இந்தித் திணிப்பு: மீண்டும் கொளுத்திப் போடாதீர்கள்!

மொழிப்பிரச்சினை எப்போதும் கூர்முனையுள்ள வாள் மாதிரி.

கவனமாகக் கையாளவில்லை என்றால் அதைத் தூக்கியவர்களைப் பதம் பார்த்துவிடும்.

பா.ஜ.க உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா அதைத் தான் செய்திருக்கிறார். ஆங்கில இணைப்பு மொழிக்கு மாறாக இந்தி இருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இத்தகைய பேச்சின் விளைவு  உள்துறை அமைச்சருக்குத் தெரியாததல்ல.

தற்போது ஆட்சி மொழிகளாக இருக்கும் பல மொழிகளில் இந்தியை மட்டும் தேர்ந்தெடுத்து அதை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க முயற்சித்தால், இங்குள்ள மற்ற மொழிகளுக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது? அதைப் பேசுகிறவர்களுக்குத் தான் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?

தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம்.

இந்தியாவின் தொன்மை மொழியான தமிழின் பெருமையை அடிக்கடி சிரமப்பட்டு மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பல தடவை பேசி வந்ததன் அர்த்தம் தான் என்ன?

கீழடி அகழாய்விலும் தமிழின் தொன்மை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மறைக்க எத்தனை முயற்சிகள் நடந்தன?

ஆங்கிலேயே ஆட்சியில் தமிழ் படித்தவர்கள் தங்கள் பெயரையே தமிழுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கல்லறையில் தன்னை ஒரு ‘தமிழ் மாணவன்’ என்று எழுதப் பெருமைப்பட்டிருக்கிறார்கள்.

கால்டுவெல் போன்றவர்கள் தென்னிந்தியாவில் உள்ள மொழிகளை எல்லாம் ஆராய்ந்து தமிழே திராவிட மொழிகளில் மூத்த மொழி என்று நிறுவிவிட்டுப் போயிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? பல மொழிகளைக் கற்ற மகாத்மா காந்தி ஆர்வத்துடன் கற்றுக் கொண்ட மொழிகளில் ஒன்று – தமிழ்.

ஆனால் காந்திக்கு இருந்த இந்தப் புரிதல் ஆட்சிக்கு வந்த காங்கிரசுக்கு அன்றைக்கு இல்லை.

இராஜாஜி வலிந்து இந்தியைத் திணிக்க முற்பட்டார். எதிர்ப்புக் கிளம்பி வலுத்த பிறகு அதே ராஜாஜி பின்வாங்கினார்.

அறுபதுகளில் நேரு இந்தியைத் தணிக்க பல வழிகளில் முயற்சித்தார். தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் துவங்கியது. மொழி மீதுள்ள பற்றினால் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்ட வரலாறு தமிழ்நாட்டில் தான் நடந்தது.

சிறையில் மாய்த்துக் கொண்டார்கள். விஷம் அருந்தி இறந்தார்கள். தீக்குளித்துப் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்கள்.

இப்படி உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். பிரச்சினை ஐ.நா.சபை வரை போனது. சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்தி எழுத்துக்கள் தாரால் அழிக்கப்பட்டன. இந்தித் திணிப்பால் இந்தி மொழி அரக்கியாகச் சித்தரிக்கப்படுவது நடந்தது.

சென்னை மாகாணத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் மொழிப் போராட்டத்தின் தீவிரத்தை மிக மிகத் தாமதமாகவே புரிந்து கொண்டது. அதன் பிறகே பிரதமர் நேரு “இந்தியை விரும்பாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மாட்டோம்” என்று உறுதிமொழி கொடுத்த பிறகே மொழிப் போராட்டம் அடங்கியது.

அதன் பிறகு 1967 இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்ந்தது தான். இன்றுவரை அது தேய்ந்து கொண்டே வந்து மரம் செடியாகிப் போனது.

காங்கிரசின் மதிப்பு மிக்கத் தலைவரான காமராஜரை 1967 விருதுநகர் சட்டமன்றத் தேர்தலில் மாணவர் தலைவர்களில் ஒருவரான பெ.சீனிவாசன் ஜெயித்து பெரும் அரசியல் மாற்றத்தையே நிகழ்த்த முடிந்தது.

காரணம் என்ன?

மாநிலங்களின் தனித்த மொழியுணர்வை அன்றைக்குக் காங்கிரஸ் புரிந்து கொள்ளாமல் போனது தான்?

நூற்றாண்டைக் கண்ட காங்கிரசுக்கு அந்தக் கதி என்றால் – ஜனசங்கமாக முளைத்து பா.ஜ.க.வாகக் கிளைவிட்ட கட்சியின் நிலைமை என்ன?

மொழிப் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த தவறிலிருந்து பா.ஜ.க பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டில் வளர முயற்சிக்கும் பா.ஜ.க எந்த நிலைக்குப் போகும்?

பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு அவ்வப்போது தமிழ் மேற்கோள்களைத் தேர்வு செய்து கொடுக்கும் உரைப் பின்னணியாஏர்களும் முக்கியமாக இந்த மொழிச் சிக்கலை இங்கிதமாகச் சொல்ல வேண்டும் – அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருந்தால்.

மீண்டும் அமித்ஷாவுக்கு வருவோம்.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திக்கு அழுத்தம் கொடுத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பலாம்,

ஏற்கனவே ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என்னவிதமான வேகத்துடன் ஒன்று சேர்ந்து வீர்யத்துடன் போராடினார்கள் என்பதும் தற்போதிருக்கிற ஒன்றிய அரசுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை போன்றவர்களுக்குத் தமிழ்நாட்டு மொழிப் போராட்ட வரலாற்றை முறையாகத் தெரிந்து கொண்டு உரிமை இருந்தால், தலைமைக்கு உணர்த்த வேண்டும்.

மொழிப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழ்நாடு ஒரு கந்தக பூமி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

-யூகி

You might also like