தினசரிகளுக்கு தீனி போடுபவரின் பராக்கிரமங்கள்!

ஒரு படத்தின் போஸ்டர் டிசைன் டீசர், ட்ரெய்லர் என ஒரு படம் குறித்த எதிர்பார்ப்புகளும் அதனைத் திரையில் கண்டு களித்த பின்னர் உருவாகும் திருப்தியும் ஒன்றாக இருப்பது அரிது.

இரண்டும் வெவ்வேறாகத்தான் இருக்குமென்பதை முன்னரே புரிய வைக்கும் வகையில் சில விஷயங்களைத் தந்து, ‘நான்தான் சொன்னேன்ல’ என்று புன்னகைக்கும் இயக்குனர்களும் உண்டு.

‘மன்மத லீலை’ மூலமாக அப்படியொரு அனுபவத்திற்கு நம்மை ஆளாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் கூட்டணியில் 1976இல் வெளியான ‘மன்மத லீலை’யை மனதில் நினைத்துக்கொண்டு ’மன்மத’ பாடம் கற்கும் எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தால், வேறொரு உலகை நமக்கு காட்டுகிறார்.

அது நமக்கு திருப்தி அளிக்கிறதா என்பதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் வெற்றி.

மன்மதனும் லீலைகளும்..!

பார்க்கும் பெண்களை எல்லாம் தனது வலையில் விழ வைக்கும் முயற்சிகளில் இறங்குபவர் சத்யா (அசோக் செல்வன்). காஸ்ட்யூம் டிசைனர் ஆவது அவரது லட்சியம்.

இளமைப் பருவத்தில் ‘சாட்’ மூலமாக பூரணி (சம்யுக்தா ஹெக்டே) என்ற பெண் அவருக்கு அறிமுகமாகிறார். வெறுமனே எழுத்துகளின் வழியே படரும் நட்பு, ஒருநாள் நேரில் சந்திக்க வைக்கிறது.

தனது தந்தை (ஜெயபிரகாஷ்) வெளியூர் போயிருக்கிறார் என்று சொல்லி சத்யாவை வீட்டுக்கு வரவழைக்கிறார் பூரணி. இக்கதை 2010இல் நடக்கிறது.

அதே சத்யா, 2020இல் மனைவி அனு (ஸ்மிருதி வெங்கட்), மகள் (ஆலியா) சகிதம் அமைதியான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்.

அவருக்குச் சொந்தமான ’பொட்டிக்’ சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிளைகளைக் கொண்டிருக்கிறது.

மாமனார் வீட்டுக்கு மனைவியும் மகளும் செல்ல, தனது வேலைகளில் மூழ்கிப் போகிறார் சத்யா. அப்போது, அவரது வீட்டு வாசலில் லீலா (ரியா சுமன்) என்ற பெண் வந்து நிற்கிறார்.

மழையில் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட வந்திறங்கும் லீலாவைப் பார்த்ததும் சத்யாவின் மனதில் சபலம் பிறக்கிறது. அதன்பின், அவரை வீட்டுக்குள் அழைத்துவரும் சூழல் உருவாகிறது.

இரண்டு கதைகளிலும் சத்யாவின் சபலம் அம்பலப்படும் நிலை ஏற்படுகிறது. முதலாவதில், பூரணியின் தந்தை வீடு திரும்புகிறார். இரண்டாவதில், சத்யாவின் மனைவி அனு குழந்தைக்குத் தேவையான பொம்மைகளை எடுக்க வீட்டுக்கு வருகிறார்.

இரு வேறு காலங்களைக் காட்டிலும், சத்யா அப்பெண்களை எதிர்கொள்ளும் விதம் ஒன்றுபோலவே உள்ளது. போலவே, இரண்டுக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பும் உண்டு.

அது என்ன, சத்யாவின் ஏமாற்றுத்தனம் வெளியே தெரிய வந்த்தா என்பதை தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

தியேட்டரில் படம் பார்த்தபோது பெரும்பாலானோருக்கு கிளைமேக்ஸில் திருப்தி இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, ஜோடிகளாக வந்தவர்களில் பல பெண்கள் அது மட்டுமே படத்தின் குறை என்று முனுமுனுத்தது நம் காதுகளில் தெளிவாகக் கேட்டது.

