உயிருடன் இருக்கும் போதே ‘இதய தெய்வம்’ என்று கட்சிக்காரர்களால் எம்.ஜி.ஆர். வர்ணிக்கப்பட்டவர்தான். ஆனால், அவருக்குக் கோவில் கட்டும் அசட்டுத் துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை.
இப்போது சென்னை பெரம்பூருக்கு அருகிலுள்ள ஜவஹர் நகரில் எம்.ஜி.ஆருக்கு ஒரு கோவில் எழுந்திருக்கிறது. ஒரு நாற்சந்தியின் ஓரத்தில் ஏழடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவில் இந்துக் கோவில்களைப் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது.
கோவில் விதானத்தின் இரு புறமும் கையில் அ.தி.மு.க. கொடியேந்தி மண்டியிட்டு அமர்ந்த நிலையிலிருக்கும் இரண்டு பெண்களின் சிலைகள் இருக்கின்றன.
கோவிலுக்குள் இரண்டடி உயரத்தில் கான்கிரீட்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலை நிறுவப் பட்டிருக்கிறது எம்.ஜி.ஆர் எப்போதும் அணிவது போன்ற சந்தன வண்ண சில்க் சட்டையும் கட்சியின் வண்ணங்களான கருப்பு, சிவப்பு, வெள்ளைக் கரையிட்ட வேஷ்டியும் எம்ஜிஆரின் சிலைக்கு தினமும் அணிவிக்கப்படுகிறது.
சிலையின் வலது கரத்தில் சட்டைக்கு மேல் கருப்பு நிற பிளாஸ்டிக் மற்றும் இடது கை மோதிர விரலில் ஒரு சிறிய மோதிரமும் கண்ணுக்கு கருப்புக் கண்ணாடியும் அணிவிக்கப்படுகிறது.
இரண்டு கைவிரல்களையும் கோர்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முறையான சடங்குகள் செய்து புரோகிதர்களால் அந்த கோவில் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இப்போது தினமும் முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி வந்து சமஸ்கிருதத்தில் மூன்று புரோகிதர்கள் பூஜை செய்கிறார்கள்.
இந்தக் கோவிலைக் கட்டி இருப்பவர் விஜயகுமார் என்ற எம்.ஜி.ஆர் ரசிகர் இந்த கோவிலை கட்டுவதற்கு 18 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கிறது.
தன்னுடைய சைக்கிளையும் தன் மனைவியின் கம்மலையும் அடகு வைத்து கிடைத்த பணத்தை கொண்டு முதலில் வேலையை ஆரம்பித்தார் விஜயகுமார். அவருடைய ஆர்வத்தை கண்டு மற்ற நண்பர்கள் உதவி செய்ய முன்வந்தார்கள்.
“விஜயகுமாருக்கு எம்.ஜி.ஆர். ஒருத்தர்தான் தெய்வம். அவன் வேற சாமி கும்பிடக்கூட மாட்டான்” என்கிறார் அவரது அம்மா பத்மா. “தெய்வங்கள் கூட தவறுகள் செய்திருக்கின்றன. ஆனால், மனிதராக இருந்தும தவறே செய்யாதவராக எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். அதனால் அவரைத் தெய்வமாகக் கும்பிடுகிறேன்” என்கிறார் விஜயகுமார்.
இந்தக் கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. அபிமானிகளிடமிருந்து ‘இதை இடித்து விடுவோம்’ என்று மிரட்டல் கடிதங்கள் வந்தன. கடிதங்களைக் காண்பித்தார் விஜயகுமார். கொச்சை மொழியில் ஆபாசமாக அவரையும், ஜெயலலிதாவையும் வசைபாடி எழுதப்பட்ட கடிதங்கள் அவை. கோவிலுக்குக் காலையிலும் மாலையிலும் பத்துப் பதினைந்து பேராவது வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கோவிலுக்கு வந்திருந்த பாப்பம்மாள் என்ற மூதாட்டியிடம் இதைப் பற்றிக் கேட்டபோது “மவராசன் எல்லோருக்கும் நல்லது செஞ்சாரு. அவரைக் கும்பிடுவதில் என்ன தவறு?” என்கிறார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக திராவிட இயக்கத் தலைவர்கள் சொல்வது வழக்கம். இப்போது ஏழைகள், தலைவர்கள் வடிவத்தில் இறைவனைக் காண்கிறார்கள்.
– நன்றி இந்தியா டுடே, ஏப்ரல் 1990.