இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை, பின்னர் அந்த கடனைக் கட்ட முடியாமல் திணறுகிறது.
இந்தச் சூழலால், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.
இதனை தொடர்ந்து இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபயா ராஜபக்சே நியமித்தார்.
ஆனாலும், அதிபர் கோத்தபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அதிபர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் பேசிய கோத்தபயா, “அதிபர் பதவியில் இருந்து தான் விலகப்போவதில்லை. எந்தக் கட்சி பெரும்பான்மையை (113 உறுப்பினர்கள்) நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை கொடுக்க தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை இணை அமைச்சர் பதவியை ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.