படத்தின் கிளைமேக்ஸையோ, மீதமுள்ள கதையையோ சொல்வது ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், முன்னரே சொன்னது போல தன் படத்தின் டைட்டில் டிசைன் வழியாகவே வெங்கட்பிரபு முழுக்கதையையும் சொல்லிவிட்டார் என்பதுதான் உண்மை.

அது மட்டுமல்லாமல், ‘பிளேபாய்’ என்று சொல்லிக்கொள்ளும் பலர் ‘கோகுலத்தில் சீதை’ படத்தில் வரும் கார்த்திக் பாத்திரம் போன்று ஏமாற்றுத்தனம் இல்லாமல் இருப்பதில்லை என்பதையும் ‘புட்டு புட்டு’ வைத்திருக்கிறார்.

அந்த வகையில், ‘சைக்காலஜிகலாக’ நுட்பமான சில விஷயங்களை இன்றைய தலைமுறை பெண்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஆனால், எதிர்மறையாக அவர் திரைக்கதையில் வைத்திருக்கும் ‘மங்காத்தா’ டைப் விஷயங்களுக்கு மட்டுமே விசில்களும் கைத்தட்டல்களும் கிடைக்கின்றன. என்ன கொடுமை சார் இது..!

அசோக்செல்வனா இது..!

மூன்று நாயகிகள் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் நிறைந்திருப்பது சம்யுக்தா ஹெக்டேதான். திரைக்கதையில் ‘ஸ்கோர்’ செய்பவரும் அவரே.

அதேநேரத்தில் ரியா சுமன் அதீத கவர்ச்சியில் சுண்டியிழுக்க, மாடர்ன் குத்துவிளக்காக வந்து மனதில் இடம்பெறுகிறார் ஸ்மிருதி வெங்கட்.

இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம் ஜெயப்பிரகாஷ். அவரது பாத்திரத்தை ‘ட்ரெய்லர்’ பார்த்தவுடனே யூகித்துவிட முடியுமென்றாலும், ஒரு நூல் பிசகாத அளவுக்கு ‘மிகப்பொருத்தமாக’ தன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

கவுரவ வேடத்தில் வரும் பிரேம்ஜி, கருணாகரன், சந்திரமவுலி போன்றோருக்கு அளவான இடம் திரையில் கிடைத்திருக்கிறது.

இவர்களனைவரையும் தாண்டி ‘மன்மதலீலை’யின் நாயகனான அசோக் செல்வனுக்குதான் தியேட்டரில் அபாரமான வரவேற்பு.

‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’, ’நின்னிலா நின்னிலா’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு டஜன் படங்களில் நாம் பார்த்தவரா இவர் என்று கேட்குமளவுக்கு ‘மன்மத லீலை’யில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, குடும்பஸ்தராக காட்டப்படும் காட்சிகளில் அசோக் செல்வன் உடல்மொழி அருமை.

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும், திரையில் பார்க்கும்போது அலுப்பூட்டாத வண்ணம் அமைந்திருக்கிறது தமிழ் அழகனின் ஒளிப்பதிவு.

குறிப்பாக, ரியா சுமன் வரும் காட்சிகளில் ‘காமத்தீ’ பற்றினாலும் திரையில் அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உமேஷின் கலையமைப்பு அதற்கு பெருமளவில் உதவியிருக்கிறது.

இருவேறு காலகட்டங்களில் கதை நிகழ்வதாக காட்டப்பட்டாலும், அதனைப் புரிந்துகொள்வதில் ‘பிசகு’ ஏற்படாதவாறு திரையில் தொகுத்தளித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன்.

காட்சியமைப்பு, வசனம் தாண்டி பின்னணி இசை மூலமாகவும் சிரிப்பூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்.

சம்யுக்தா ஹெக்டேவையும் ரியா சுமனையும் மாறி மாறி திரையில் காட்டும்போது அசோக் செல்வனின் உணர்வுகளைக் காட்டுமிடத்தில் ஒலிக்கும் இசையே அதற்கொரு உதாரணம்.

ஆனால், சில இடங்களில் மட்டும் இசையின் அளவு அதிகமாக நிரம்பி வழிகிறது.

கிளுகிளுப்பூட்டும் முதல் பாதி பின்னணி இசையே, இறுதிக்காட்சிகளில் திரைக்கதையில் திருப்பங்கள் வரும்போது நம் மனம் அதனை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது.

இதையெல்லாம் மீறி, யுவனுக்கு ஒரு ‘தீனா’ போல பிரேம்ஜிக்கு ஒரு படம் அமையவில்லையே என்ற வருத்தமும் நம்மைத் தொற்றுகிறது.

