நிலக்கரிச் சுரங்கத்தில் மீன் வளர்ப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளார்கள்.

உள்ளூர் மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். சிசிஎல் எனப்படும் மத்திய நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் மீன் வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

சுரங்கத் திட்டங்களுக்காக நிலத்தை இழந்த மக்கள், சிசிஎல் நிறுவனத்தின் தடையில்லா சான்றிதழைப் பெற்ற பிறகு மீன் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினர்.

தற்போது நான்கு நிலக்கரிச் சுரங்கங்களில் மீன் வளர்க்கப்படுகிறது. அடுத்து மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியுதவியின் மூலம் மற்ற இடங்களிலும் அது நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, குறிப்பிடத்தக்க வகையில் பல சுரங்கங்கள் நிலக்கரியைப் பிரித்தெடுத்த பிறகு பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாக மாறியுள்ளது.

இந்தத் தொழில் மாதிரி ஸ்கோச் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சிறந்த கண்டுபிடிப்புப் பிரிவில் பிரதமர் விருதுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது.

மீன் வளர்ப்புக்கு ஏற்றதாக இருந்தால் மற்ற நிலக்கரிச் சுரங்கங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு ராம்கர் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

நிலக்கரிச் சுரங்கத்தில் கரிக்கப்பட்ட தண்ணீரை இதைவிடச் சிறப்பாகப் பயன்படுத்த முடியாது என்கிறார் ராம்கர் துணை ஆணையர் மாத்வி மிஸ்ரா.

“சட்டவிரோத சுரங்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள், மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் பயன்படுத்தப்படுகின்றன.

அரா நிலக்கரிச் சுரங்கத்தில் மீன் வளர்ப்பின் வெற்றியைப் பார்த்து, மற்ற நிலக்கரிச் சுரங்கங்களில் வசிக்கும் பலர் மிகவும் உத்வேகம் அடைந்துள்ளனர்.

ராம்கர் முதன்மையான நிலக்கரி சுரங்க மாவட்டமாக இருப்பதால், இந்த யோசனையைப் பின்பற்றுவதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்” என்று விவரிக்கிறார் மாத்வி மிஸ்ரா.

நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் மாற்று வருமானம் இல்லாததால், உள்ளூர் மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை இந்த திட்டம் உருவாக்கியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சுரங்கங்கள், மீன் வளர்ப்புக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன. அதனால் நீரின் தரமும் மேம்படுகிறது.

பா. மகிழ்மதி

You might also like