ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கம்!

– இந்தியா வழக்கம் போல் புறக்கணிப்பு

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளன.

ஆனால், பின்வாங்குவதற்கும் முன்பாக அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதுடன், அப்பாவி மக்களை கை, கால்கள் கட்டி சித்ரவதை செய்தும், துப்பாக்கியால் சுட்டும், பலாத்காரம் செய்தும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, புச்சா மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ரஷ்ய படைகள் தங்கியிருந்த குடியிருப்பு அருகில் உள்ள பைன் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது,

“ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளது. எனவே, விரைந்து செயல்படுங்கள். இல்லையென்றால் ஐ.நாவை கலைந்து விடுங்கள்” என்று ஆதங்கத்தோடு பேசினார்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முக்கிய உறுப்பினராக ரஷ்யா இருந்து வரும் நிலையில், புச்சா நகரில் ரஷ்யப் படைகள் பொதுமக்களைக் கொன்று குவித்ததைத் தொடர்ந்து, இந்த அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்கும்படி ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இதன் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடந்தது. இதில், தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. இதையடுத்து, மனித உரிமை அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் வழக்கம் போல் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

08.04.2022  12 : 30 P.M

You might also like