இரு வேறு காலங்களில் நிகழும் கதைகளை வசனம், பொருட்கள், காலச்சூழல், காட்சியமைப்பு வழியே தொடர்படுத்தி திரைக்கதை அமைத்த வகையில் நம்மை இருக்கையை விட்டு எழாமல் கட்டிப் போட்டிருக்கிறார் எழுத்தாக்கம் செய்திருக்கும் மணிவண்ணன் பாலசுப்பிரமணியம்.

வெங்கட்பிரபுவின் நுட்பங்கள்..!

பெண்களைத் தேடித் தேடி வலையில் வீழ்த்துபவர்கள், அதற்காக சகலவிதமான சூதுகளையும் சூழ்ச்சிகளையும் பொய்களையும் ஏமாற்றுத்தனங்களையும் மேற்கொள்வார்கள் என்ற ‘தியரி’ ஜெமினி கணேசனின் ‘நான் அவனில்லை’ காலத்திலேயே சொல்லப்பட்டு விட்டது.

அப்படிப்பட்டவர்கள் தங்களது மனைவியை தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்வார்கள் என்ற கேள்வி சமூகத்தில் உண்டு.

இக்கதையில் அனுவை சத்யா அணுகும் விதத்தில் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு.

பூரணியின் காதல் எப்படிப்பட்டது என்பதோடு, அவரது முன்கதை எப்படிப்பட்டது என்பதையும் விளக்கியிருக்கிறார். அழகையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தி ‘பிளேபாய்’ ஆக இருக்கும் சத்யாவுக்குள்

‘அஞ்சாதே’வில் வரும் பிரசன்னா பாத்திரம் போன்று பல குயுக்திகளும் சொல்லப்படாத உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன என்பதையும் தொடக்க காட்சியில் பிரேம்ஜி, கருணாகரனுடன் அசோக் செல்வன் ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களைச் சொல்வதிலேயே வெளிப்படுத்திவிடுகிறார்.

தினசரிகளில் அடிக்கடி இடம்பெறும் ‘காதல் மன்னன்’ லீலைகள் என்பது போன்ற செய்திகளைத் தேடுபவர்களுக்கு தீனி போடும் பாராக்கிரமங்களாகவே அப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, சமூகத்தில் ‘பிளேபாய்’ ஆக நம் முன்னே உலாவும் பலரது கடந்த காலம் குறித்து கேள்வி எழுப்ப வைத்திருப்பது ‘மன்மத லீலை’யின் வெற்றி.

அதோடு பண்ணை வீடு, சாட்டிங், டேட்டிங் என்று வாழ்க்கையை காமக்களியாட்டமாக மட்டுமே பார்ப்பவர்களின் இன்னொரு முகத்தையும் நமக்கு காட்டுகிறார்.

ஆனாலும், ‘பிரியாணி’யில் வரும் கார்த்தியை எதிர்பார்த்தவர்களுக்கு இப்படத்தில் அசோக்செல்வன் வழியே கொஞ்சம் அதிர்ச்சியையே தருகிறார் இயக்குனர்.

அதுதான் ‘வெங்கட்பிரபுவின் இயக்கம்’ எனும் முத்திரையின் அழுத்தத்தைக் குறைத்திருக்கிறது.

அதே நேரத்தில், வழமையான திரை அனுபவத்தை தராத காரணத்திற்காக அவரைப் பாராட்டவும் வேண்டியிருக்கிறது.

ஆங்கில பட இன்ஸ்பிரேஷனா..?!

பார்க்கும் படங்களில் இருந்து ‘இன்ஸ்பிரேஷன்’ பெற்று வேறொரு கதையை யோசிப்பது தனித்திறமை.

அந்த வரிசையில், 2015இல் கீனு ரீவ்ஸ் நடிப்பில் வெளியான ‘நாக் நாக்’ (KNOCK KNOCK) படத்தின் ’கதை முடிச்சை’ எடுத்துக்கொண்டு வெங்கட்பிரபு தந்திருக்கும் QUICKIE தான் ‘மன்மத லீலை’.

அவரோ, கதையை வடிவமைத்த மணிவண்ணனோ சொன்னால் மட்டுமே இது உண்மையா இல்லையா என்பது தெரியவரும். அதுவரை, இது எனது சொந்தக் கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..!

-உதய் பாடகலிங்கம்

03.04.2022

You might also like