பெருந்தன்மைக்கு உதாரணம் எம்.எஸ்.வி!

மாடர்ன் தியேட்டர்சிலிருந்து ஒரு பிரிவு காலி பண்ணிக் கொண்டு சென்னைக்குப் போனபோது லாரியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைக் கையைக்காட்டி ‘இவனை அழைத்துப் போங்கள். ‘ஜெனோவா’ படத்தில் ஹிட்டான பாடல்களுக்கெல்லாம் மெட்டமைத்தவன் இந்தப் பையன்தான்’ என்றாராம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

அதன்படியை அந்தப் பையனையும் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதை மனதில் வைத்துக்கொண்ட எம்.எஸ்.வி பாப்புலரான பிற்பாடு எஸ்.எம்.சுப்பையா நாயுடு மறைந்து போகிறார். நேராகச் சுடுகாட்டிலிருந்து எஸ்எம்எஸ்ஸின் மனைவியைக் கையோடு வீட்டிற்கு அழைத்துவரும் விஸ்வநாதன் தமது மனைவியைக் கூப்பிட்டுச் சொன்னாராம்,

“இதோ பார்…. இன்றுமுதல் இவர்கள் நம் வீட்டில்தான் இருக்கப்போகிறார்கள். சாகும்வரைக்கும் நான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். எனக்கு சாப்பாடு போடாவிட்டால்கூடப் பரவாயில்லை. இவர்களுக்கு சாப்பாடு போட்டு நீ கவனித்துக்கொள்ள வேண்டும்”

கடைசிவரைக்கும் அதன்படியே நடந்து அவர்களுக்கான ஈமக்கிரியைகளையும் அவர்தான் செய்தார்.

ஒரு படத்தில் கண்ணதாசன் மெஸ்ஸை நடத்துபவராக விஸ்வநாதன் நடித்தார். அதில் அவர் சம்பளம் வாங்கியதும் செய்த முதல் வேலை பணத்தில் சரிபாதியை ராமமூர்த்திக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்ததுதான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எம்.எஸ்விக்கு ஒரு விழா எடுத்தார். அதில்  பணமுடிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னபோது அவரிடம் விஸ்வநாதன் சொன்ன வார்த்தை ‘ராமமூர்த்தியையும் அழைத்தால் வருகிறேன்’

அப்படிப்பட்ட நற்குணம் கொண்டவர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி அவரது மகள் ஒரு பேட்டியில் சொன்னது;

“அப்பா ரொம்பவும் மனவருத்தப் பட்ட சமயம் என்றால், அது ஸ்ரீதர் தயாரித்து வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ பட வெளியீட்டின்போதுதான்.

“ஸ்ரீதரே என்னை விட்டுவிட்டார்” என்று வருத்தப்பட்டவர், காலை டிபனைக்கூட சாப்பிடவில்லை. போய் அவரது அறையில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.

நாங்களெல்லாம் பயந்துவிட்டோம். மதியம் ஒரு மணி இருக்கும், கதவைப் படாரென்று திறந்துகொண்டு அவரே வெளியே வந்தார்.

“இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் எப்படி? நான் அறிமுகமானபோது இதே போலத்தானே நடந்திருக்கும்? அப்போது இன்னொரு இசையமைப்பாளர் கவலைப்பட்டிருப்பார் இல்லையா?” என்றார். இதுதான் அப்பாவின் குணம்” என நெகழ்ந்து கூறினார்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like