகனின் அறச்சீற்றம் மூலமாக அதற்கெதிராக கிளர்ந்தெள வேண்டுமென்ற உத்வேகத்தைத் தூண்டியோ இத்திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம்.

அவற்றில் இருந்து விடுபட்டு, வெறுமனே ஒரு சாதாரண மனிதன் காவல் துறை எனும் அதிகார அமைப்புக்குள் தேவையற்ற அலைக்கழிப்புகளுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாவதைச் சொன்ன வகையில் எடுத்துக்கொண்ட கருத்தை முழுமையாகச் சார்ந்திருக்கிறது ‘டாணாக்காரன்’.

இறுதியில், லால் பாத்திரம் என்ன செய்தது என்பதைச் சொல்லாமல் விட்டிருப்பது காவல் துறைக்குள் உயர்ந்து நிற்கும் அதிகார பீடங்கள் குறித்த பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது.

ஒட்டுமொத்தமாக, காவலர்கள் மட்டுமல்லாமல் அத்துறையின் வெவ்வேறு அதிகார மட்டங்களில் அளிக்கப்படும் பயிற்சிகளில், அப்பயிற்சி பெறுவோர் மனங்களில் விதைக்கப்படும் விஷயங்களில் மாற்றம் பாய்ச்சப்பட வேண்டும் என்று உணர்த்தியதற்காகவே இயக்குனர் தமிழ் மற்றும் குழுவுக்கு இனிய வரவேற்பைத் தரலாம்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like